ஒரு படைப்பு வாசகரை எளிதில் சென்றடைவதற்கும் கவரக் கூடியதாய் அமைவதற்கும் அப்படைப்பின் கரு அடிப்படை என்றாலும் அக்கருவை வளர்த்தெடுத்து இலக்கியமாக்குவதற்குப் படைப்பாளனின் படைப்பு உத்திகள் துணை செய்கின்றன. எனவே, ஒரு செய்தி அல்லது தகவலைப் படைப்பாளன் தன் படைப்பு உத்தகளால் சிறந்த இலக்கியப் படைப்பாக வெளிக்காட்ட முடியும். இந்த அடிப்படையில் “உத்திகள்’ அடிப்படை என்பதை அறியலாம்.
இலக்கியப் படைப்பாளிகள் செலச் சொல்லும் பொருட்டுப் பல்வேறு நெறிமுறைகளைக் கையாள்வர். இந்நுவல் நெறிமுறைகளே “இலக்கிய உத்திகள்’ என்னும் குறியால் – கலைச் சொல்லால் குறிக்கப்படுவன எனலாம். (அறிவுநம்பி.அ, 2001, ப: 6)
பொதுவாக நாவல், சிறுகதை போன்ற படைப்புகளில் உவமை, வருணனை, கற்பனை, பாத்திரப் படைப்பு உத்திகள், எழுத்து உத்திகள் போன்றவை நிறைந்து காணப்படும். இளையராஜாவின் படைப்புகளில் இறையனுபவங்கள் புதுக்கவிதையாயும், வெண்பா எனும் மரபுவழி பாக்களால் பாடப்பட்டதாயும் அமைந்துள்ளன. ஆயினும் பாமரரும் புரிந்துக்கொள்ளும் வகையில் எளிமையாக வெண்பாக்களைப் படைத்துள்ளார் இளையராஜா. இப்புரிதலின் அடிப்படையில் உவமை, உருவகம், தொடைகள், கற்பனை போன்ற பல உத்திகளைக் கையாண்டுள்ளார். அவற்றுள் குறிப்பாக “அணிகள்” இவர் படைப்பில் பயின்று வந்துள்ளமை குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.
அணிகள்
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். இலக்கியத்திற்கு அழகூட்டுவதன் வாயிலாக இலக்கியத்தைச் சுவையுடையாக்குவது அணி. தொல்காப்பியத்தில் அணி குறித்து இடம்பெறவில்லையெனினும் “தண்டியலங்காரம்” அணிகள் குறித்த இலக்கணத்தை விரிவாகச் சுட்டியுள்ளது.இளைராஜாவின் வெண்பா படைப்புகளில் பல்வேறு அணிகள் இடம்பெற்றுள் ளன. அவை வருமாறு