எண்பத்தி ஏழு ஆண்டுகால விருட்சம் வீரகேசரி, எத்தனையோ காலமாற்றங்களை சந்தித்தவாறு தனது ஆயுளை நகர்த்திக்கொண்டிருக்கிறது. வீரகேசரி துளிர்விட்ட வருடம் 1930. விருட்சமாக வளரும்போது எத்தனைபேர் அதன் நிழலில் இளைப்பறுவார்கள், எத்தனைபேர் அதற்கு நீர்பாய்ச்சுவார்கள், எத்தனைபேர் அந்த நிழலின் குளிர்மையை நினைத்துகொண்டு கடல் கடந்து செல்வார்கள் என்பதெல்லாம் அதற்குத்தெரியாது. வீரகேசரி ஒரு வழிகாட்டி மரமாக அந்த இடத்திலேயே நிற்கிறது. பின்னாளில் அதன்வழிகாட்டுதலில் வந்தவர்களில் ஒருவர் அது துளிர்த்து சுமார் ஐந்துவருடங்களில் பிறந்தார். அவருக்கு தற்பொழுது 82 வயதும் கடந்துவிட்டது. அவர்தான் வீரகேசரியின் முன்னாள் ஆசிரியர் கந்தசாமி சிவப்பிரகாசம். அவருக்கு கடும் சுகவீனம் என்று அவருடைய நீண்ட கால நண்பரும் பல வருடங்கள் வீரகேசரியில் அவருடன் இணைந்து பணியாற்றியவருமான வீரகேசரியின் முன்னாள் விநியோக – விளம்பர முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் நேற்று 12 ஆம் திகதி, தொலைபேசியில் சொன்னார். அவருடன் சில நிமிடங்கள் உரையாற்றிவிட்டு வந்து எனது கணினியை பார்த்தேன் நண்பர் செல்லத்துரை மூர்த்தி கனடாவிலிருந்து அதே செய்தியை மிகுந்த கவலையுடன் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.
அமெரிக்காவில் ஒரு மாநிலத்தில் மூத்தபிரஜைகளை பராமரிக்கும் இல்லமொன்றில் எங்கள் முன்னாள் ஆசிரியர் திரு. க. சிவப்பிரகாசம் தங்கியிருப்பதாகவும் தற்பொழுது கவலைக்கிடமாக இருப்பதாகவும் அடுத்தடுத்து தகவல் வந்தததையடுத்து, அவரைப்பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதிக்கொண்டிருக்கின்றன. ஆசிரியர் சிவப்பிரகாசம், இவரது இனிய நண்பர்களினால் செல்லமாக ‘சிவப்பி ’ என்றே அழைக்கப்படுபவர். அந்நாட்களில் வீரகேசரியில் இரண்டு ‘சிவப்பிகள்’ இருந்தனர். ஒருவர் க.சிவப்பிரகாசம் என்ற எமது முன்னாள் ஆசிரியர். மற்றவர் து.சிவப்பிரகாசம் என்ற வீரகேசரியின் முன்னாள் விளம்பர, விநியோக முகாமையாளர். இவர்கள் இருவரையும் நீண்ட இடைவெளிக்குப்பின்னர், 2007 ஆம் ஆண்டு இறுதியில், கனடாவில் தமிழர் செந்தாமரை இதழின் ஆண்டுவிழா இராப்போசன விருந்தில் எதிர்பாராதவிதமாக சந்திக்கநேர்ந்தது. அந்தப்பயணத்தில் இணைந்திருந்த அவுஸ்திரேலியா நண்பர் நடேசனும் நானும் அந்த விருந்தில் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்திருந்தோம்.