நல்ல முயற்சியால் வழிமாறியது பெட்டகோவாகி ஓய்வு.
சொல்லடுக்கி தமிழின் கழுத்தைக் கட்டியவாறு இன்று
செல்ல மழைத்துளியென் செழுமைக்கு வல்லதமிழ்.
நில்லாத தமிழ்ப் பல்லக்குப் பயணம்.
தொல்லையும் உண்டு நிராகரிப்பு அலட்சியம்.
பணம், பயண அனுமதி, பயணச்சீட்டின்றி
பகிர்ந்திட மனிதரில்லாத வழிமாறிய பயணம்
பத்திரம், ஆரோக்கியம், நித்திரையூர் தொலைத்து
சித்திரவதையாம் நோயூருக்கு அனுப்பும்.
சுழலும் பூமிக்கு வயதாகியதால் அதன் சுந்தரமான
வாழ்வும் எம்மை உழல வைக்க
வெள்ளம் சுனாமி, வரட்சியாம் நோய்களென
நிழலும் நெருங்காது வழி மாற்றுகிறது.
குழலுள் காற்றாய் நாம் வெற்றியிசை மீட்டவேண்டும்.
வாழ்வின் சுழற்சியால் தடம் மாறாது
தாழ்வு நிலையேகாத நம்பிக்கைக் கைத்தடியோடு
தழலாய் எழும் தைரியம் ஒன்றினாலே
குழிகள் மேடுகள் தாண்டிக் கவனம் களவாடி
விழி வியக்கவோடும் பயணங்களே வாழ்க்கை.
1. மாற்றம்
ஏனோ அன்று புத்தாடை வாங்கியே தீரவேண்டுமென்று
பிடிவாதமாய் அங்காடித் தெருவில் நடந்துகொண்டிருந்தேன்
“அங்கவஸ்திரம் தலைக்கு அழகாய் இருக்கும்” என்ற கடைக்காரன்
“தோளில் மாட்டும் பூனூல் இலவசம்” என்றான்
திருப்தியின்றி வேறுகடையினுள் நுழைந்தேன்
“இது லேட்டஸ்டு மாடல் ஜிப்பா” என்று நீட்டியவன்
“இந்த டாலர் செயின் இலவசம்” என்றான்
விளைவு
சாம்ராணிப் புகை வீசிய கடையில் நான்
“இந்தத் துணி வாங்கினால் உங்களுக்குத் தாடி அழகாய்
முளைக்கும்” என்றான் கடைக்காரன்!
மூன்று நாள் சேவ் செய்யாத தாடியைத் தடவியவாறே
எதிரே வந்த துறவியைக் கடந்து வீட்டை அடைந்தேன் !
குளித்து முடித்து, எந்த ஆடையை உடுத்திக்கொள்வது? என்ற
யோசனையுடன் அலமாறியை அலசியபோது
அம்மாவின் கைப்பக்குவத்தை மீறி எழுந்த
மகனின் சிறுநீர் வாசம் “என்னை இருக்கப் பற்றிக்கொள்” என்று
என்முன் வந்து டேன்ஸ் ஆட
அதை எடுத்து உடுத்திப் பார்த்தேன்!
மடிப்பின் இடையில் ஒளிந்துகொண்டிருந்த
மஞ்சள் என்னைப் பார்த்து சைட் அடித்தது!
வண்ணம் தோய்ந்த சின்னம் நான்.
வானவில்லின் சாரம் நான்.
சின்னஞ்சிறிய சிறகை அசைத்துச்
சீட்டாய்ப்பறக்கும் சிறுபறவைநான்.
கூட்டைப் பிளந்து காற்றில் மிதந்து,
கண்டேன் காட்சி கண்கொள்ளா….!
ஏட்டில் அதுவர , பாட்டில் மதுதர,
காட்டும் சொல்லுக்குத் தமிழ் நில்லா….!
நித்தம் மலர்ந்தும், மதுவால் நிறைந்தும்,
சொக்கும் மலர்கள் தோழிகளே….!
சித்தம் குளிர்வேன், முத்தம் தருவேன்,
சுற்றம் அணைப்பேன், வாழியவே….!
கொட்டும் அருவியும் , முட்டும் மேகமும்,
சொட்டும் எழிலைச் சொல்வதற்கு….!
கட்டி அணைப்பதும், கனியாய் இனிப்பதும்,
சொக்கும் தமிழில் வேறெதற்கு….?
குதித்தே ஓடும் ஓடைதன்னில்,
குளித்தே ஆடும் மீன்கூட்டம்….!
பதித்தே தடத்தைப் பரவும் அதனைப்
பார்ப்போர் கொள்வார் முழு நாட்டம்….!
தென்றல் தவழச் சாரல் உதிரத்,
திங்கள் ஒளியில் திரள் காட்சி…..!
வந்திடும் உளத்தினில், வாழ்ந்திடும் நினைப்பினில்,
வந்தனம் இயற்கை வளம் சாட்சி…!
உங்கள் நண்பன் உற்றேன் உவகை….
உண்மை சொன்னால் பேருவகை….!
கண்ணில் கண்ட காட்சியை உரைத்தேன்,
கண்டீர் இதன்மேல் ஏது(உ)வகை…?
