அன்ப! தங்களது 12-03-2016 திகதியிட்ட வாசிப்பும்யோசிப்பும் பகுதியிலே, ‘அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வெளியான படைப்புகளை, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது’ எனக்குறிப்பிட்டதோடு அவ்வாறான செயற்பாடுகளுக்குச்சான்றுகளாக என்னுடையதும் மற்றும் நண்பர் முனைவர் இ.பாலசுந்தரம் அவர்களுடையதுமான ஆய்வுச்செயற்பாடுகளைச்சுட்டி, எம்மிருவருக்கும் கௌரவமளித்திருந்தீர்கள். அதற்காக முதற்கண் எனது மனநிறைவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்தொடர்பிலே மேலும் ஒரு நன்றிக்கடப்பாட்டை உங்களுக்கும் நீங்கள் சுட்டியுள்ள ஏனைய இணைய இதழ்ச்செயற்பாடாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்கும் என்போன்ற ஆய்வளர்களுக்கும் உளது என்பதையும் இங்கு குறிப்பிட விழைகிறேன். இது இணைய இதழ்களின் ஆய்வுநிலைப் பயன்பாடு தொடர்பானதாகும். இத்தொடர்பிலான சிறு விளக்கமொன்றை இங்கு முன்வைக்கவேண்டியது எனது கடமையாகிறது..
ஆய்வு அல்லது ஆராய்ச்சி எனப்படும் செயன்முறையானது பல படிநிலைகளைக் கொண்டதுஎன்பதை அறிவீர்கள். அவ்வாறான படிநிலைகளைக் கல்வியாளர்கள்முக்கியமான மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.
முதலாவது கட்டம் :ஆய்வுகளுக்கான தரவுகளைத் தேடித்திரட்டல்.
இரண்டாவது கட்டம்:திரட்டப்பட்டவற்றைத்தொகை வகைசெய்து விளக்கியுரைத்தல் மற்றும் விமர்சித்தல் .
மூன்றாவதுகட்டம்:குறித்த ஆய்வுப்பொருண்மை சார்ந்த புதிய எண்ணக்கருக்கள்,
புதிய கருதுகோள்கள் ஆகியவற்றை உருவாக்கி அவ்வாய்வுப்பரப்பைப் புதிய கட்டத்துக்கு வளர்த்துச்செல்லுதல் .