இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான காவலூர் இராஜதுரை அவுஸ்திரேலியா சிட்னி நகரில் 14 -ம் திகதி (14 – 10 – 2014) செவ்வாய்க்கிழமை மாலை காலமான செய்தி மனவருத்தத்தைத் தருகிறது. பொதுசனத் தொடர்புத் துறையில் ஈடுபடுவோர் பலர். ஆயினும், அத்துறையின் பலத்தையும் பலவீனத்தையும் மட்டுமல்ல, அதன் நுட்பங்களையும் உணர்ந்து, தம் முத்திரை பதிப்போர் ஒரு சிலரே. அந்த ஒரு சிலருள் ‘பல்கலைவேந்தர்” சில்லையூர் செல்வராசன், காவலூர் இராஜதுரை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இருவரும் இரட்டையர்கள் போன்று மிகுந்த நட்புடன் இயங்கி வந்தவர்கள். ‘விளம்பரத்துறை” என்ற தனது நூலில், ‘விளம்பரத் துறையில் சில்லையூர் செல்வராசன்” என்ற தலைப்பில் காவலூர் இராஜதுரை எழுதியுள்ள கட்டுரை ஊடகத்துறையில் ஈடுபடுவோர்க்கு விளம்பரத்துறை குறித்த தகவல் தரும் சிறந்ததோர் கட்டுரையாகும்.
காவலூர் இராஜதுரையின் கதை வசனத்தில் அவரது மைத்துனர் தயாரித்து புகழ்பெற்ற இயக்குனர் தர்மசேன பத்திராஜா இயக்கிய ‘பொன்மணி” திரைப்படம் இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களில் கவனத்திற்குரியதாகும். சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத் தயாரிப்பின்போது யாழ்நகரில் காவலூர் இராஜதுரையோடு சில நாட்கள் செயற்பட்டமை ஞாபகத்தில் நிற்கிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக எழுபதுகளில் அவர் கடமையாற்றியபோது ‘கிராமவளம்” மற்றும் கிராமிய நிகழ்ச்சிகளுக்காக, அவருக்கு உதவியாக நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு முதல் வடபகுதியின் பல கிராமங்களுக்கும் சென்று ஒலிப்பதிவுகளை மேற்கொண்டமையும், புங்குடுதீவில் எங்கள் வீட்டில் அவர் தங்கியிருந்து ‘பொன்மணி” திரைப்படத் தயாரிப்புக் குறித்தும் கலை இலக்கிய விடயங்கள் குறித்தும் நிறையவே பேசிக்கொண்டமையும் இன்றும் மனதில் பசுமையாக இருக்கின்றது.