வாசிப்பும், யோசிப்பும் 152 : ‘சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?’ பாடலுக்குச் சொந்தக்காரர் யார்?

நித்தி கனகரத்தினம் , கமலநாதன்அண்மையில் மறைந்த கமலநாதன்தான் ‘சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே?’ பாடலை இயற்றிய விடயமே பலருக்கும் அவரது மறைவுக்குப்பின்னர்தான் தெரிய வந்து வியப்பினை ஏற்படுத்தியது. பலரும் இதனை நித்தி கனகரத்தினமே எழுதியதாக நினைத்திருந்தார்கள். நானும் அவ்விதமே எண்ணியிருந்தேன். இது பற்றி வானொலி நிலையமொன்றுக்கு அளித்த நேர்காணலொன்றில் நித்தி கனகரத்தினம் அளித்த விளக்கத்தில் தனக்கு இப்பாடலை எழுதியவர் கமலநாதனே என்ற விடயம் 2001இல் தான் தெரிய வந்தது என்று கூறியிருக்கின்றார். அதே சமயம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான பாடலுக்கு அவரைக்குறிப்பிடுவதுபோல், இந்தப்பாடலையும் தான் இசைமைத்து, மெருகூட்டிப்பாடிப் புகழடைய வைத்ததால் தனக்குத்தான் அந்தப்பெருமை இருக்க வேண்டும் என்னும் கருத்துப்படக் கருத்தொன்றினையும் உதிர்த்துள்ளார். அந்த வானொலி நேர்காணலுக்கான இணைப்பினை எழுத்தாளர் முருகபூபதி மின்னஞ்சல் மூலம் அறியத்தந்திருந்தார். நன்றி திரு. முருகபூபதி அவர்களுக்கு.

http://www.sbs.com.au/yourlanguage/tamil/en/content/chinna-maamiye-controversy

ஒரு பாடலின் இசைக்கு இளையராஜா பொறுப்பாக இருந்தாலும், அதற்குரிய பாடலை எழுதியவரின் பெயரை அவர் மறைப்பதில்லையே. அது போல் இந்தச் ‘சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?’ பாடலை இசையமைத்துப்பாடிப் புகழடைய வைத்தவர் நித்தி என்றாலும், அப்பாடலை எழுதிய பாடலாசிரியரான அமரர் கமலநாதனின் பெயர்  உரிய முறையில் குறிப்பிடப்பட்டுக் கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

2001ஆம் ஆண்டிலிருந்து நித்தி கனகரத்தினத்துக்குத் தெரிந்திருப்பதால், அதன் பிறகு நடைபெற்ற நித்தியின் நிகழ்ச்சிகள் , நேர்காணல்கள் எல்லாவற்றிலும் பாடலாசிரியர் கமலநாதனின் பெயர் குறிப்பிடப்பட்டு , நிகழ்ச்சிகளில் உரிய முறையில் விளக்கமளிக்கப்பட்டு, . அவருக்கு  நன்றி தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 151 : ஜும்பா லாகிரியின் ‘திரு.பிர்ஷடா உணவுண்ண வந்தபோது’!

ஜும்பா லாகிரியின் ‘திரு.பிர்ஷடா உணவுண்ண வந்தபோது’

Jhumpa Lahiri‘Interpreters Of Maladies.’ சிறுகதைத்தொகுதிகாகப் புலியட்சர் விருதினைப் பெற்றவர் ஜும்பா லாகிரி. இவரது எழுத்து நடை, கதைப்பின்னல் ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் சுவையாக, வாசிப்பவர் நெஞ்சினை அள்ளும் வகையில் அமைந்திருக்கும் இவரது எழுத்து நடை.

இவரது மேற்படி தொகுப்பிலுள்ள சிறுகதையொன்று அன்றிலிருந்து இன்று வரை மனதில் பசுமையாகவுள்ளது. அது மேற்படி தொகுப்பிலுள்ள சிறுகதைகளிலொன்றான ‘திரு.பிர்ஷடா உணவுண்ண வந்தபோது’ (When Mr.Pirzada Came to Dine.) என்னும் சிறுகதை  திரு.பிர்ஷடா கிழக்குப் பாகிஸ்தானைச்சேர்ந்தவர். பாகிஸ்தான் அரசின் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா வந்திருப்பவர். அவரது குடும்பத்தினர் டாக்காவிலுள்ள அவரது மூன்று மாடி வீட்டில் வசித்து வருகின்றார்கள், அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் உயிரியலில் விரிவுரையாளராக இருப்பவர். திருமணமாகி இருபது வருடங்களாக அவருக்கு ஆறிலிருந்து பதினாறு வரை வயதினரான ஏழு பெண் குழந்தைகள். எல்லாருடைய பெயரும் A என்னும் முதல் எழுத்தில் ஆரம்பமாகும்.

திரு.பிர்ஷ்டா அமெரிக்காவிலிருக்கும் சமயம் பாகிஸ்தான், சுயாட்சி கேட்டுப்போராடிய கிழக்குப் பாகிஸ்தான் மீது அடக்குமுறைகளைக்கட்டவிழ்த்து விடுகிறது. இக்காலகட்டத்தில் கிழக்குப்பாகிஸ்தானில் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படுகின்றனர். இக்காலகட்டத்தில் நடைபெறும் கதைக்களத்தைக்கொண்ட கதை ‘திரு.பிர்ஷ்டா உணவருந்த வந்தபோது.’

