விஞ்ஞானம், பொறியியல் துறைகள் மட்டுமே உலக நாடுகளில் செல்வம் கொழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அந்த நாடுகளைப் போல் விஞ்ஞானம், பொறித்துறை ஆகியவற்றை விருத்தி செய்தே, இந்தியாவும் செல்வீக நாடாக முன்னேற வேண்டும்.
முதல் பிரதம மந்திரி, ஜவஹர்லால் நேரு
முன்னுரை: கடந்த ஐநூறு ஆண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகினாலும், தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகள் தலை தூக்கியதாகவோ, தமிழ்மொழியில் சிறப்பான விஞ்ஞான நூல்கள் படைக்கப் பட்டதாகவோ அறிகுறிகள் எவையும் காணப்பட வில்லை. அதே சமயம் ஐரோப்பாவில் விஞ்ஞானத் துறைகள் செழித்தோங்கி, தொழிற் புரட்சி ஏற்பட்டு, ஐரோப்பிய மொழிகளும் அவற்றை நூல்களில் வடித்து எதிரொலித்தன. வானியல், கணிதத்தில் முன்னோடி யான இந்தியா, பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து 500 ஆண்டுகள் மொகாலாயர் கைவசப்பட்டு, அடுத்து பிரிட்டன் பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டின் பாதி வரை ஆதிக்கம் செலுத்தி, அடிமைத் தேசமாக அகப்பட்டுக் கொண்டதால், தமிழ்மொழி உள்பட மற்ற அனைத்து இந்திய மொழிகளும் விஞ்ஞான வளர்ச்சிகளை நூல் வடிவில் காட்ட முடியாமல் போயின. ஆங்கில மொழியைப் பிரிட்டன் முதன்மை மொழியாக்கி, முறையான கல்வித்துறை நிறுவகங்களை நாடெங்கும் நிறுவினாலும், தேசம் விடுதலை அடைந்த பிறகுதான் இந்தியாவில் மூலாதார விஞ்ஞானத் துறைகள் பெருகவும், விஞ்ஞான நூல்கள் தோன்றவும் வாசற் கதவுகள் திறக்கப்பட்டன.
இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பி
பாரத கண்டத்தைச் சாணி யுகத்திலிருந்து [Cow Dung Age] அணுசக்தி யுகத்திற்கும், அண்டவெளி யுகத்திற்கும் இழுத்து வந்து, தொழிற் துறைகளைத் திறந்து வைத்த அரசியல் மேதை, பண்டித ஜவாஹர்லால் நேரு. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் விஞ்ஞானப் பொறித்துறைப் பாதையில், மேலை நாடுகள் போல் முன்னேறத் தொழிற் சாலைகள், மின்சக்தி நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேர்வு போன்ற துறைகள் தோன்ற அடிகோலியவர் நேரு. டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபாவைக் [Dr. Homi Jehangir Bhabha] கண்டு பிடித்து, நேரு 1954 இல் பம்பாயில் அணுசக்தி நிலைப்பகத்தைத் [Atomic Energy Establishment, Trombay] துவக்கச் செய்தார். விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாயைக் [Dr Vikram Sarabai] கண்டு பிடித்து, தும்பா ஏவுகணை மையத்தை [Thumba Rocket Launching Centre] நிறுவி, அவரைத் தலைவர் ஆக்கினார். இப்போது இந்தியா ஆசியாவிலே அணுவியல் ஆராய்ச்சியிலும், அண்டவெளி ஏவுகணை விடுவதிலும் முன்னணியில் நிற்கிறது. அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகளை மற்ற நாடுகளுடன் ஒப்பு நோக்கினால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற் துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாகச் செதுக்கி வைக்கலாம்! பண்டித ஜவஹர்லால் நேரு பாரதத்தின் பொற்காலச் சிற்பி எனப் போற்றப்படும் முற்போக்குச் சிந்தனையாளர்.