எமது ஈலாப் [ELAB] மூத்த எழுத்தாளர் சங்கத்தின் இன்றைய இணைப்பாளர் கா.வி.யின் மேற்படி நூல் அண்மையில் அவரின் விஜய் வெளியீட்டகத்தால் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தின் உதவியுடனும் ஈலாப்பின் ஆசீர்வாதத்துடனும் வெளியிடப்பட்டுள்ளது. சங்ககால தமிழ் இலக்கியங்களில் வரும் 70 கதாநாயகிகளைப் பற்றி ஆழ்ந்து சுழியோடிப் பெற்ற தன் முத்தான கருத்துக்களை நூலாசிரியர் ஒளிபாய்ச்சி உலகிற்கு ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டுகிறார். அத்துடன் நம்ஆசிரியர் அந்த 70 கதாநாயகிகளின் திருநாமங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தன்நூலின் பின்அட்டையில் வரிசையாக அச்சிட்டும் இருக்கிறார்.
இக் காவிய அரிவையரின் அணிவகுப்பில் கங்காதேவி, சத்தியவதி, அம்பை, அம்பிகை, அம்பாலிகை, காந்தாரி, குந்தி ஆகிய மகாபாரதக் கதை-மகளிரில் தொடங்கி குண்டலகேசி, பத்தாதீசா, மாதிரி என்னும் எழுபதின்மர் இடம்பிடித்துப் பிரகாசிக்கின்றனர்.
ஆசிரியர் தன் கோதையரைத் தேடிக் கண்டுபிடித்த முக்கிய இலக்கியப் பெட்டகங்களாவன: முன்கூறிய மகாபாரதம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கம்பராமாயணம் ஆகும். அவற்றுள் 53 பேரையும், அதன் பின், தமிழர் வரலாற்றில் நிலைத்து மினுங்கிய பெண்-புலவர்களாகிய ஒளவையார், ஒக்கார் மாசாந்தியார் முதல்… வெறிபாடிய காமக்கண்ணியர் வரை… மிகுதி 17 பேரையும் எம் ஆசிரியர், விதைகளை மணந்து சென்று பொறுக்கித் தேர்ந்தெடுக்கும் ஓர் அணிலைப் போல் பொறுக்கி எடுத்திருக்கிறார் என்றால் மிகையாகாது.