கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் போராட்ட நிகழ்வுகள் மற்றும் புலப்பெயர்வுகளின் விளைவுகளால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் புதிய வரவுகளில், இனங்கானப்பட்ட உணர்திறன் முறைமை மாற்றமானது, புனை கதைகளின் பரிணாம வளர்ச்சிக்குப் புது இரத்தம் பாய்ச்சியது. போராட்ட இலக்கியங்களைப் போலன்றி, புலம் பெயர் இலக்கியங்களில் வாசகர் அனுபவித்த வாழ்க்கையானது அவர்களது இயல்பான வாழ்க்கைக் கோலங்களுக்கு முற்றிலும் அந்நியமாகத் திகழ்ந்ததற்கும் அப்பால், புலம் பெயர் இலக்கியங்களில் தரிசித்த புதிய காட்சிகளும் மொழி நடையும், புதியதோர் உலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றதே, அவ்விலக்கியம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமாக அமைந்திருந்தது.
புலம்பெயர் இலக்கியத்தில் காணப்பட்ட இத்தகைய வித்தியாசமான, தனித்துவமான அம்சம்தான் அதற்கோர் சர்வதேசிய அந்தஸ்தைக் கொடுத்ததோடு, புதிய யுகத்தில் அதுவே கிரீடம் சூடிக் கொள்ளும் என்று எஸ்.பொ. போன்றவர்கள் கூறுமளவிற்கு நிறைய நம்பிக்கையையுந் தந்தது. பொ.கருணாகரமூர்த்தி, க.கலாமோகன், ஷோபாசக்தி, தேவகாந்தன், கே.எஸ்.சுதாகர், வி. ஜீவகுமாரன் போன்றவர்களுடன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் எழுத ஆரம்பித்து தொண்ணூறுகளின் பிற்பகுதியில் உணர்திறன் முறைமை மாற்றத்தில் புதிய பரிமாணம் பெற்ற அ.முத்துலிங்கம் முதலானோர் புலம்பெயர் இலக்கியத்தில் ஆழத்தடம் பதித்ததோடன்றி, மேலும் தமது தொடர்ச்சிகளை உருவாக்க முனைந்தனர். அ.முத்துலிங்கத்தின் கூறுபாட்டின் ஒரு தொடர்ச்சியாகவே ஆசி கந்தராசாவை நான் காண்கின்றேன். உண்மையில் முத்துலிங்கத்தின் உணர்திறன் முறைமையினை மேலும் அகலப்படுத்தும் ஓர் பண்பினையே ‘ஆசி’ யின் ஆக்கங்களில் என்னால் தரிசிக்க முடிகின்றது.
‘அண்மைக்கால அறுவடைகள்’ எனும் மகுடத்தில் தினக்குரல் பத்திரிகையில் தொடர்ச்சியாக நான் எழுதி வந்த பத்திக்காக பனுவல் தேடல்களை மேற்கொண்ட கால கட்டங்களில் தான், ஆசி யின் ஆக்கங்களுடன் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது எனலாம். புலம் பெயர்ந்து வாழும் தமிழ் முதியவர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டிய, பாவனை பேசலின்றி எனும் ஆசியின் கதை, என்னுள் பல கேள்விகளை எழுப்பி நின்றது.
ஆசியின் கதைகளில் ஒரு போதும் புனைவுகள் இருப்பதில்லை. கைதடியில் இருந்து அவுஸ்திரேலியா வரை, அவர் சந்தித்த, அவருடன் வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சாதாரண மனிதர்களின் வாழ்வியலே அவை! மேலும் சொல்வதானால் வெறுமனே வாழ்வியலை மட்டும் அவர் பதிவு செய்து விட்டுப் போய்விடுவதில்லை. ஏலவே நாம் குறிப்பிட்டது போல் தனது கதை கூறலின் ஈற்றில் எம் மனதில் பல மதிநுட்ப வினாக்களை விதைத்து விடுகின்றார். அதுவே அவரை அடையாளப்படுத்தி நிற்கின்றன எனலாம்.
