It is with sadness that we inform you our former Principal Mr. P. Kanagasabapathy passed away this morning in Toronto,…
[ மகாஜனாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள் டிசம்பர் 24.12.2014 அன்று , கனடாவில் காலமானார். அவரது மறைவினையொட்டி, ‘பதிவுகள்’ இணைய இதழின் நவம்பர் 2010 இதழ் 131 இதழில் வெளியான இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. இதனை எழுதியவர் எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி. அதிபர் கனகசபாபதி அவர்கள் கடந்த காலத்தில் தீரம் மிக்க செயல்வீரர்களிலொருவராகவும் இருந்து வந்துள்ளாரென்பதை அவரது முன்னாள் மாணவர்களில் ஒருவரான எழுத்தாளர் கருணாகரமூர்த்தியின் இக்கட்டுரையானது எமக்கு எடுத்துரைக்கின்றது. – பதிவுகள் ]
நீ வாழுங்காலத்தில் கண்டுபிரமித்த இன்னொரு மனிதனைச் சொல்லு என்றால் எனது கைகள் உடனடியாக என் அதிபர். திரு பொ.கனகசபாபதி அவர்கள் இருக்கும் திசையைத்தான் சுட்டும். என் ஆசானிடம் மூன்றே ஆண்டுகள்தான் மாணவனாகப் பயிலும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தாலும் நம் ஆயுள் முழுவதுக்கும் நண்பர்களாக வாழும் பாக்கியதை கொண்டோம். அவர் மானிடசமூகத்துக்கு ஆற்றிய பணிகள் எண்ணற்றவையாயினும் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக எமது புத்தூர் ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரியில் அதிபராகப் பணியாற்றிய காலத்தில் ஆற்றிய தலையாய, வீரம் செறிந்த ஒரு மகத்தான பணியை நினைவுகூர்ந்து போற்றுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
புத்தூர் என்பது கோப்பாய்தொகுதியில் வாதரவத்தை, ஆவரங்கால், நவற்கீரி, ஈவினை, ஏரந்தனை, சிறுப்பிட்டி, அம்போடை, புத்தர்கலட்டி, சொக்கதிடல், அந்திரானை, ஆகிய 10 சிற்றூர்களின் தொகுதியாகும். பத்தூர் என்பதுதான் மருவி புத்தூர் ஆனது என்போரும் உண்டு. அது 1970 களில் 80,000 குடும்பங்கள் வாழ்ந்த ஒரு பெருங்கிராமம். சதுர மைல் ஒன்றுக்கு 6000 குடிகள் என்றவகையில் இலங்கையிலேயே மக்கள் செறிவான கிராமங்களில் அதுவும் ஒன்று. ஒரு ’வகை’யான நிலவுடமை – மேட்டுக்குடி- ஆண்டான் அடிமை சமூக அமைப்பின் பெருந்தொட்டிலும், மாதிரியும் எமது கிராமம். புத்தூரில் எப்போது எந்த தேவதை மண்ணிறங்கிவந்து மேட்டுக்குடியினருக்குப் பட்டயம் எழுதிக்கொடுத்தாளோ தெரியவில்லை. அவ்வூரின் வளமான மண்ணின் பெரும்பகுதி அங்கேயுள்ள மேட்டுக்குடியினருக்கே சொந்தமாக இருந்தது; இருக்கிறது. இதனால் அம்மண்ணில் பிறக்க நேர்ந்த பஞ்சமர்கள் அந்நிலச் சுவாந்தர்களுக்குச் சொந்தமான நிலங்களில் வாழ்ந்து, அவர்களுடைய புலத்தில் அவர்களுக்கே உழைத்துத் தம் வாழ்க்கையை ஓட்டியதால் அவர்களை மீறி எதனையும் செய்யமாட்டாத ஒரு கையறுநிலையில் வாழ்க்கையை ஓட்டினார்கள். தீண்டப்படாதவர்களாக மேட்டுச்சமூகத்தால் கருதப்பட்ட அம்மக்கள் இதனால் கல்வியறிவின்றி வாழ நேரிட்டது. கல்வி அறிவில் குன்றிய அச்சமூகம் தாம் சுரண்டப்படுகிறோம் என்கிற பிரக்ஞை இன்றியே வாழ்வைத் தொடர்ந்ததும் பரிதாபம்.