முன்னுரை
உலக மொழி வரலாற்றில் மேனாட்டு இலக்கண மரபுகளாகிய கிரேக்க லத்தீன் மரபுகளும் வடமொழி இலக்கண மரபும், தமிழ் இலக்கண மரபும் மிகப் பழமையானவைகளாகும், சிறப்புடையனவாகும். இப்பழமையான மூன்று மரபுகளின் தன்மை, வளர்ச்சி, வரலாறு ஆகியவற்றை ஆராயும் போது தமிழ் மரபு மற்ற இரு மரபுகளினின்றும் தனித்து நிற்கும் சிறப்புடையது என்பது புலனாகின்றது. என்கிற கூற்றுக்குகேற்ப தமிழ் இலக்கண மரபு பொருளதிகாரத்தின் பால் சிறப்பு பெற்றுள்ளது. பொருளதிகாரத்தில் பொருள் ,பொருளைப் புலப்படுத்தும் வடிவம், பொருளைப் புலப்படுத்தும் முறை ஆகிய மூன்றும் இலக்கிய ஆய்வுக்குத் தேவை. பொருளதிகாரம் அம்முறையில் மலர்ந்த பொது இலக்கணமாகும். பொருளே அகம் புறமாய், களவு கற்பாய் நிற்கும். செய்யுளியல் வடிவை நினைவுபடுத்தும் உவமை மெய்ப்பாடு பொருளியல் என்பன பொருள் புலப்பாட்டு முறைகளை அறிவிக்கும் இவ்வாறு மூன்று நிலைகளில் இலக்கியக் கூறுகளை பொருளதிகாரத்தில் காணலாம். தமிழ் மொழியில் தொல்காப்பித்திற்கு அடுத்து வந்துள்ள இலக்கண நூல்களில் நம்பியகப்பொருளும் ஒன்று, இந்நூலில் உள்ள களவியல் பகுதியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழர்களின் களவியல் சிந்தனை எந்த அளவில் தொல்காப்பியர் காலத்தில் இருந்து வந்துள்ளது என்பது புலப்படும் அந்த வகையில் இந்த இரண்டு பகுதிகளையும் ஒப்பிட்டுப்பாக்கும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பிய களவியல் உள்ளடக்கம்
தொல்காப்பியக் களவியல் பகுதியில், களவு ஒழுக்கத்தின் இயல்பு, காதல் முன்னைய நல்வினையால் விளைவது முதற் சந்திப்பின் விளைவு, மானுட மகளே எனத்துணிதல், தலைவன்கூற்று, தலைவன் தோழியிடம் பேசுதல், களவுப் புணர்ச்சிக்கு நிமித்தக் காரணங்கள், கைக்கிளைப் பெருந்திணை, அன்பின் ஐந்திணைக்கு உரிய உணர்வு நிலைகள், களவு ஒழுக்கத்தில் தலைவன் கூற்றுக்கள், தலைவியின் வேட்கைக் குறிப்பு, கண்களே உணர்த்தும் மகளிர் அல்ல நடையில் பேசுதல், களவுக் காலத்தில் தலைவி கூற்றுக்களும் மெய்ப்பாடுகளும், தலைவி சினந்து பேசும் இடம், தோழி கூற்று, செவிலக்கூற்று, நற்றாய் கூற்று, ஐயம் தெளிதல் காதலர்கள் தாமே சந்தித்துக் கொள்ளுதல், தலைவி குறியிடம் கூறுதல் தோழியும் களஞ்சுட்டல், தாய் என்பது செவிலியைக் குறித்தல் தோழி செவிலியின் மகள், தோழி உதவுங்காலம், தோழியின் உதவி பகற்குறி, இரவுக்குறி இடங்கள், தந்தை தமையன் அறிதல், இருவகைத் திருமணம் போன்ற நிகழ்வுகள் தொல்காப்பியரின் களவியல் பகுதியில் இடம்பெற்றுள்ளன.