புலம்பெயர்ந்து வாழும் மக்களின் இடர்கள், உயிர் பிறந்தகத்திலும் உடல் புலம் பெயர் தேசத்திலுமாக இரண்டக நிலையில் வாழும் அவர்களின் மன உளைச்சல்கள், மன ஓட்டங்கள், குடும்ப உறவுகளின் சிதைவுகள், கலாசாரப் பாதிப்புகள் என ஒரு எழுத்தாளனாக நின்று கதை சொன்ன ஆசிக்கு அவரது அறிவியல் ஆற்றலினை வெளிப்படுத்த அத்தளம் போதுமானதாக இருக்கவில்லை. ஒரு பல்கலைக்கழக பேராசிரியரான, உயிரியலில் குறிப்பாக பூங்கனியியலில் விஞ்ஞானியான அவர், தனது அறிவாலும், அனுபவத்தாலும், துறைசார் பயணங்களினாலும் பெற்ற தகவல்களை வெளிப்படுத்த இன்னோர் தளமும் தேவைப்பட்டது. அதற்காக அவர் தேர்ந்தெடுத்த பரிமாணமே ‘Creative Essay’ எனப்படும் புனைவுக் கட்டுரை வகை எனலாம்.
பிறந்தகத்தின் பாரம்பரியத்துடன் பின்னிப்பினைந்த தாவர வகைகளை குறிப்பாக யாழ்ப்பாணம் என்றதும் குறியீடாக முதலில் நினைவில் ஒளிரும் கற்பகத்தருவான பனை மற்றும் கறுத்தக் கொழும்பான் மாமரம், முருங்கை, வரகு போன்ற தானியங்கள் முதலானவற்றை முன்னிறுத்தி அம்மரங்களிலான பலா பலன்கள், அவ்விருட்டங்களின் இயல்புகள், அம்மரங்களின் அறுவடைகளில் உள்ள உயிர்ச்சத்துக்கள், அவற்றினை வெளிநாடுகளில் சாகுபடி செய்வதில் உள்ள சிக்கல்கள், அப்பயிர்கள் மீதான நோய்த் தாக்கங்களும் அதற்கான பரிகாரங்களும், நவீன முறையில் குறுகிய காலத்துள் பலனைப் பெறுவதற்கான ஆலோசனைகள் என சங்கிலித் தொடராக தாவரவியல் தகவல்களைத் தந்து அவற்றினை தனது பிறந்தக நினைவுகளுடனும் தொடர்ந்து உலகளாவியதாக தான் மேற்கொண்டு வரும் கல்விப்பயணங்களுடனும் தொடர்புபடுத்தி பின்னர் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அங்கும் இங்குமாகத் தாவி, முதல் பந்தியில் பால்ய நண்பன் கைதடிப்பாலன் பற்றிச் சொல்வார் தொடரும் பந்தியில் பல்கலைக்கழகத்தில் கூடப்பணிபுரியும் நண்பன் ரோனி பற்றிக் கூறுவார் – கட்டுரைக்கு அழகு சேர்த்து வாசிப்போர் நெஞ்சாங்கூட்டு நினைவுகளைக் கிளறி, மேலும் புது அனுபவங்களைப் புகுத்தி, தனது புதிய தளத்தில் பேராசிரியர் ஆசி வெற்றி பெற்றிருக்கின்றார் என்று தாராளமாகவே கூறலாம்.
படைப்புக் கட்டுரைகளை அவர் நகர்த்திச் செல்லும் பாங்கு சுவையானது, சுவாரஸ்யமானது. உதாரணத்திற்கு முருங்கை பற்றி கூற முற்படும் போது களி முருங்கை, வலியன் முருங்கை, கட்டை முருங்கை உலாந்தா முருங்கை என அதன் வகையறாக்கள் பற்றி முதலில் விபரிப்பார். பின்னர் அதன் அடைமொழிக்கான அர்த்தங்களை கற்பிப்பார்.
ஆபிரிக்காவில் முருங்கக்காயை உணவாகப் பயன்படுத்த மாட்டார்களாம். முருங்கை காயினை சாத்தானின் விரல்கள் என்கிறதாம் அவர்களது ஐதீகம்.
