ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்
இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது
கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்
அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்
கூர் சொண்டுக் குருவி
நிலாக் கிரணங்கள் வீழும்
அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்
அப் பாடலைக் காவுகின்றதுபள்ளத்தாக்கில் ஆடுகளைத் துரத்தியபடி
தண்ணீர் தேடிச் சென்றவேளை
சிதைந்தவோர் குளக்கரையைக் கண்டுகொண்டாள்
வரண்ட பாசிகளோடு வெடித்திருந்த தரையில்
களைத்துப் போய் பெருவலி தந்த
கால்களை மடித்து ஓய்வெடுத்தவளோடு
சேர்ந்து கொண்டதொரு சிவப்பு வால் தும்பி