வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்!

உமாமஹேஸ்வரி- வெங்கட் சாமிநாதன் -உமா மஹேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் முழுக்க முழுக்க வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய, சிறைப்பட்ட, சில சமயம் சுவர்களில் பதிந்த ஜன்னல் வழி வெளியே எட்டியும் பார்க்கும் பெண்களின் உலகம் தான். அனேகமாக, அவர் எழுதும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எல்லாமே இம்மாதிரி அடைபட்ட பெண்களின் உலகத்தைத் தான் நமக்குச் சொல்கிறது. அவர்களின் யதார்த்த உலகம் தான் சம்பிரதாய, சமூக கட்டுப்பாடுகளில் கட்டுப் பட்டதே ஒழிய, அவர்களில் சிலரது மனஉலக வியாபகம் அப்படி சிறைப்பட்டதில்லை. அந்த ஜன்னல் மூலம் காணும் காட்சிகள் தரும் அர்த்தங்கள் நமக்குச் சொல்லப்படுவதில்லை. காட்சிகளின் சித்திரத்தோடு நிற்பவை உமா மஹேஸ்வரியின் எழுத்துக்கள். அவை சொல்லாமல் சொல்லும் அர்த்தங்களை உணர்வது நம்மைப் பொறுத்தது.

நான் உமா மஹேஸ்வரியை முதலில் அறிந்தது யாரோ ஒரு மஹி என்னும் புதிய வருகையாகத் தான். 2000 ஆண்டிலோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டிலோ தில்லியிலிருந்து சென்னைக்குக் குடிமாறிய புதிது.  கதா பரிசுக்கான சிறுகதையைத் தேர்வு செய்ய பணிக்கப்பட்டு ஒரு வருடத்திய எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் என் முன் குவிக்க;ப்;பட்டன. மலையைக் கெல்லும் விவகாரம் தான். இதை ரொம்ப தூரம் நீட்ட வேண்டாம். அகப்பட்டது பழமொழி சொல்லும் எலி அல்ல. இப்போது உமா மஹேஸ்வரி என்னும் பொருட்படுத்த வேண்டிய பெண் எழுத்தாளராக வளர்ந்து முன்னிற்கும் அன்றைய மஹி. அன்று யாரோ ஒரு மஹி. கணையாழியில் வெளிவந்த ஒரு கதை என்று நினைவு.  தலைப்பு மறந்துவிட்டது. கதை வீட்டின் மலக்கிடங்கை சுத்தப்படுத்த அழைக்கப்பட்டவர்கள் அவர்கள் காரியத்தைக் காணும், அவர்கள் வாழ்க்கையின் அவலம். பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை தலித் மக்களை இந்த அவலத்துக்குத் தள்ளிய சமூகத்தின் கொடூரத்தை கன்ணாடி போல பிரதிபலித்து சமூகத்தின் முன்னிறுத்திய பணியைச் செய்த முற்போக்கு எழுத்தாளர் போராட்டமாக மஹியோ, இதை வெளியிட்ட பத்திரிகையோ (கணையாழி தானா?) அல்லது இதைக் கதா பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நானோ, பரிசு அளித்த கதா நிறுவனமோ முரசு கொட்டி, பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை, மஹிக்கு இது ஒரு நாள் அனுபவம். நன்றாகச் சொல்லத் தெரிந்திருக்கிறது. எழுதவும் தெரிந்திருக்கிறது. இதுவும் ஒரு கதைப் பொருளா? என்று தயங்கி யோசிக்கவும் இல்லை. இதைக் கதையாக எழுதினால் முற்போக்கு அணியில், அல்லது தலித் அணியில் சேர தகுதிப் பத்திரமாகும் என்றும் தயார்படுத்திக் கொள்ளவுமில்லை. தனக்கு தெரிந்த ஒரு அனுபவம். இப்படியும் ஒரு பிழைப்பா, வாழ்க்கையா என்று  அடி மனம் வருந்தியது. அவ்வளவே. கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டிக்காரர் முல்க்ராஜ் ஆனந்த் முதன் முதலாக எழுதுவது Untouchable. என்ன பெருமை தேடி? முன்னணி கலா ரசிகர், தன் இயல்பில் தான் உணர்ந்ததை எழுதுகிற காரியம். இருவரும் குழந்தைகள் உலகையும் எழுதியிருக்கிறார்கள். மஹிக்கோ இதுவும் சுவர்களுக்குள் அடைபட்டு இருந்தே பார்த்து அறிந்த உலகம் தான்.

Continue Reading →