சலாடினால் கட்டப்பட்ட சிற்றாடல் என்ற அந்தக் கோட்டையின் சிலபகுதிகளை மட்டும்பார்த்து முடித்துக்கொண்டு மதியத்திற்கு கெய்ரோவின் கடைகளை பார்ப்பதாக ஜனநாயக முறையில் தீர்மானித்தோம். எந்த ரகமான கடைகள் என்பது பிரச்சனையாக முளைத்தது. பெண்கள் நவீன சொப்பிங் கொம்பிளக்ஸ் போவோம் என கூறியபோது எனது நண்பனும் நானும் புராதன காலமாக அமைந்துள்ளதும் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் பெரியகடைவீதி அருகில் உள்ளது. அங்கு செல்வோம் என்று முடிவு எடுத்து கான் எல்-காலி (Khan El-Khalili) கடைவீதிக்கு சென்றோம். வெள்ளிக்கிழமையாதலால் அந்தப் பகுதியில் நமது நல்லூர் திருவிழா போல் உள்ளுர் மக்கள் நின்றார்கள். ஆனால் வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளைக் பெருமளவு அங்கு காணவில்லை. பள்ளிவாசல் கடைவீதி மற்றும் கோப்பி கடைகள் என எல்லாம்அருகருகே அமைந்துள்ளன.
கான் எல் காலில் என்பது கெய்ரோவில் கடைகள் உள்ள இடம். 1382 ஆண்டுகாலத்தில் மாமலுக்கியரால் உருவாக்கப்பட்டது .அதன்பின் ஓட்டமான் காலத்தில் புனர்நிர்மாணிக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாக பழமைவாய்ந்த கடைப்பகுதியாகும். இது அரசுகள் இருந்து ஆண்ட சிற்றாடலுக்கு அல்குசையின் பள்ளிவாசலும் (Al-Hussein Mosque) அருகே இருக்கிறது. இதைகெய்ரோவின் இஸ்லாமியப் பகுதிஎன்பார்கள். எப்பொழுதும் வெளிநாட்டுஉல்லாசப்பிரயாணிகளும் உள்ளுர்வாசிகளும் நிறைந்து காணப்படுவார்கள். ஏராளமான காப்பி கபேக்கள் இங்கு இருக்கிறது. சென்னையில் பர்மா பசார். புதுடெல்கியில் சாந்தினி சவுக் போன்றது. ஆனால் ஆயிரக்கணக்கில் கடைகள் இருப்பதால் என்ன பொருட்களும் இங்கு வாங்கலாம்.
இப்படியாக வெளிநாட்டவரும், உள்ள நாட்டவர்களும் கூடும் இடமான படியால் மூன்று முறை பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வெளிநாட்டவர்கள் குழுமும் இடமாகவும் கடைகளும் நெருக்கமாக இருப்பதால் பயங்கரவாதிகள் இந்தஇடத்தை தேர்ந்தெடுதிருக்கிறார்கள். பயங்கரவாதத்தில் மரணிப்போரின் எண்ணிக்கை பயங்கரவாத செயலின் தாக்கத்தின் அளவுகோலாக இருங்கிறது. நவீன ஊடகங்களும் இதே அளவுகோலை பாவிப்பது இந்த செயலில் ஈடுபடுவோர்களுக்கு ஊக்கத்தையும் பிரசாரத் தாக்கத்தையும் கொடுக்கிறது.
இங்கு எனது மனைவி சியாமளாவும் நண்பனின் மனைவிநிருஜாவும் பட்சணக்கடைக்குள் பாயும் சிறுவர்கள் போல் செல்லும் போது நானும் நண்பனும் பின்தொடர்வதைவிட வேறு வழியில்லை. இந்த இடத்தில் மூன்று முறை குண்டு வெடித்த விபரம் அவர்களுக்கு தெரியாது. தெரியாமல் இருப்பதும் நன்மையே.
முயலுக்கு தனக்காக வேட்டைக்காரன் காத்திருப்புது தெரியாது. மீனுக்கு துண்டில் முள் இரையின் பின் இருப்பது தெரியாது. அதோ போல் மனிதனும் தன்னை சூழ்ந்த விடயங்களை மற்றும் வரலாறை சிந்திக்காத போதும் விடயத்தை புரிந்து கொள்ளாதபோதும் அதனைப் பற்றி பொருட்படுத்தாமல் இருப்பது அவனுக்கு மகிழ்வாக இருக்க முடிகிறது.
