‘முரண்படுதலுக்கான காரணங்களைக்காட்டிலும், ஒன்றுபட்டு செயல்படுவதற்கான காரணங்கள் வலுவானவை’ என்ற கருத்தை முன்னிருத்தி தமிழ்நாட்டிலிருந்து இந்த (2013) ஆண்டு முதல் வெளியாகும் தளம் கலை, இலக்கிய காலாண்டிதழின்; ஏப்ரில், மே, ஜூன் இதழ் சமீபத்தில் கிடைத்தது. நாடகச்சிறப்பிதழாக வந்துள்ள இவ்விதழ் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பற்றிய ஆக்கத்தையும் பதிவுசெய்து அன்னாரின் நூற்றாண்டு காலத்தையும் மறக்காமல் நினைவுபடுத்தியுள்ளது. தளம் இதழை உலகெங்கும் வாழும் கலை, இலக்கிய, நாடக, திரைப்படச்சுவைஞர்கள் படிக்கத்தக்கதாக தற்பொழுது இணையத்திலும் பார்க்கமுடிகிறது. தளம் மூன்றாவது இதழும் வெளியாகியுள்ளது.
அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் பன்னிரண்டாம் ஆண்டுக் கம்பன் விழாவை 14.09.2013 சனிக்கிழமை 14.00 மணியிலிருந்து 20.00 மணிவரையும் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமைக் காலை 10.00 மணியிலிருந்து 20.00 மணிவரையும் சிறப்பாக நடத்துகிறது. நண்பர்களுடனும் உறவுகளுடனும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
மேலதிக விபரங்கள்: http://bharathidasanfrance.blogspot.fr
சொப்கா என்று அழைக்கப்படும் பீல் குடிமக்கள் ஒன்றியத்தின் மூன்றாவது வருடாந்தப் பயிற்சிப்பட்டறை சென்ற ஞாயிற்றுக்கிழமை மிசஸாகாவலியில் உள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. எமது சமூகத்திற்குப் பலன் தரும் நல்ல பல விடையங்கள் பற்றிய கருத்தரங்குகள் ஒவ்வொரு வருடமும் இத்தகைய பயிற்சிப்பட்டறையில் இடம் பெறுகின்றன. அந்த வகையில் இவ்வருடமும் அவை நிறைந்த நிகழ்வாக இந்தப் பயிற்சிப்பட்டறை அமைந்திருந்தது. நிழ்ச்சியின் ஆரம்பத்தில் சொப்காவின் உபதலைவர் திரு. குரு அரவிந்தனின் வரவேற்புரை இடம் பெற்றது. சமூக விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், சமூகத்திற்குத் தேவையான பல பலனுள்ள விடையங்கள் இந்த நிகழ்வில் ஆராயப்பட உள்ளதாகவும், இத்தகைய நிகழ்வுகளுக்கு ஒவ்வொரு வருடமும் வருகைதந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஆதரவு தரும் அங்கத்தவர்களையும், பொதுமக்களையும் பாராட்டுவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டு, நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றிய திரு. பொன் பாலராஜன் அவர்களையும், திரு. நடராஜா மூர்த்தி அவர்களையும் பாராட்டி நன்றிகூறி, இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சொப்கா நிர்வாகசபை அங்கத்தவர் செல்வி. ராகுலா சிவயோகநாதனுக்கும், பல்கலைக் கழகத்தில் தனது முதலாண்டு அனுபவத்தை ஏனைய மாணவ, மாணவிகளுடன் பகிர்ந்து கொண்ட அங்கத்தவர் செல்வி. றுவிங்கா ஸ்ரீசண்முகதாசன் அவர்களையும் வரவேற்று நன்றி கூறினார்.
கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில் வெளிவரத் தொடங்கி, நாளும் பொழுதும் உரம்பெற்று வளர்ந்து, ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக சிலிர்த்து நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான போராட்டம் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததாகவே நகர்ந்துவந்துள்ளது. ஜுன் 1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும், பூபாலசிங்கம் புத்தகசாலையையும் கொழுத்திய பேரினவாதத்தின் கண்களுக்கு ஈழநாடு காரியாலயமும் தப்பிவிடவில்லை. அதன் பின்னர் ஈழப் போராளிகளின் குண்டுத் தாக்குதலுக்கும் இலக்காகி, 1988 பெப்ரவரியில் தன்னைக் காயப்படுத்திக் கொண்டது. பின்னர் தொடர்ச்சியான பத்திரிகைச் செய்தித் தணிக்கைகள், அச்சுறுத்தல்கள், பொருளாதார நெருக்கடிகள் என்று சுற்றிச் சூழ்ந்த நிலையில் தொன்னூறுகளின் ஆரம்பத்தில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.
