புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்ட பத்திரிகை / சஞ்சிகைகளில் தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. இந்தப்பத்திரிகை /சஞ்சிகையினை நடத்தியவர் எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ்.
ஜோர்ஜ் இ.குருஷேவ் விடுதலைப்புலிகள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், விடுதலைப்புலிகளை விமர்சித்து எழுதியவர். இன்று பலர் விடுதலைப்புலிகளின் ஆயுதபோராட்டம் முடிந்து, மெளனித்ததன் பின்பு ஆக்ரோஷமாக விமர்சித்து வருவதைப்போல் அல்லாமல் , விடுதலைப்புலிகளின் காலகட்டத்திலேயே விடுதலைப் புலிகளை விமர்சித்து எழுதியவர். அதேசமயம் தான் ஆசிரியராக, பதிப்பாளராகவிருந்து வெளியிட்ட தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் அனைத்து அரசியல் கருத்துகளைக் கொண்டவர்களுக்கும் இடம் கொடுத்தார். அவர்கள்தம் படைப்புகளைப் பிரசுரித்தார். தாயகம் (கனடா) ஆரம்பத்தில் வாரப்பத்திரிகையாக வெளியானது. பின்னர் தனது வடிவமைப்பை மாற்றி வார சஞ்சிகையாக வெளிவந்தது.
தானே ஆசிரியராகவிருந்து, பதிப்பாளராகவிருந்து, தட்டச்சு செய்பவராகவிருந்து, அச்சடிப்பவராகவுமிருந்து (இதற்காக சிறியதொரு அச்சியந்திரத்தையும் தன்னிருப்பிடத்தில் வைத்திருந்தார். ஒருவரே கைகளால் இயக்கக்கூடிய அச்சியந்திரம். வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பான ‘எழுக அதிமானுடா!’ தொகுப்பினை அச்சிட்ட அச்சியந்திரமும் அதுவே. அந்த அச்சியந்திரம் இன்னும் அவரிடம் ஞாபகச்சின்னமாக இருக்கக்க்கூடும்) )சுமார் ஐந்து வருடங்கள் வரையில் ‘தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையினைக் கொண்டு வந்தார். முப்பது வருடங்களில் ஐம்பது இதழ்களைக்கொண்டு வருவதைப்பார்த்து மூக்கில் விரலை வைத்து வியக்கும் நம்மவர்கள் , ஐந்து வருடங்களில் இருநூறுக்கும் அதிகமாகச் தாயகம்(கனடா)வினைத் தனியொருவராக வெளிக்கொணர்ந்தவர் இவர் என்பதை அறிந்தால் வியப்பின் எல்லைக்கே சென்று விடுவார்கள்.
தாயகம் (கனடா) பத்திரிகை /சஞ்சிகையின் 50 இதழ்களைப் ‘படிப்பகம்’ (http://padippakam.com ) இணையத்தளத்தில் வாசிக்கலாம். தாயகம் (கனடா) பத்திரிகை / சஞ்சிகையிலேயே கவிஞர் கந்தவனம் அவர்களின் மணிக்கவிதைகள்’ முதலில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.