2005ல் தற்கொலைத்தாக்குதல் நடந்தபோது பல உல்லாசப்பிரயாணிகள் கொல்லப்பட்டார்கள் அதோ போல் 2009 பெப்ரவரியில் குண்டு வெடித்து பதினேழு வயதான பிரான்சியப் பெண் இறப்புடன், மேலும் பலர் காயங்கள் அடைந்தனர். அதே இடத்திலே நான் நின்று கொண்டிருக்கும்போது மனம் பயங்கரவாதிகளையும் அவர்கள் நியாயங்களையும் மீள்பரிசீலிக்கிறது
எந்தஒருஅரசியல் நோக்குடன் சம்பந்தமில்லாத அப்பாவி மக்களைக் கொலைசெய்வதும், அவர்களை காயப்படுத்துவதுமான பயங்கரவாதம் நமது நாட்டிலும் பல காலமாக பேசும் பொருளாகியது. மக்களுக்கு ஏதோஒருவிடிவைத்தரும் வழிமுறையென பலஅறிவாளிகளால்கூடஊக்குவிக்கப்பட்டது. உலகசரித்திரத்தில் இந்த பயங்கரவாதத்தின் தோற்றுவாயை தேடியபோது பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள கதையில் இஸ்ரேலியர்களின் ஹீரோவாக சாம்சன் வரலாறு முதலாவதாக எழுதப்பட்ட பயங்கரவாத சம்பவமாக புரிந்துகொள்கிறேன்.
தற்போது சொல்லப்படும் பயங்கரவாதத்தின் ஆணிவேர் மத்திய கிழக்கில் உள்ளது என்றால் பலருக்கு ஆச்சரியம் ஏற்படும். ஏன் என்னில் ஆத்திரமும் ஏற்படலாம். ஆனால் பைபிளின பழைய ஏற்பாட்டை, மதத்திற்கு அப்பால் நின்று ஒருசமூகத்தின்இலக்கிய வரலாறாக பார்க்கும்போது சாம்சனின் கதை இதைத்தான் சொல்லுகிறது. பழைய ஏற்பாட்டில் அறிமுகமில்லாதவர்களுக்காக இந்தக்கதையை சிறிது விபரமாக சொல்லவேண்டி இருக்கிறது.
இஸ்ரேலியர்களின் கிளைக் குலத்தை சேர்நத மனோவ(Manoah) மனைவியின் முன்பாக (மனைவியின் பெயரை பைபிள் சொல்லவில்லை) தேவனின்துாதுவன்தோன்றி “ நீ மலடாக, குழந்தை இல்லாமல் இருக்கிறாய். ஆனால் விரைவில் குழந்தையை பெறுவாய். அதனால் கர்ப்பகாலத்தில் வைனையோ நொதித்த பதார்த்தத்தையோ அல்லது அசுத்தமான பண்டங்களை (unclean) உண்ணாதே. உனக்கு விரைவில் ஆண்குழந்தை உண்டாகவிருக்கிறது. அந்த குழந்தையின் தலைமயிரை எக்காலத்திலும மழித்துவிடாதே. இவன் இஸ்ரேலியர்களை,பிலிஸரீனியரிடம்(Philistines )இருந்துகாப்பாற்றுவான்“.
அந்தப்பெண் கணவனிடம் சென்று கடவுள் தோன்றியதையும் தனக்கு கிடைத்த சேதியையும் சொல்லிவிட்டாள். மனோவ கடவுளை தானும் காண ஆசைப்பட்டதால் தேவதுாதன் அவனிடம் தோன்றி அந்த கர்ப்பகாலத்தில் புறக்கணிக்க வேண்டிய விடயத்தை அவனிடமும் சொல்லி மறைந்தார்.
சாம்சன் வளர்ந்து பிலிஸ்னிய( Philistines ) பெண்ணை காதலித்து போது அன்னியகுலப் பெண்ணென பெற்றோர்கள் மறுத்தார்கள். ஆனால் பின்பும் விடாப்பிடயாக அவர்களை வற்புறுத்தி அந்தப்பெண் இருக்குமிடத்திற்கு பெற்றோரோடுசெல்லும் போது சிங்கம் ஒன்று உறுமிக்கொண்டு எதிர்வந்தது. தேவனின் ஆவி சாம்சனில் குடிபுகுந்ததும் அந்த சிங்கத்தை ஆட்டுக்குட்டிபோல் கிழித்து கொன்று போட்டான். மீண்டும் அவளைபெண்ணைபார்த்துவிரும்பிவிட்டான். பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் மணக்க அவர்கள் சம்மதித்ததும் வழியில் அவனால் கிழித்துப் போடப்பட்ட சிங்கத்தின் சடலத்தில் தேன்கூடு கட்டியிருந்தது . அந்த தேன்கூட்டில் உள்ள தேனை எடுத்து குடித்ததுடன் தாய் தந்தையர்களுடன் பகிர்ந்து கொண்டான் . சிங்கத்தைகொன்றதையோ சடலத்தில்இருந்து தேன் எடுத்ததையோ பெற்றோரிடம் மறைத்துவிட்டான்.
