அம்மா தனித்துப் போயிருந்தாள். இடம் பெயர்ந்தபோது பக்கத்து வீட்டு பரிமளம் அன்ரியுடன்தான் அம்மாவும் சென்றதாகச் சொன்னார்கள். பரிமளம் அன்ரிக்கு அம்மா மீது ஒரு வகை பாசம் இருந்தது. அவர்கள் கடைசியாகச் சாவகச்சேரியில் தங்கியிருந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. அப்படி என்றால் சாவகச்சேரி வரைக்கும் அம்மா நடந்துதான் போயிருப்பாளா? விமானக் குண்டு வீச்சு, ஷெல் தாக்குதல் என்று தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த போது தான் அம்மா காணாமல் போயிருந்தாள். உறவுகளைப் பிரிந்து திக்குத் திக்காய் எல்லோரும் ஓடிப்போயிருந்தனர். தெரிந்த இடமெல்லாம் அம்மாவைத் தேடிப் பார்க்கச் சொல்லியிருந்தேன். யாராவது வயது போன பெண்கள் அனாதையாக இறந்து போயிருந்தால் கூட அவர்களைப் பற்றி எல்லாம் விசாரித்திருந்தேன். கனடாவில் இருந்து கொண்டு பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பால் இருக்கும் எனது நாட்டில் அம்மாவைத் தேடுவதென்பது இலகுவான காரியமாக இருக்கவில்லை.
அப்போதிருந்த நாட்டுச் சூழ்நிலை காரணமாக என்னால் அங்கு செல்ல முடியாமல் இருந்தது. தேவையில்லாத பிரச்சனைக்குள் ஒருமுறை மாட்டித் தப்பிவந்த எனக்கு அம்மாவைத் தேடி அங்கு செல்லவே பயமாயிருந்தது. எந்தவித நல்ல தகவலும் அம்மாவைப் பற்றி இதுவரை கிடைக்கவில்லை. அம்மா உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பது தான் இப்போதய எனது எதிர்பார்ப்பாகவும், துடிப்பாகவும் இருந்தது. அம்மா கடைசியாகப் போட்ட கடிதத்தில் கூட தன்னைப் பற்றிச் சொல்லாமல், ‘ராசா, பிரச்சனைகளுக்குள் அகப்படாமல், கவனமாய் இருராசா’ என்று என்னைப் பற்றித்தான் விசாரித்திருந்தாள். கடந்த காலத்தை நினைத்தபோது, எதுவும் நடக்கலாம் என்ற அம்மாவின் பயம் நியாயமானதாகவே இருந்தது.