‘மூத்த’ எழுத்தாளர்களும், முகநூலும்!
சமூக ஊடகங்களை அண்மைக்காலமாகப்பல மூத்த எழுத்தாளர்கள் பலர் பாவித்து வருவது ஆரோக்கியமானதொரு செயற்பாடாகவே நான் கருதுகின்றேன். இங்கு நான் பாவித்துள்ள மூத்த எழுத்தாளர்கள் என்னும் பதம் அமரர் எஸ்.பொ. அவர்களுக்குப் பிடிக்காததொரு பதம். அவருடன் ஒருமுறை ஆறுதலாக உரையாடிக்கொண்டிருந்தபொழுது ‘அதென்ன மூத்த எழுத்தாளர்’ என்று அவர் பரிகாசம் செய்தது ஞாபகத்துக்கு வருகின்றது. மூத்த என்னும் சொற்பதத்தை வயதில் மூத்த, எழுத்துத்துறை அனுபவத்தில் மூத்த என்னும் கருத்துப்பட பாவிக்கலாம் என்பதால் அவ்விதம் பாவிப்பதில் தவறில்லையென்றே கருதுகின்றேன். அதனாலேயே இங்கும் அப்பதத்தைப்பாவிக்கின்றேன்.
அந்த வரிசையில் அண்மைக்காலமாக முகநூலில் அதிகம் சந்திக்கக்கூடியவர்களிலொருவராக எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களையும் குறிப்பிடலாம். இன்னுமொருவர் எஸ்.எல்.எம் ஹனீபா. மேலும் ‘அலை’ யேசுராசா, மேமன்கவி, வி.ரி.இளங்கோவன் என்று பல ஈழத்து எழுத்தாளர்களைக்குறிப்பிடலாம். இவர்களைப்போன்றவர்களுடனெல்லாம் கருத்துகள் பரிமாறுவதைச் சாத்தியமாக்கியுள்ளது முகநூல். மேலும் பல்வேறு நாடுகளிலும் வாழும் பல்வேறு தலைமுறைகளைச்சேர்ந்த எழுத்தாளர்கள் சந்திக்குமோரிடமாக விளங்குகின்றது முகநூல். இது முகநூலின் முக்கியமான பயன்களிலொன்று. இவற்றை மூத்த எழுத்தாளர்கள் எல்லாரும் விளங்கியுள்ளார்கள் என்பதற்கில்லை. ஆனால் அவ்விதம் விளங்கிய சிலர் , இவ்விதமான சமூக ஊடகங்களை ஆக்கபூர்வமாகப்பாவிக்கின்றார்கள். இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது; ஆரோக்கியமானது.
எஸ்.எல்.எம்.ஹனீபா அவர்களின் சிறுகதைத்தொகுப்பான ‘மக்கத்துச்சாலை’யினி ‘நூலகம்’ தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி: http://www.noolaham.net/project/01/90/90.htm
நந்தினி சேவியர் அவர்களின் ‘அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்’ சிறுகதைத்தொகுப்பினையும் ‘நூலகம்’ இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான முகவரி: http://noolaham.net/project/03/230/230.pdf’
‘அலை’ யேசுராசா அவர்களை அவரது எழுத்தினூடு அறிந்திருக்கின்றேன். அவருடனான கருத்துப் பரிமாறல்களைச் சாத்தியமாக்கியுள்ளது முகநூல். பதிவுகள் இடுவதுடன், அவ்வப்போது ஏனைய பதிவுகளுக்குத் தன் கருத்துகளையும் தெரிவிக்கத்தயங்காதவர் இவர்.