குலத்துக்குரிய சம்பிரதாயத்துக்கு ஏற்றபடி திருமண விருந்தில் சாம்சனுக்கு முப்பது தோழர்கள் மணமகளோடு கிடைத்தார்கள். அப்பொழுது சாம்சன் அவர்களுக்கு ஒருவிடுகதை சொல்ல விருப்பதாகவும் அந்த விடுகதையை அவிழ்த்தால் முப்பதுபேருக்கும் அணிந்துகொள்ள உடையளிப்பதாகவும் இல்லையேல் அவர்கள் தனக்கு உடைகள் வாங்கி அளிக்கவேண்டும் எனக்கூறினான்
அவர்கள் அதற்கு சம்மதிக்கவும் உலகத்தில் பலமானதும் இனிப்பானதும் எது என விடுகதை போட்டான்.
மூன்று நாட்களாக அவர்கள் பதில் சொல்லவில்லை. நான்காவது நாள் சாம்சனின் மனைவியிடம் தோழர்கள் விடுகதையின் விடையை அறிந்து வரும்படி கூறினார்கள் ,பெண்ணின் நச்சரிப்புத் தாங்காமல் ஏழாம் நாள் அந்த விடுகதையை கூறியது தோழர்கள் இனிமையானது தேன் பலமானது சிங்கமென்றனர்.
அப்பொழுது சாம்சன் எனது கன்னிப்பசுவை வைத்து வயலை உழாதுவிடில் இது உங்களுக்குப் புரிந்திராது எனக்கூறி அவர்களது உடைகளை உருவியதுடன், ஆத்திரத்தில் வீடு திரும்பியதால் சாம்சனின் மனைவியாகவிருந்தவள் அங்கு வந்திருந்த நண்பனொருவனுக்கு கொடுக்கப்பட்டாள்.
சில நாட்களின் பின் இளம் ஆட்டுடன் மீண்டும் மனைவியை தேடி செல்ல முயன்றபோது சாம்சனின் தந்தை ,அவளை ஏற்கனவே நண்பனுக்கு கொடுத்துவிட்டாய். உன் மனைவியின் தங்கை அழகானவள். அவளை உன்னுடையவளாக எடுத்துக்கொள் என்ற போது “இல்லை பிலஸ்ரைன்களுக்கு நான் யார் என காட்டுகிறேன்“ எனக் கூறியதுடன் மூன்னுாறு நரிகளை இரட்டை இரட்டையாக வால்களோடு பிணைத்துவிட்டு அவற்றின் வாலில் தீயை வைத்து பிலஸ்ரைனது சோளக்கொல்லையுள்ளும் திராச்சைத் மற்றும் ஒலீவ்தோட்டத்தின் உள்ளும் விரட்டிய போது அந்த தோட்டங்கள் எரிந்து சாப்பலாகியது.
இந்த சம்பவத்திற்கு எதிரான பழிவாங்கலாக சாம்சன் மனைவியையும் அவளது தந்தையும் பிலஸ்ரினர் கொன்றுவிட்டார்கள். இதற்கு பழிவாங்க பலபிலஸ்ரைனரை சாம்சன் அடித்தும் கொலைசெய்துவிட்டு மலைக்குகையில் தங்கிவிட்டான். பிற்காலத்தில்அவனைத் தாக்கவந்த பிலஸ்ரைனரை கொலைசெய்துவிட்டு சாம்சன் இருபது வருடங்கள் இஸ்ரேலியர்களுக்கு தலைவனாக வழி நடத்தினான்.
இதன்பின்பு டாலியா(Delilah) என்ற பெண்ணை காதலித்தான். அவளிடம் 1100 வெள்ளிகளை பிலஸ்ரினியர் தலைவர்கள்கொடுத்து “நீ சாம்சனின் அசாத்திய பலத்தை எங்கிருந்து பெற்றான் என்பதை அறிந்து கொண்டு எங்களுக்குசொல்“ என்றனர்.
