இந்தியா பல்வேறு மொழியினைப் பேசுபவர்களைக் கொண்ட நாடாக இருப்பதால், அனைத்து மொழி பேசுபவர்களும் அறிந்து கொள்வதற்கேற்றதாக ஆங்கில மொழியைத் தொடர்பு மொழியாகக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு நிர்வாகம், துறைகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் என அனைத்திற்கும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களும் தங்களுடைய வணிகப் பயன்பாட்டுக்கு ஆங்கில மொழியையே அதிகளவில் பயன்படுத்தி வருகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆங்கில மொழியே முதன்மைத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல், உலகின் பல்வேறு செயல்பாடுகள் ஆங்கில மொழியையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இன்றைய உலகில் அனைவரும் பயன்படுத்தி வரும் புதிய ஊடகமான இணையத்திலும் ஆங்கில மொழியே முதலிடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் தங்கள் தாய்மொழி மேல் பற்று கொண்டவர்கள் கணினி மற்றும் இணையப் பயன்பாட்டில் ஆங்கில மொழியைத் தவிர்த்துத் தங்கள் தாய்மொழியைப் பயன்படுத்தத் தேவையானவைகளை உருவாக்கிப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இப்படித் தமிழ் மொழியும் இணையப் பயன்பாட்டில் மிகக் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளிலும், தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வசித்து வருபவர்களும் இணையத்தில் தமிழ் மொழியினைக் கொண்டு வருவதற்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர்.
கணினி மற்றும் இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடுகள் எப்போது தொடங்கியது? அதில் யாரெல்லாம் பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்பது போன்ற பல்வேறு செய்திகளையும், இணையத்தில் தமிழ் மொழியில் எப்படி பங்களிப்பு செய்யலாம் என்பது போன்ற தகவல்களையும் உள்ளடக்கி ஏதாவது நூல் ஒன்று வெளியாகாதா? என்று புதிய தமிழ் இணையப் பயன்பாட்டாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டுவில் அமைந்திருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து வரும் முனைவர் துரை. மணிகண்டன் மற்றும் கரூர் மாவட்டம், மாயனூர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புவியியல்துறை விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் த. வானதி ஆகியோர் இணைந்து “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்” எனும் நூல் ஒன்றினை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள்.