கலை , இலக்கியம், வானொலி, தொலைக்காட்சி, சினிமா, நாடகம், மற்றும் விளம்பரம் முதலான துறைகளில் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி நீண்ட காலமாக இயங்கிய காவலூர் ராஜதுரையின் மறைவு ஈடுசெய்யப்பட வேண்டிய இழப்பு என்று அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம். தமது பூர்வீக ஊருக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தனது இயற்பெயருடன் ஊரின் பெயரையும் இணைத்துக்கொண்டு நீண்ட நெடுங்காலமாக கலை, இலக்கியம் சார்ந்த பல்வேறு துறைகளில் தனது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்திவந்த காவலூர் ராஜதுரை தமது 83 வயதில் அவுஸ்திரேலியா சிட்னியில் காலமாகிவிட்டார் என்பதை அறிந்து எமது சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம். காவலூர் ராஜதுரை இலங்கையில் மட்டுமல்ல அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தாம் சார்ந்திருந்த துறைகளில் ஆக்கபூர்வமாக உழைத்தவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப்பொறுத்தவரையில் நான்கு தலைமுறைகாலமாக அவர் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளை வழங்கியவர். சிறுகதை, விமர்சனம், நாடகம், வானொலி ஊடகம், இதழியல், திரைப்படம், தொலைக்கட்சி, விளம்பரம் முதலான பல்வேறு துறைகளில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்துள்ளார்.
தமிழ் எழுத்துலகில் பெண் எழுத்தாளராக புகழுடன் வலம் வந்த ராஜம் கிருஷ்ணன் திங்கள் கிழமை இன்று இரவு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90. 1925ல் திருச்சிக்கு அருகே உள்ள முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருடன் திருமணமானது. பள்ளி சென்று முறையான கல்வி பயிலாவிடினும், மின் பொறியாளரான கணவர் உதவியால் புத்தகங்களைப் படித்து, தாமே கதைகள் எழுதத் துவங்கினார். 1970ல் தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையைக் கண்டு ‘கரிப்பு மண்கள்’ என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் ‘டாகுமான்சி’யை சந்தித்து, அதன் விளைவாக ‘முள்ளும் மலரும்’ என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை உள்ளிட்ட சமூக அவலங்கள் குறித்து எழுதியுள்ளார். கலைமகள் இதழில் கதைகள் பல எழுதியுள்ளார். அதன் ஆசிரியர் கி.வா.ஜகன்னாதனால் எழுத்துலகில் வளர்க்கப்பட்டவர். 1953ல் கலைமகள் விருது, 73ல் சாகித்ய அகாதெமி விருது, 91ல் திருவிக விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் தம் 90ம் வயதில் காலமானார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் முதுமையில் வறுமையால் வாடிய சென்னையில் விஷ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் தங்கினார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று இரவு அவர் காலமானார்.
நன்றி: http://www.dinamani.com