‘முருங்கை இலை வறையும் மீன் குழம்பும் நல்ல கொம்பினேசன்’, ‘களி முருங்கைக் காய்கறியும் மறவன்புலவு வயலில் விளைந்த மொட்டைக் கறுப்பன் நெல் அரிசிப்புட்டும் எனது விருப்பமான உணவு. சின்ன வயதிலும் ஒரு நீத்துப் பெட்டி பிட்டு தனியாளாய்ச் சாப்பிடுவேன்’ என பின்னர் வாசிப்போரை நாவூற வைப்பார். ‘அம்மா முருங்கைக்காய் சமைப்பதே தனிக்கலை ஆனாலும் விரத நாட்களில், அம்மா முருங்கைகாய் சமைக்க மாட்டார்’ என ஆரம்பித்து, சீதை தீக்குளிப்பதை தடுக்க முயன்றபோது இராமனுக்கு கையில் அகப்பட்டது சீதையின் கூந்தல். இராமன் எறிந்து அறுந்த கூந்தலே மரத்தில் தொங்கி முருங்கைகாய்கள் ஆயினவாம் என அதற்கு வியாக்கியானம் சொல்வார். வேதாளம் முருங்கை மரமேறிய கதையினையும் தொட்டுச் சென்று, சட்டென்று அடுத்த வரியில் விஞ்ஞானியாகி உயிரியல் விளக்கங்கள் தருவார்.
ஒரு தேக்கரண்டி காய்ந்த முருங்கை இலைத்தூளில் 14 சதவீதப் புரதமும் 40 சதவீத கல்சியமும் 23 சதவீத இரும்புச் சத்தும் இருப்பதாகக் கூறிவிட்டு, என்னுடைய அம்மாவுக்கு வயது தொண்ணூறு. இந்த வயதிலும் அவரது முப்பத்திரண்டு பற்களும் ஒரிஜினல் என பற்களுக்கு கல்சியத்தின் தேவைப்பாடு பற்றி புரியவைப்பார்.
இப்படியெல்லாம் கூறிச் செல்பவர், முருங்கைக்காயின் மகத்துவமென ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் பாக்கியராஜ் கூறிய சமாசாரத்தை எங்கே மறந்து விடுவாரோ என கட்டுரையை வாசிக்கும் தருணத்தில் நான் பயந்து கொண்டிருந்தேன். ஆனால் என் பயத்தைப் போக்குமாப் போல், தவறாது அதையும் குறிப்பிட்டு, அதனாலோ என்னவோ முருங்கைக் காய் பிஸ்னஸ் செய்யும் எனது பால்ய நண்பன் பாலனுக்கு ஐந்து பிள்ளைகள் என கண் சிமிட்டுவார்.
இத்தனைக்கும் அவரது மையப்புள்ளி முருங்கையை, மரமாக அன்றி செடியாக, வளர்த்து கவ்வாத்துப் பண்ணி, சொட்டு நீர்ப்பாசனத்தில் வளர்க்கும் தனது புதிய கண்டுபிடிப்பினை தான் பிறந்து நடைபயின்ற கைதடி மண் உட்பட இலங்கை எங்கும் அமுலாக்க வேண்டுமென்பதே.
விஞ்ஞானியாய் நின்று தான் கண்டுபிடித்த தேற்றம் ஒன்றினை வாசகர்களுக்கு இத்தனை சுவாரசியத்துடன் இலகுவாக புரிய வைக்க ஆசி ஒருவரால் தான் முடியும். நான் படித்த நாட்களில் கடுமையான தேற்றம் ஒன்றினை இலகுவாகப் புரியவைக்க எமது ஆசிரியர்கள் எடுத்த பிரயத்தனம் இவரது ஆக்கங்களைப் படிக்கும் போது என் நினைவிற்கு வந்து சென்றது. இவ்வாறாக தமிழிலும் புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும் நல்ல பரிச்சயம் இருப்பதற்கும் அப்பால் அறிவியலை இலக்கியமாக்கிய முறைமையே படைப்புக் கட்டுரை எனும் அவர் கையாளும் புதிய கூறுபாட்டினை ஆழப்படுத்த, ஆசிக்கு துணை நின்ற காரணி என அறுதியிட்டுச் சொல்வேன்.
மொத்தத்தில் ஆசி கந்தராஜாவின் எழுத்திலுள்ள மெய்மை, அழகியலுடன் இணைந்து அவரது தளத்திற்கு அணி சேர்த்து நிற்கின்றது. பிறந்த மண்ணின் நினைவும், அந்நினைவுகள் அரங்காடு மொழியும் ஆசியின் இடையறாச் சிந்தனையில் மண்டிக் கிடந்து அவரது கட்டுரைகளை, கதைகளை அமர காவியங்களாக்குகின்றன என்றால் அது மிகையாகாது.
*’பதிவுக’ளுக்கு அனுப்பியவர்: a.kantharajah@hotmail.com