நூல் அறிமுகம்: கவிதாவின் ‘என் ஏதேன் தோட்டம்’

நூல் அறிமுகம்: 'என் ஏதேன் தோட்டம்'பிச்சினிக்காடு இளங்கோஎல்லா நூல்களையும் படிப்பதுபோல் கவிதைநூலை எடுப்பதுமில்லை; படிப்பதுமில்லை. ஒரு புதினத்தை , வாழ்க்கை வரலாற்றை, சிறுகதைத்தொகுப்பை, கட்டுரை நூலைப் படிக்கும் வேகம், கவிதை நூலைப் படிக்கும்போது இருக்காது. ஓராண்டில் படித்த நூல்களைப் பட்டியலிட்டால் கவிதைநூல்கள் குறைவாக இருக்கும். நூல்களின் எண்ணிக்கையைக் கூட்ட நினைத்தால் கவிதை நூல்களை அதிகம் எடுத்துப் படிக்கலாம்.காரணம் பக்கங்கள் குறைவாக இருக்கும். என்னைப்பொறுத்தவரை கவிதைநூல்களைப்படிக்கும்போது 5 பக்கங்களுக்குமேல் விரைவாக படிக்கமுடியாது. காரணம் அது கவிதை. கவிதைச்சொற்கள் அனைத்தும் வரமாக வந்தவை. ஓர் ஆழ்நிலைப்பயணத்தில் விளைந்தவை. ஓர் அகத்தேடலில் கிடைத்தவை. அவை ஒவ்வொன்றும் மின்கடத்திகள்; மின்னல் உற்பத்திமையங்கள். அதனால்தான் ஒரு நத்தைநகர்தலைப்போல் என் பார்வை நகரும் சிந்தை சிறகுகள் கட்டிக்கொள்ளும். திடீர் மவுனம் சிறைபிடிக்கும் ஒரு வேள்வியாகவே வாசிப்பு அனுபவம் நிகழும். அதை மிக நேர்த்தியாய் என்னுள் நிகழ்த்தியநூல் ’என் ஏதேன் தோட்டம்’

சில நேரங்களில் கொய்யா மரங்களில் கைக்கு எட்டிய பழங்களைப் பறிப்பதுபோல் கவிதை வாசிப்பும் புரிதலும் வாய்த்தன. சில நேரங்களில், பூவில் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சியைப் பவ்வியமாகப் பிடிக்க எடுத்துக்கொள்ளூம் கரிசனம் தேவைப்பட்டது. இந்தத்தோட்டத்தில் நுழைந்து திரும்பிய நான் விவரித்தல் இல்லாத ஒரு நிலைக்குத்தள்ளப்பட்டேன். ஏதாவது சொல்லிவிட்டால் கவிதைகள் அடைகாக்கும்  அடர்த்தி நீர்த்திவிடுமோ என அச்சப்படுகிறேன். ஒரு புதிய பார்வை; புதிய மொழி; புதிய நடை எனக்குள்ளே ஐக்கியமாகிறது. புயல் உருவாகி கரையேறாமல் இருக்கும் நிலைதான் கவிதாவின் மனமும் வெளிப்பாடும். கவிதை என்ற சொல் ஒரு பொருளையே தரவில்லை இவருடைய கவிதையில். கவிதை  ஒரு நடையில் தன்னை வெளிப்படுத்துகிறது.

“ உணர்வுகளின் வசம் முற்றிலுமாகத் தன்னை ஒப்படைப்பதுதான் கவிதை” என்ற கவிதாவின் உள்ளத்தின் உரையிலிருந்து உணரமுடிகிறது. “அனைவரும்  புரிந்துகொள்ளுமளவு எளிமையாகத்தான் எனது கவிதைகள் கிறுக்கப்பட்டிருக்கின்றன” என்று கவிதா சொன்னாலும், அவர் சொன்னதற்கும் மேலாய் ஏதோ நமக்குப் பிடிபடாமல் தொணிப்பதும் நிகழ்கிறது .”unless you penetrate it with a sympathetic heart, you will miss it” OSHO சொன்னது இங்கேயும் பொருந்துகிறது. அதற்கென்று ஒரு மனம் தேவைப்படுகிறது என்பதில் ஐயமில்லை. 

“ இன்னும் எதுவும் அறியாதவள் என்று நினைத்தால்
  விதியிடம் இனி உன்னைக் 
  காக்கப்பழகு” என்பது பிரகடனமா? புரிதலுக்கான அழைப்பிதழா?. இரண்டும்தான்.

“உன் சுடுகாட்டிலேயே
உன்னைத் தூக்கிலிடும்
சிவராத்திரிக்கு
நான் கண்விழிக்கும்
நாள் வரும்” என்பது நியாயமான சபதம் சுமந்த ஏக்கமல்லவா!