மனங்கவரும் மார்கழியில்
மகத்தான நாட்கள்வரும்
இந்துக்கள் கிறீத்தவர்கள்
எல்லோரும் பங்குகொள்வர்
வைஷ்ணவமும் சைவமும்
வாழ்த்திநிற்கும் திருவெம்பா
மார்கழியின் முக்கியமாய்
மனமாசை அகற்றிநிற்கும் !
ஒளிவிழா எனும்பெயரால்
உத்தமராம் யேசுபிரான்
வழிநிற்போர் அனைவருமே
வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
பீடுடைய மாதமாய்
மார்கழியும் அமைந்துதுநின்று
பெருமகிழ்சி வருவதற்கு
தைதனக்கு வழிகொடுக்கும் !
வானத்தில் இருளே பொங்க,
வரும்மழை ஆற்றில் பொங்க,
வரண்டமண் வாய்க்கால் பொங்கி,
வயலிலே பயிர்கள் பொங்க
எச்சிலிலை எடுத்துண்ணும் என் நண்பா உன்னிடத்தே,
கச்சிதமாய் ஒன்றுரைப்பேன் கவனம் , அதை மறைத்துண்ணு….!
பிச்சையெடுப் போரிடமும் பிடுங்கியே தின்றுவிடும்,
‘எச்சிக்கலை’ பலரின்று இருக்கின்றார் பதவிகண்டு….!
நாயை வீட்டிலிட்டு நல்விருந்து குவித்தாலும்,
வாயைத் திறந்தோடும் வாய்க்காற் கழிவுண்ண….!
சம்பளத்தைக் கூட்டித்தான் சர்க்கார் கொடுத்தாலும்,
கிம்பளப் பிச்சைபெறக் கிளம்புகிறார் கையேந்தி….!
புத்தாண்டே நீ வருக
புத்துணர்வை நீ தருக
நித்தமும் நாம் மகிழ்ந்திருக்க
நிம்மதியை நீ தருக
சொந்தம் எலாம் சேர்ந்திருக்க
சுப ஆண்டாய் நீவருக
எம்தமிழர் வாழ்வில் என்றும்
இன்பம் பொங்க நீவருக
வாருங்கள் என அழைத்து
வரும் மக்கள் வரவேற்கும்
சீர் நிறைந்த நாட்டிலிப்போ
சீர் அழிந்து நிற்கிறது
யார் வருவார் சீர்திருத்த
எனும் நிலையே இருக்கிறது
நீ வந்து புத்தாண்டே
நிலை திருத்தி வைத்துவிடு
எமது சிங்களச் சகோதரருக்கு:
நீங்களும் நாங்களும் ஒருவரடா!
நீங்களும் நாங்களும் ஒருவரடா
ஏங்குறார் எம்மக்கள் நீதிக்கடா.
பௌத்தம் எம் சைவப் பிள்ளையடா
கௌதமன் கந்தனின் தம்பியடா.
சாதியும் பேதமும் சகதியடா
பீதி எம் தீவினைப் பிளக்குதடா.
உம்மொழி-எம்மொழி இரண்டையுமே
நம் மொழிகள் என வளர்ப்பமடா.
ஆங்கிலம் எங்கள் இணைப்பு-மொழி
பாங்குடன் அதனையும் பேண்போமடா.
சிங்களத் தீவையே ஈழம் என்று
எங்களின் தொல் மொழி சொல்லுதடா.
சண்டைகள் எங்களைச் சிதைக்குதடா
பண்புடன் ஒற்றுமை படைப்போமடா.
சிறுமனச் சிந்தனை துறப்போமடா
வெறுப்பையும் பயத்தையும் ஒறுப்போமடா..
நடந்த பல் கொடுமைகள் மறப்போமடா
திடந்தரும் செயல்களால் வளர்வோமடா.
நீங்களும் நாங்களும் ஒருவரடா
ஏங்குறார் எம்மவர் நீதிக்கடா.
நான்கு சோதரராய் வாழ்ந்திடுவோம் – எம்
நான்கு மதங்களால் நலன்பெறுவோம்.
எமக்கும்உமக்கும் இது ஒர்இலங்கை – இங்கு
சமத்துவப் பிணைப்புடன் வாழ்வமடா.
1. குறைகளை விட்டால் பகைமை இல்லை!
இன்பங்கள் மட்டும் நிரந்தரம் இல்லை
இன்னல்கள் காணா வாழ்வும் இல்லை
இழப்புகள் இல்லாத மனிதரும் இல்லை
இடைஞ்சல்கள் தராத உறவும் இல்லை
அன்பினை வேணடாத உயிரும் இல்லை
அழிவினைத் தந்திடாத போரும் இல்லை
அறிவினை மயக்காத விதியும் இல்லை
அரசைக் கெடுக்காத சதியும் இல்லை
வஞ்சகம் என்றும் வெல்வது இல்லை
வாய்மை இழிவைத் தந்திடல் இல்லை
வலியவர் என்றும் ஆள்வது இல்லை
வறியவர் என்றும் தாழ்வது இல்லை
– பாரதியாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றுவோம்! பெரும் பேறாய் போற்றுகின்றோம்! –
முண்டாசுக் கவிஞனே நீ
மூச்சுவிட்டால் கவிதை வரும்
தமிழ் வண்டாக நீயிருந்து
தமிழ் பரப்பி நின்றாயே
அமிழ் துண்டாலே வருகின்ற
அத்தனையும் வரும் என்று
தமிழ் உண்டுமே பார்க்கும்படி
தரணிக்கே உரைத்து நின்றாய்