தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10.
தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை ‘பதிவுகள்’ தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சிலவற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து ‘பதிவுகளு’க்கு அனுப்பியவர்: சந்திரவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது. தமிழ் விக்கிபீடியா பற்றி ஆக்கங்களை அனுப்ப விரும்புவோர் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்- பதிவுகள் –
தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள்
விக்கியூடகங்களின் தொலைதூரக் கனவு, “உலக அறிவு முழுமையையும் ஒவ்வொரு மனிதப் பிறவியும் கட்டற்ற முறையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு உலகைக் காண்பது” ஆகும். இந்தத் தொலைதூர உலகத்தை அடைவதற்கான சில நடைமுறைச் சாத்தியமான நோக்கங்களையும் செயற்பாடுகளையும் முன்னிறுத்தியே பன்மொழி விக்கித் திட்டங்கள் இயங்கிவருகின்றன. “கட்டற்ற உரிமங்களின் கீழ் அல்லது பொது உரிமத்தின் கீழ், கல்விசார் உள்ளடக்கங்களைச் சேகரித்தும், உருவாக்கியும் உலக அளவில் பரவச் செய்வதற்கு மக்களுக்கு ஆற்றல் அளித்து ஊக்குவிப்பது” என்பதே இத்திட்டங்களை இயக்கிவரும் விக்கிமீடியா நிறுவனத்தின் செயலிலக்கு.
பல்வேறு விக்கித் திட்டங்களை உருவாக்கி இயக்கிவரும் எல்லா மொழிச் சமூகங்களும் மேற்படி நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. இந்த நோக்கங்களை அடைவதில், எல்லா மொழிச் சமூகங்களுமே ஒரே மாதிரியான பின்னணிகளையும், வசதி வாய்ப்புக்களையும் கொண்டிருப்பதில்லை. பல்வேறு, வரலாற்று, அரசியல், சமூக பண்பாட்டுக் காரணிகள் இந்த மொழிச் சமூகங்களிடையே ஒரு சமமற்ற தன்மையை உருவாக்கி வைத்துள்ளன. இதனால், மேற்படி இலக்குகளை அடைய விரும்பும் மொழிச் சமூகங்கள் விக்கியூடகங்களின் உள்ளார்ந்த ஆற்றல்களையும், வளங்களையும் புரிந்துகொண்டு, தமது பின்னணிகளுக்கும் தேவைகளுக்கும் பொருத்தமான முறையில் அமைந்த திட்டங்களின் அடிப்படையில் செயல்படுவது முக்கியமானது.