அவள் தொடர்சியாக சாம்சனிடம் “நீ என்னை காதலிப்பது உண்மையென்றால் உனத்து பலத்தின் இரகசியம் என்ன என்றுசொல்“ எனக் கேட்டபோது “எனது தலைமயிரில்தான் அது உள்ளது. அது தேவனால் அருளுப்பட்டது.“ டாலியா இதை பிலஸ்ரினியருக்கு அறிவித்துவிட்டு தனது மடியில்தூங்க வைத்தாள். தூங்கும்போது தலைமயிரை மழித்து சிறைப்பிடித்ததுடன் இரண்டு கண்களையும் தோண்டி எடுத்து விட்டனர். சிறையில் இருந்த காலத்தில் தலைமயிர் மீண்டும் வளர்ந்தது. தங்களது எதிரியான சாம்சனை சிறைப்பிடிக்க உதவிய தேவனுக்கு நன்றி செலுத்த ஆலயத்துள் சடங்கை நடத்தினார்கள். அந்த சடங்கில் ஒரு காட்சிப்பொருளாக்க சாம்சனை கொண்டுவந்தபோது நான்பிலஸ்ரினர்களுடன் இறக்கிறேன் எனக்கூறிக்கொண்டு அந்த ஆலயத்தின் பிரதான துண்களை உடைத்ததன் மூலம் அங்கிருந்த பிலஸ்ரேனியர் இறந்தார்கள். இந்த சடங்கை பார்க்கவந்த குழந்தைகள் பெண்கள் உட்பட 3000 பேருக்கு மேலாக இறந்ததாகவும் பழையஏற்பாடு செல்கிறது.
அக்காலத்தில 3000 இக்காலத்தில் எவ்வளவுக்கு சமனாகும்?
நான் நினைக்கிறேன் முழு இனமும் அழிந்ததற்கு சமனாகும். மேலும் இந்த செயலில் அரசியல் இருப்பதால் இது பயங்கரவாதமாகிறது
ஏன் எகிப்தை பற்றி எழுதும்போது பழைய ஏற்பாடு வருகிறது என்று. எகிப்தியர்- இஸ்ரேலியர்கள்- அரேபியர்கள் பூணுநூலின் முப்புரி போல் இணைந்து இருப்பார்கள்.
நாங்கள் எல்லோருமாக கடைவீதியை விட்டு வந்து கோப்பிக் கடையொன்றில் இருந்த போது எதிரில் இருந்தஅல்குசேன்பள்ளிவாசலில் ( Al-Hussein Mosque)தொழுகை தொடங்கியது. இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்த பள்ளிவாசலின் உள்ளே செல்லமுடியாது. மிகவும் அழகான கட்டிட அமைப்புடன் இருந்த பள்ளி வாசல் மிகவும் புராதனமானதும் புகழ்வாய்ந்ததுமாகும்.
இந்த பள்ளிவாசலில் சியா முஸ்லிம்களுடன் சுனிகளும் சேர்ந்து வணங்குவதாக அறிந்து கொண்டேன். எகிப்தில் மிகவும் சிறிய அளவில் சியா முஸ்லீம்கள் இருந்தாலும் ஒருகாலத்தில் அரசாண்டவர்கள். அதே போல் பத்துவீதமானவர்கள் பழமைவாய்ந்த கிரிஸ்ரியன் பகுதியை சேர்ந்தவர்கள். மத்தியகிழக்கில மதங்களிடையே சகிப்புத்தன்மை கொண்ட ஒரு நாடு உருவாகுமானால் அது எகிப்தாகவே இருக்கும், இருக்க வேண்டும்.
நபிகள் நாயகத்தின் மகள்வழிப் பேரனான (Hussain Ali ) குசையின் அலி பேரில் கட்டபட்டது மட்டுமல்ல, 680 AD யில் கொலை செய்யப்பட்டு இங்கு அவரது தலை புதைக்கப்பட்டுள்ளது. ஆனால் உடல் தற்பொழுது (Kabala) கபாலா( (Imam Husayn Mosque in Kabala,Iraq) உள்ள பள்ளிவாசலில் புதைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தில், பௌத்தம்போல் உருவ வழிபாடு இல்லாத போதிலும் பின்பற்றியவர்களால் எச்சங்கள் புனிதமாக்கப்படுகிறது.
