தோழர் குமரன் பொன்னுத்துரை முதலாம் நினைவுப் பேருரையும் அதனைத் தொடர்ந்த தோழர்களின் நினைவுகூரலும் கருத்துப் பகிர்வுகளும் நவம்பர் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் லா சப்பல் செயின்ட் புறுனோ மண்டபத்தில் நட்பார்ந்த சூழலில் நிறைவாக நடந்து முடிந்தது. பல்வேறு அரசியல் நம்பிக்கைகள் கொண்ட 75 நண்பர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமர்வுக்கு தோழர். அசோக் யோகன் தலைமையேற்று தோழர். குமரன் தொடர்பாகத் தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். குமரனோடு பழகிய பல்வேறு நண்பர்கள் மற்றும் தோழர்களின் குமரன் குறித்த கூட்டுநினவுகளைப் பகிர்ந்துகொள்வதாக அசோக் யோகனின் நினைவுகூரல் அமைந்திருந்தது.
” குமரனின் மறைவின் நான்கு மாதத்திற்கு பின்னர் அவரின் வாழ்வை கௌரவிக்கு முகமாக நாம் இன்று சந்திக்கிறோம். இன்று எமது நோக்கம் வாழ்ந்து மறைந்த குமரனின் வாழ்க்கையை பற்றிய மேலெழுந்தவாரியான போற்றிப் புகழ்தலையோ அல்லது தூற்றுதலையோ செய்வதல்ல. இந்த வகையான அணுகுமுறை அவரின் வாழ்வை வழிநடத்திய புறநிலை விதிகளைப் புரிந்துகொள்வதற்கோ மேலும் இன்றைய இளம் தலைமுறை அதிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்வதற்கோ எந்தப் பங்களிப்பையும் செய்யப்போவதில்லை. குமரன் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத ஜனநாயகக் கடமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் 1970 களில் ஈர்க்கப்பட்ட இளைஞர்களின் தலைமுறையை சேர்ந்தவர்களில் ஒருவராக இருந்தார். குமரன் ஒரு அரசியல் மனிதனாக தனது வாழ்க்கையின் பெரும் பகுதியினை வாழ்ந்திருந்தார். அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு தசாப்தங்களும் உலக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களோடும் அது இலங்கையில் உண்டாக்கிய தாக்கங்களோடும் இணைந்து பல வேறுபட்ட பரிணாமங்களை கொண்டதாக இருந்தது. அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு தசாப்தமும் மிகவும் முரண்பட்ட தன்மை கொண்டதாக இருந்தது. அவரது பலத்தையும் பலவீனத்தையும் புறநிலமைகளில் நிகழ்ந்த மாற்றங்களை பற்றிய ஒரு கவனமான படிப்பினைக்கூடாகவே அதனை புரிந்துகொள்ள முடியும் ”.