சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்கு உரிய மதுரையில் பிறந்த இவர், இளம் வயது முதற்கொண்டே தன்னுடைய தாத்தா, தந்தையார் வழியில் தமிழ்ப்பற்றை வரித்துக் கொண்டார். பாத்திமா கல்லூரியில் சிறப்பு தமிழ்ப்பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை போன்றோரிடமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீ., மொ.துரையரங்கனார், விஜயவேணுகோபால் முதலான தமிழ் அறிஞரிடம் தமிழ் பயின்றதால் தமிழுணர்வும், தனித் தமிழ்ப்பற்றும் இவருக்குள் ஆழமாக ஏற்பட்டன. அரசுக்கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், சாதி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கு பெற்றார். ஈழத்தமிழர்கள் பால் அன்பு கொண்ட இவர் 1980இல் ஈழத்தமிழர் ஆதரவுப்போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மிகச் சிறந்த படைப்பிலக்கியவாதியான இவரது சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை போன்றவை பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.
ஆசிரியர்ப்பணி:
தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளைநிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்கு, தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ்உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதைப் புரிய வைத்து செயல்படுத்தினார் (த.நே.41.ப.26)