[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க ‘புதிய பாதை’ என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் ‘புதிய பாதை’ என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான ‘டீச்சர்’ பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் ‘புதிய பாதை’ என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் ‘புதிய பாதை’ என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]
அத்தியாயம் 13: ஊர் நிலைமை!
“ஹலோ. ஹலோ”
எதிர்த் தரப்பில் குரல் மிக நைந்துபோய் பலஹீனமாகக் கேட்டது. கொழும்புக் ‘கோல்’ போல் தெரிகிறது. யாராயிருக்கும்…
“ஹலோ. ஹலோ. யார் பேசுறது?”
‘அக்கா. அக்கா. இது. அடக்கடவுளே. இது பெரிய தங்கச்சியின் குரல் அல்லவா. இவள் எங்கு நின்று பேசுகிறாள். கொழும்புக்கு எதற்காக வந்திருக்கிறாள்?
“யாரது பெரிய தங்கச்சியோ. எங்கயிருந்து பேசுகிறாய். எதுக்கும் உன்ரை நம்பரைத்தா. நான் உடனே எடுக்கிறன்.”
பெரிய தங்கச்சி நம்பரைத் தந்தாள். இவள் எடுப்பதாக கூறி விட்டு, ‘லைனை’க் ‘கட்’ பண்ணி விட்டுத் திரும்ப ‘டயல்’ பண்ணினாள். சிறிது நேரம் ‘லைன்’ பிசியாக இருந்தது. ஒரு மாதிரிக் கிடைத்து விட்டது.
“ஹலோ. ஹலோ. “யாரு அக்காவா? அக்கா. எதிர்த்தரப்பில் பெரிய தங்கச்சி விம்மத் தொடங்கினாள். தங்கச்சி என்ன விசயம் என்ன நடத்திட்டதெண்டு இப்படி இவள் முடிக்கவில்லை. பெரிய தங்கச்சி குறுக்கிட்டாள்.
“அக்கா. அக்கா. அம்மா. அம்மா”
“அம்மாவா. அம்மாவுக்கு என்ன?” இவள் குரலில் சிறிது பதட்டம் படர்ந்திருந்தது.
‘அக்கா. இம்முறை பெரிய தங்கச்சி ஓவென்று அழத் தொடங்கினாள்.
‘அக்கா அம்மா எங்களை எல்லாம் ஏமாத்திப் போட்டு போய் சேர்ந்திட்டா’
‘என்ன. இவளுக்கு ஒரு கணம் எல்லாம் சுழல்வது போன்றதொரு பிரமை எழத் தலையை இறுகப் பற்றிக் கொண்டாள். சிறிது நேரத்துக்குள்ளாகவே தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டாள்.