“ இறைவனைத்தண்டிக்க ஏதுவழி” என்று கண்ணதாசன் பாடியதும் சிந்தனைக்கு வந்துபோகிறது.

“பரந்து கெடுக உலகியற்றியான்” என்ற வள்ளுவன் வாக்கும்தான் நினைவுக்கு வருகிறது.

“ அடிமைகளை நான் காதலிப்பதில்லை” என்பதில் இருக்கும் எதார்த்தம்; எதிர்பார்ப்பு ;கண்டிப்பு எத்துணை நியாயமானது.

அதுமட்டுமா?” நான் நடந்தால்
                  பூவாசம் என்று சொன்னாய்
                  அதனால் கேட்கிறேன்
                   எனக்கு வியர்த்திருக்கையில்
                  நீ பார்த்திருக்கிறாயா?
என்று கேட்பது பிதற்றலைக்கண்டா? பிதற்றாதே என்றா? இரண்டும்  இன்றைக்கு எதார்த்தம்தானே!

ஆனாலும் உண்மையாக வாழ கவிதா ஆசைப்படுவதுதான் தெரிகிறது அல்லது ஆசைப்படச் சொல்வது புரிகிறது.

“எல்லாம் என்னுடையவைதாம்
 என் சுய வாழ்வு
 தவிர”

இதிலிருக்கும் வெளிப்படையான உண்மை எளிதாகப் புரிந்தாலும்; இது எல்லாருக்குமானதாக இருந்தாலும் மறைந்துகிடக்கும் வலியை உணர்த்துகிறது.ஏனெனில் சுயத்தை இழந்தவாழ்வு

புலம்பெயராமலும் பலருக்கு நிகழ்கிறது. சகித்துக்கொண்டுதான் சாகசங்கள் புரிகிறோம் வெட்கமில்லாமல்.

“இமையின் நடனங்கள்
 காதல் கடிதங்கள்” என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். அது எப்படி நடனமாகும்? நடனம்   எப்படிக் காதல் கடிதமாகும்? அந்தக்கடிதத்தில் எந்த மொழி இடம்பெற்றிருக்கும்? இந்தக் காதல்

கடிதங்களை  எந்தமொழியில் எழுதியிருப்பேன்? என்று யூகித்தால் அது காதல் மொழியென்று சொல்லிவிடமுடியும். “ மூடித்திறந்த இமை இரண்டும் பார்பார் என்றது” என்ற கண்ணதாசன் பாடல்

நினைவுக்கு வருகிறதா? அந்தக்காதல்மொழியே புரியாமல் காதலித்தால் வாழ்க்கை எப்படி இனிக்கும் என்பதைக் கவிதா”

கற்றிருந்தால்
புரிந்திருக்குமோ
எனது மொழி
உனக்கும்
உனது மொழி
எனக்கும்” கேட்கிறார். இங்கே மொழிகூட ஒரு கருவி இல்லை என்பதை நிறுவியிருக்கிறார். புரிந்துணர்வு இல்லாதோருக்கு வாழ்க்கை புலப்படாது என்பதையும்; அவர்களுக்கு வாழ்க்கை ஒரு புதிர்

என்பதையும் வெளிப்படுத்துகிறார். இப்படி ஒரு கவிதை எழுதுவதற்குக் கிடைத்தச் சூழலை; அது தந்த பட்டறிவை ; பட்டறிவை வழங்கிய விலங்கைத்தான் வேதனையோடு சிந்திக்கிறேன். இதுவும் எல்லார்க்குமானதே.

“ ஈசல்” என்கிற கவிதை உணர்த்துவதை என்னால் உணர்ந்தவாறு எழுதமுடியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

இப்படிப்படித்து; புரிந்து; வேதனைப்படவைக்கும் கவிதைகள் நிரம்பிய தொகுப்புதான் கவிதாவின் “ என் ஏதேன் தோட்டம்’’. இந்தத்தோட்டத்தில் நுழைந்து திரும்பியது “ வேட்டைக்குச்சென்று வேதனையோடு வருவதுபோல” ஆகிவிட்டது.

கானல் நீர் காட்சிபோலவும், மாயமான் வேட்டைபோலவும் துல்லியமாக உணர்ந்து பிடிபடாத புரிதலும்; சொல்லமுடியாத வேதனையும் எச்சமாகிக் கனக்கிறது.

“முடிச்சுகள்” “வலியும் புன்னகைக்கும்” “தளத்திலிருந்து” “ஞாபகங்கள்” “ஆட்கொல்லி” “கடவுள் வந்தார்” என்று நான் குறித்துவைத்த கவிதைகளின் எண்ணிக்கை நீள்கின்றன.

