என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் முப்பது
அவர்கள் தோணியில் ஏறியதும் முதல் வேலையாக ராஜா என்னை நோக்கி வந்தார். எனது மேல் சட்டையின் கழுத்துப் பட்டையைப் பிடித்து உலுக்கியவாறே என்னிடம் கேட்டார்:
“எங்களை விட்டு ஓட முயன்றிருக்கிறாய், இல்லையா, பையா? எங்களின் நட்பு உனக்கு சலிப்புத் தட்டிவிட்டதா? ஹாஹ்?”
நான் கூறினேன் “அப்படி இல்லை அரசே! நாங்கள் அப்படி நினைக்கவில்லை. தயை கூர்ந்து அப்படி நினைக்காதீர்கள், மாட்சிமை பொருந்திய மன்னரே!”
“நல்லது. அப்படியானால், நீ என்ன செய்ய முயற்சித்தாய் என்று கூறி விடு. இல்லாவிட்டால், உன் உடலில் உள்ளிருக்கும் அனைத்தையும் வெளியே உருவி விடுவேன்.”
“சத்தியமாக என்னவெல்லாம் நடந்ததோ அதை அப்படியே கூறிவிடுகிறேன், மேன்மை பொருந்திய ராஜாவே! என் கரத்தைப் பிடித்து அழைத்துச் சென்ற அந்த மனிதன் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தான். கடந்த வருடம் என் வயதில் ஒரு சிறுவன் இறந்து போனது பற்றி அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான். அதே போன்றதொரு பயங்கரமான ஆபத்தில் இன்னொரு சிறுவன் இப்போது இருப்பதைப் பார்க்க அவனுக்கு வருத்தமாக உள்ளது என்று கூறினான். தங்க மூட்டையைக் கண்டதும் அனைவரின் கவனமும் சிதறி சவப்பெட்டியை நோக்கி ஓடிய சமயம், அவன் என் கையை விடுத்து, “ஓடிச் செல். இல்லாவிடில், அவர்கள் உன்னைத் தூக்கில் போடுவது நிச்சயம்.” என்று என் காதில் கிசுகிசுத்தான். எனவேதான் நான் அங்கிருந்து ஓட்டம் எடுத்தேன்.”
“அங்கேயே நிற்பது எனக்கு நல்லதல்ல என்று தோன்றியது. என்னால் எதுவும் செய்ய முடியாது. தப்பிக்காமல் அங்கேயே இருந்து தூக்கில் தொங்குவதை நான் விரும்பவில்லை. கண் மண் தெரியாது ஓடி இங்கே வந்து தோணியைக் காணும் வரை நான் ஓட்டத்தை நிறுத்தவில்லை. இங்கே வந்து சேர்ந்ததும் ஜிம்மை அவசரமாகத் தோணியை செலுத்தச்சொன்னேன். இல்லாவிடில், நான் பிடிபட்டு தூக்கில் தொங்க நேரிடும் என்ற பயத்தால்தான். நீங்களும், பிரபுவும் இறந்திருப்பீர்கள் என்று நான் அஞ்சினேன் என்றும் கூறினேன். உங்களின் பரிதாப நிலைக்காக நான் மிகவும் மனம் வருந்தினேன். ஜிம்மும் அப்படியே வருந்தினான். இப்போது நீங்கள் வந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் நாங்கள் இருவரும் கட்டுக் கடங்காத மகிழ்ச்சியை அடைந்தோம். இது உண்மையா என்பதை ஜிம்மிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.”