– தன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் முடிவு செய்து, சனிக்கிழமையன்று நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முன் அவர் தன் அம்மாவிற்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு. – ஜெனி டொலி
அன்புள்ள ஷோலே, கிசாசை (இரானிய தண்டனைச் சட்டம்) நான் சந்திக்க வேண்டிய நாள் இது தான் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். என் வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசி தாளை நான் அடைந்ததை நீயே என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று எனக்கு வேதனையாக இருக்கிறது. எனக்கு தெரிய வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது தெரியுமா? உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும் நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை? இந்த உலகம் என்னை 19 வருடம் வாழ அனுமதித்திருக்கிறது. அந்த துர் இரவில் நான் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என் உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் எறியப்பட்டிருந்திருக்கும். சில நாட்கள் கழித்து என் உடலை அடையாளம் காண உன்னை கரோனரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அப்போது தான் நான் பலாத்காரம் செய்யப்பட்டதையும் நீ அறிந்திருப்பாய். என்னைக் கொன்றவனை என்றைக்குமே கண்டுபிடித்திருக்க முடியாது. அவர்களிடம் உள்ளது போன்ற செல்வமும், அதிகாரமும் நமக்கில்லையே. அதன் பிறகு அவமானத்தோடும். வலியோடும் உன் வாழ்வை நீ தொடர்ந்திருப்பாய். அப்புறம் சில ஆண்டுகளில் இந்த வலியினால் நீ இறந்து போயிருந்திருப்பாய். அத்தோடு எல்லாம் முடிந்திருக்கும்.