“தூக்கத்தை அழைத்துக்
 காத்திருக்கிறேன்
 நிஜத்தில் வராத அந்தக்
கனவுகளுக்காக”

“ வரமாட்டாய் நீ
  என்பது தெரிந்தபின்னும்
  நடாத்தும்
  என் நெடும்பயணத்தின்
  குறுந்தவங்களாக”

“தொங்கப்போடும் தாலியில்
 எனது கண்ணியத்தையும்
 பெண்மையையும் நிரூபிக்க
இஷ்டமில்லை”

“நீங்கள் நினைக்கும் பெண்மை
என்னிடம் இல்லை
மன்னித்துவிடுங்கள்”

“கவிதைக்காய்க் காத்திருக்கும்
வெற்றுத்தாள்களின் மனதை
உணரமுடிந்தால்
புரிந்துகொண்டிருப்பாய் என்னையும்”

“ என் வாழ்க்கைத்தாள்
  விரிந்துகிடக்கிறது
 நான் கவிதை எழுத

தள்ளி நில்
நான் போகவேண்டும்”

நிசப்தத்தின் ஆளுமையில்
வெடித்துச் சிதறுகிறது
உன்னுடனான என் முதல் நாள் நினைவுகள்”

“ தோல்வி ஒப்பாத குழந்தைபோல்
  சிரித்துவைக்கிறேன் உலகின் முன்”

“சப்தம் இன்றி விழும்
 மஞ்சள் இலைபோல
நிசப்தமாய் மிதிபடுகின்றன
என் உணர்வுகள்
என் பாதைகளில்”

“அனுபவத்தை வரைந்தெடுக்க
வர்ணங்கள் என்னிடம்
தூரிகை உன்னிடம்” 

“நான் ஊனமுற்றவள்தான்
இவை அனைத்தும்
செயலற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும்
தருணங்களில்” ஏன் நாமும்தான்.

சோகங்களில் பட்டம் கட்டி
இன்பத்தை வானேற்றுகிறேன்”

“ பேயுலகம் பித்துப்போகிறது
 உன் மேய்தலில்”

“ எப்போதாவது புரிந்துகொள்வாயா
 சேர்ந்துவாழவே ஆசைப்படுகிறேன்
சார்ந்து அல்ல என்பதை”

இறுதியாக” துப்பாக்கிகளால் கண்ணீர்
                துடைப்பதை நிறுத்தச்சொல்”.
இது யாரைப்பார்த்து கவிதா சொல்கிறார் என்பதை யூகத்திற்கு விடுகிறேன்.

கண்ணீரைத் துடைப்பதுதான் முக்கியம். துப்பாக்கிகளால் துடைக்கமுடியாது என்பது உறுதி.

“கொடும் செய்கை நிறுத்தி
 மனிதர்களைப் பேசப் பழகு”

என்ற வேண்டுதலால் மானுடம் எங்கே போய்விட்டது ? என்ற கேள்வியும், எங்கோ போய்விட்டது! என்றவேதனையும்தான்  மிச்சமாகிறது. எதுவும் தெரியாத நான் “ஏதேன் தோட்டத்தில்” ஏதாவது பறித்தேனா?பறிகொடுத்தேனா?அல்லது ஏமாந்தேனா ? என்பதை நீங்களும் படித்தால் அறியக்கூடும்.  “ எனது நாட்டைவிட்டு வெளியேறுவது என்பது எனது வாழ்வைச் சுக்கு நுறாக உடைத்தது. இது எனக்குமட்டும் நேர்ந்த விதியல்ல” என்று ஒரு நேர்காணலில் பாலஸ்தீனக்கவிஞர் மஹ்மூத் தர்வீஷ்  சொன்னதை அடிமனத்தில் சுமந்துகொண்டு கவிதாவின் உணர்வோடு தோட்டத்தில் நுழைந்தால் ஒரு புரிதல் விளையும். வேர்கள் ஓரிடத்திலும் வினைகள் ஓரிடத்திலுமான தவிப்புகளின் வெளிப்பாடு; அவலத்தின் கோலம்;அற்புதம்.

என்னை நின்று நிதானிக்கவைத்தத் தொகுப்பு. உண்ணவும் எண்ணவும்  நிறைந்த கவிதைக்கனிகளின் தோட்டம். இலாவகமாக புரிந்துகொள்வதைக்காட்டிலும் ஆழமாக உணரவைக்கும் பெட்டகம்தான் கவிதாவின் “ என் ஏதேன் தோட்டம்”

elango@mdis.edu.sg