அத்தியாயம் நான்கு!
பொதுவாக, உள்ளேயிருப்பவர்களிற்கு தெரியிற விசயங்கள் வெளியில் இருப்பவர்களிற்கு தெரிய வருவதில்லை. அதுவும் பொய்யாக தெரிவதென்றால்…?? ஏன், உலகநாடுகள், தணிக்கை செய்ய தமக்கென செய்தி ஊடகங்களை பிறிம்பாக வைத்திருக்கிறார்கள் என்பதும் புரிவது போல இருக்கிறது. புலம்பெயர்ந்தவர்கள், கூட்டு கைகளாகச் சேர்ந்து ‘ஆயிரதெட்டு பத்திரிகைகளை வெளியிடாமல் உறுதியான கனமான ஒரே ஒரு செய்திப்பத்திரிக்கையை’ மட்டும் வெளியிட மாட்டார்களா? வெளியிடப் பழக வேண்டும். இந்திய விடுதலையை வென்றெடுத்த ‘காங்கிரஸைப் போல ஒரு அமைப்பாக’ பரிணமிக்க வேண்டும். இந்த ஒற்றுமை தான் நம் விடுதலைப் பெடியளுக்கும் சரிவராத விசயம். அவர்களிற்கு சேர்ந்திருக்கிற அமைப்பையே இரண்டாக உடைக்கத் தான் தெரிகிறது.இதற்கெல்லாம் (அரசியல் அறிவு)தெளிவு இல்லாதது தாம் காரணம். உண்மையிலே, கடந்த போராட்டப் பாதையில் எத்தனையோ உயிர்களை இழந்திருக்க வேண்டியவை இல்லை. மெண்டிஸ் போன்றவர்கள் இருக்க வேண்டியவர்கள். “முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை”நகுலன் நெடுமூச்செறிந்தான். வந்திருந்த பெட்டைகளிற்கு அரசியலில் நாட்டம்… இருக்கவில்லை. வாசுகியோட விக்கி கடைக்கு கிளம்பியவர்கள் வார போது குண்டுப் பெண்ணான சந்திராவை கூட்டி வந்தார்கள். சந்திரா,உடுவிலில் இருந்தவள்.அராலியில் அவளுடைய அக்கா கமலா, பார்திபனை முடித்திருந்தார்.பலாலி வீதியால் இந்தியனாமி வரப் போகிறது…என்ற பதட்டத்தில் அக்கா வீட்ட வந்திருந்தாள். வாசுகியை அவளுக்கு ஏற்கனவே கொஞ்சம் தெரியும், கடையில் இவர்களையும் பார்த்தவுடன் ஒட்டிக் கொண்டு விட்டாள். ஆனால், நீண்ட பொழுதுகள் இருக்கின்றனவே. அதைப் போக்க… வேண்டுமே! அதற்கு பக்கத்து வீட்டு ராகவன் அண்ணை யின் பெடியளான சுஜே, சிறிது கை கொடுத்தான் . கொழும்புவாசிகளான அவர்கள் 83 கலவரத்திற்குப் பிறகு வந்தவர்கள்.இவர்களைப் போல அராலியே தெரியாத இன்னும் பல குடும்பங்கள் கிராமத்தில் அடைந்திருக்கிறார்கள். சிங்களம்,ஆங்கிலம்,தமிழ் என 3 பாசைகளையும் நல்லாய் பே சுவார்கள். இவர்கள் என்ன, லேசிலேஒருத்தருடன் ஒருத்தர் பழகி விடவா போறார்கள்? அதற்கு மீற வேண்டும்.! மெல்ல மெல்ல தானே நடைபெறும். அதற்கு முதல் இந்தியனாமி அராலியாலேயும் போய் விடலாம்.