காவ்யா தமிழ் இதழ் மற்றும் திலகபாமா கவிதைகள் நூல் வெளியீட்டு விழா! [தகவல்: திலகபாமா mathibama@yahoo.com ]
தமிழ்த்துறை சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி (ஈரோடு) / காவ்யா அறக்கட்டளை இணைந்து ‘காலத்தின் கல்வெட்டு புலவர் செ.இராசு’ எனும் தலைப்பில் ஒருநாள் தேசியக் கருத்தரங்கை அக்டோபர் திங்கள்…
நண்பர்களே, பேசாமொழி 9 வது இதழ், லெனின் விருது சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. பேசாமொழி இப்போது இணையத்தில் படிக்க கிடைக்கிறது. இந்த இதழில், டிராட்ஸ்கி மருது, வெங்கட் சாமிநாதன்,…
இலண்டன் மாநகரில் நடைபெற்ற நான்காவது ‘இலக்கிய மாலை” நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகின. கடந்த சனிக்கிழமை (10 – 08 – 2013) மாலை இலண்டன் ‘மனோர் பார்க்” (Manor Park) என்ற இடத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்தில், சமூகத் தொண்டரும் இலக்கிய அபிமானியுமான திரு செல்லையா வாமானந்தன் தலைமையில் ‘இலக்கிய மாலை” நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் நூல்களான ‘இப்படியுமா..?” – சிறுகதைத் தொகுதி, ‘அழியாத தடங்கள்” – கட்டுரைத் தொகுதி, ‘தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?”, ‘மண் மறவா மனிதர்கள்”, ‘பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்” – (இளங்கோவன் கதைகள் இந்தி மொழிபெயர்ப்பு) மற்றும் இளங்கோவன் பதிப்பித்த ‘இலக்கிய வித்தகர்” த. துரைசிங்கத்தின் ‘தமிழ் இலக்கியக் களஞ்சியம்” ஆகிய ஆறு நூல்களே அறிமுகமாகின. இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், எழுத்தாளர் துரை. சிவபாலன் நூல் அறிமுகவுரையாற்றினார். கணினி அறிஞரும் இலக்கிய அபிமானியுமான திரு சிவா பிள்ளை நூல் வெளியீட்டுரை நிகழ்த்தி நூல்களை வழங்கினார். விருதுகள் பெற்ற நாவாலாசிரியர் வவுனியூர் இரா. உதயணன் முதற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்.
சென்ற சனிக்கிழமை கனடா மிஸசாகாவில் டிக்ஸி வீதியில் உள்ள நூல்நிலைய பார்வையாளர் மண்டபத்தில் பரதகலாவித்தகர் ஸ்ரீமதி. லலிதாஞ்சனா கதிர்காமனின் ஆக்கத்தில் அமிர்தார்ணவம் என்ற நடனக்கலைக்குரிய பாடல்களும், அதற்குரிய முத்திரைகளும் அடங்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் திரு. திருமதி குரு அரவிந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.எஸ். மதிவாசன், திரு. ஸ்ரீமதி பவானி ஆலாலசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். முதலில் மங்களவிளக்கேற்றி, கனடிய தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, அமிர்தாலயா நுண்கலைக்கல்லூரிக் கீதம் போன்றன இசைக்கப்பட்டன. தொடர்ந்து வரவேற்புரை நிகழ்ந்தது. அடுத்து திருமதி வாசுகி நகுலராஜா அவர்களால் நூல் ஆய்வு செய்யப்பட்டது. சிறுவர்களுக்கு ஏற்ற பாடல்களை எடுத்து அதற்கு எப்படி அபிநயம் பிடிக்கலாம் என்பதை சிறப்பாகவும் எழிமையாகவும் இந்த நூல் எடுத்துக் காட்டுவதாகவும், வர்ணத்தில் படங்கள் அச்சிடப்பட்டிருப்பதால் பலராலும் வரவேற்கப்படும் என்றும் தனது ஆய்வுரையில் அவர் குறிப்பிட்டார். அடுத்து உரையாற்றிய கலைக்கோயில் அதிபர் குகேந்திரன் கனகேந்திரம் அவர்கள் இந்த நூலில் உள்ள சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி, அமரரான தங்கள் சகோதரியும் இசையாசிரியையுமான திருமதி. அமிர்தாஞ்சனா சுரேஸ்வரன் அவர்களின் நினைவாக தமிழிலும், ஆங்கிலத்திலும் படங்களோடு கூடிய விளக்கங்கள் அடங்கிய இந்த நூலை வெளியிட்ட ஸ்ரீமதி லலிதாஞ்சனாவிற்கு நன்றி தெரிவித்தார்.