‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில் 25.09.2019 அன்று நடத்திய தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். – பதிவுகள்
சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக்கூறுகளையும் பண்பாட்டு உள்ளோட்டங்களையும் நாட்டார் வழக்காற்று இலக்கியங்கள் கொண்டு திகழ்கின்றன. இவ்விலக்கியப் பரப்பில் கல்வராயன் மலைவாழ் மலையாளி பழங்குடிகளின் பழமொழிகள் இக்கட்டுரையில் விளக்கம்பெறும்.
மூதறிவிலிருந்து தோன்றிய மொழி பழமொழி. நினைப்பிற்கும் எட்டாத பழங்காலத்திலிருந்தே மக்கள் வாழ்வில் வாழ்ந்து வருபவை என்பதை அதன் பெயரே உறுதிப்படுத்துகிறது.
தமிழில் பழமொழிக்கு மூதுரை, முதுமை, மொழிமை, முன்சொல், முதுசொல், பழஞ்சொல் என ஆறுபொருள் இருப்பதாகச் சேந்தன் திவாகரம் கூறுகின்றது.
பழமொழி என்ற சொல்லே பழமொழி பற்றிய சிறந்த வரையறையாக அமைந்துள்ளது என்கிறார் ஜான் லாசரஸ் அவர்கள். பழமொழி என்பது உலகுக்கு உணர்த்தும் உண்மையை ஒரு சிறிய வாக்கியத்தின் மூலம் சுருக்கிக் கூறுவது ஆகும் (2003:104).
தொல்காப்பியர் பழமொழியை, ‘முதுசொல்’ ‘முதுமொழி’ என்று குறிப்பிடுகிறார்