680 AD யில் இஸ்லாத்தின் உடலில் கூரிய கத்தியாக செருகப்பட்டு இப்பொழுது மட்டுமல்ல இன்னும்பல்லாண்டு காலத்திற்கு குருதிவடிந்து கொண்டிருக்கும். நபிகள் நாயகத்தின் பேரனான குசையின் அலி கொலைசெய்யப்பட்டதில் இருந்து இஸ்லாம் இரண்டு பிரிவாகியது. இதனால்தான் இன்னமும் ஈராக்கிலும், பாகிஸ்தானிலும் இரத்த ஆறு ஓடுவதும், அவுஸ்திரேலியாவுக்கு, ஆப்கானிஸ்தானில் உள்ள ஹஸாரா இனத்தவர்கள் வள்ளங்களில் உயிர் பிழைக்க அகதி அந்தஸ்த்து கேட்டு வருவதற்கும், தற்போது சிரியாவில் நடக்கும் போரில் சியா-அலவிசார்பு சிரியப்படைகளுக்கு லெபனிய ஹிஸ்புல்லா குழுவினரும் இரானியரும் உதவியளிப்பதன் காரணமாகும்.
யுத மக்களோடு மனஸ்தாபம் 1948ல் இஸ்ரேல் உருவானதாலே ஏற்பட்டது. அதற்கு முன்பு யுதர்கள், ரோமனியரிடம்,கத்தோலிக்க திருச்சபையிடம் இருந்து பதுகாப்பாக முஸ்லீம் நாடுகளில் வாழ்ந்தார்கள். நான் முன்பு எழுதியதுபோல் இஸ்லாமியர்களும் யுதர்களும் சிலுவையுத்தத்தில் ஒன்றாக இணைந்து கத்தோலிக்கரான ஐரேப்பிய அரசுகளை எதிர்த்து போரிட்டனர்.
ஈராக்கில் கொலைசெய்யப்பட்ட குசேன் அலியின் தலை ஈராக்கில் இருந்து இங்கு கொண்டு வந்ததில் இருந்த வரலாற்றை நான் படித்தபோது சுவையாகவும் அதிர்ச்சியாக இருந்தது.
ஆரம்பத்தில் குசேன் அலியன் தலை வைத்திருந்த பேழை பாதுகாப்புக்காக தற்போதய இஸ்ரேலுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு 250 வருடங்கள் பாதுகாக்கப்பட்டது. அதன்பின்பு அக்காலத்தில் பத்திமா இராச்சியம் எனப்படும் சியா அரசாட்சி எகிப்தில் நடந்தபோதுஅங்கு மாற்றப்பட்டு 1153ல் பத்திமா இமாமால் அந்தப் பேழை நிலத்தில் புதைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டது.
1169 சலாடின் (குர்டிஸ சுன்னி) சிரியாவில் இருந்து வந்து தனது அதிகாரத்தை நிலை நிறுத்தும்போது, பழைய மாளிகைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கபட்டதாகவும் நூல்நிலையங்கள் அழித்து புத்தகங்கள் நைல் நதியில் வீசப்பட்டதாக வரலாறு எழுதப்பட்டுள்ளது.
தனது உளவுப்படை மூலம் சலாடின் இந்த குசேனது தலைகொண்ட பேழையின் இரகசியத்தை அறிந்த ஒருவரை அது எங்கிருக்கிறது என்ற இரகசியத்தைக் கூறும்படி உத்தரவிட்டபோது அவர் மறுத்தார். பலவகையின் துன்புறுத்தி பார்த்தான் பின்பு அவரது தலையை மழித்துவிட்டு குல்லாயில் இரத்தம் குடிக்கும் அட்டைகளை விடும்படி உத்தவிட்டான், அவர் முகத்தில் வலி தெரியவில்லை மீண்டும் ஏராளமான அட்டைகள் அந்தக் குல்லாயில் நிரப்பப்பட்டது. அவரது முகத்தில் வலியின் சிறிய உணர்வு கூடத்தெரியவில்லை.
வியப்புடன் சலாடின் அந்த மனிதரது குல்லாயை அகற்றியபோது அந்த அட்டைகள் இறந்திருந்தன. மேலும் வியப்படைந்த சலாடின் அந்த புனிதரிடம் விந்தைக்கு காரணத்தைக் கேட்டபோது அவர் குசையின் அலியின் பேழையின் இரகசியம் எனது தலைக்குள் இருக்கிறது. அதுவே இரகசியம் என்றார்.
இந்த பள்ளிவாசலில் முதலாவது எழுதப்பட்ட குரானின் கை எழுத்துப் பிரதி இங்குள்ளதாக சொல்லபடுகிறது.
எங்களுடன் வந்தஎகிப்திய வழிகாட்டி பிரமிட்டுகள் பார்க்கப்போவோம் என அழைத்தார்…..
uthayam@optusnet.com.au