Continue Reading →

சங்க இலக்கியக் களவியற் பாடல்கள் வெளிக்கொணரும் அம்பலும் அலரும்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

ஓத்த காதலர்கள் பிறர் அறியாதவாறு தங்கள் திருமணத்திற்கு முன்பாகத் தனியிடத்திற்; கூடி இன்புற்று மகிழ்வதைக் காதற் களவியல் எனக் கூறுவர். ஓத்த தலைவனும் தலைவியும் எதிர்ப்படும் நிலையில் காதற்களவு ஏற்படும். இதிற் தொடர்புடைய தலைமகன், தலைமகள் ஆகிய இருவரின் இயல்பினை நன்கறிந்து, அவர்களுக்கு இவ்வண்ணம் இலக்கணம் அமைத்துத் தந்துள்ளார் தொல்காப்பியர். தலைமகன் இலக்கணமாக ‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன’- (பொருள்.95) என்று – ‘பழிபாவங்களுக்கு அஞ்சி, குற்றச் செயல் புரியாது, அறிவுடையவனாய் இருத்தல் தலைவனுக்குரிய இயல்பாகும்’ என்று   கூறுகின்றார். இதனால், தலைமகள் வேட்கைக் குறிப்பை உணர்ந்த தலைமகன், அந்நிலையில் புணர்ச்சியை உடன் நிகழ்த்தாது வரைந்து கொண்டதன் பின்பே அதை நிகழ்த்துவோம் என்பதும் தெளிவாகின்றது. தலைமகளுக்கும் இவ்வாறு இலக்கணம் அமைத்துத் கூறுகின்றது தொல்காப்பியம்.

‘அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப.’ –  (பொருள்- 96)

அச்சம், நாணம், மடம் (பேதைமை) ஆகிய முக்குணங்களும் தலைவியருக்கு என்றும் முந்தி நிற்றல் மகளிர்க்குரிய ஒரு சிறப்பாகும். அதனால் அவர்கள் வேட்கையுற்றவிடத்தும் புணர்ச்சிக்கு இசையாது வரைந்தெய்தலையே  வேண்டி, ஒதுங்கி நிற்பர். தொல்காப்பியர் காலத்து மகளிர்க்கு அச்சம், நாணம், மடம் ஆகிய முக்குணங்கள் மட்டுமே இருந்துள்ளமையும் தெளிவாகின்றது. தற்கால மகளிர்க்கு உள்ள ‘பயிர்ப்பு’ என்ற நான்காவது குணம் பின்னெழுந்ததாகக் கருதலாம்.

தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது குறியிடம் அமைத்துக் கூடுவர். பகலிற் கூடுமிடம் ‘பகற்குறி’ என்றும்,  இரவிற் கூடுமிடம் ‘இரவுக்குறி’ என்றும் கூறுவர்.

‘குறியெனப் படுவது இரவினும் பகலினும்
அறியக் கிளந்த ஆற்ற தென்ப.’ – (பொருள். 128)

இரவுக்குறிக்குரிய இடமானது, இல்லத்துக்கு அண்மித்ததாகவும் அவர்கள் பேசுவதை வீட்டிலுள்ளோர் கேட்குமாறு அமைந்ததாகவும் இருக்க வேண்டுமென்று சூத்திரம் கூறும்.

Continue Reading →

கிராமிய விளையாட்டுக் கலைமரபு!

அறிமுகம்
கிராமிய விளையாட்டுக் கலைமரபு! சு. குணேஸ்வரன் தமிழர்தம் பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள் உயிர்துடிப்புள்ளவை. உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் மக்களின் ஒருமைப்பாட்டுக்கும் பண்பாட்டுப் பேணுகைக்கும் ஆதாரமானவை. நாட்டாரியல் என்ற பெருந்துறையினுள் பெரிதும் பேசப்படாத ஆய்வுக்கு உட்படுத்தப்படாத கலை வடிவமாக நாட்டுப்புற விளையாட்டுக்கள் உள்ளன.

நாட்டுப்புறவியலை  இலக்கிய வகைகள் எனவும் கலை வகைகள் எனவும் இரண்டு பிரிவாக நோக்கலாம். பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், கதைப்பாடல்கள் “இலக்கிய வகை” என்ற பகுப்பில் அடங்குகின்றன. நாட்டுப்புற நடனங்கள், நடையுடை பாவனைகள், விளையாட்டுக்கள், கைவினைக் கலைகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியன  “கலைவகை” என்ற பகுப்பில் அடங்குகின்றன.
கிராமிய விளையாட்டுக்கலை

இன்றைய உலகப்போக்கில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்கள் மறக்கடிக்கப்பட்டவையாகவோ அல்லது மடைமாற்றப்பட்டனவாகவோ (வழிமாற்றப்பட்டதாக) உள்ளன என்று கூறுவதில் மிகையில்லை. கிராமம் தழுவிய பண்பாட்டிலிருந்து நகர்ப்புறப் பண்பாட்டிற்கு மக்களின் வாழ்வு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பதால் பாரம்பரீயக் கலைகளும் பாரம்பரீய விளையாட்டுக்களும்கூட அருகிப்போகின்றன. சர்வதேசியம் தழுவிய ஆதிக்கத்திற்கும் ஆராதனைக்கும் உட்பட்டு கிராமியம் சார்ந்த கலைகள் தட்டிக்கழிக்கப்படுகின்றன. கால் பந்தாட்டம் துடுப்பாட்டம் போன்ற உலகப்பொதுவாக்கப்பட்ட விளையாட்டுக்களால் தமிழரின் பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்கள் மெல்ல மெல்ல கைவிடப்படுகின்றன. அவற்றை மீட்டுப்பார்ப்பதும் எஞ்சியுள்ள விளையாட்டுக்கள் பற்றிய தேடலை நிகழ்த்துவதற்கும் ஓர் அறிமுகமாக இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. 

தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்த பல விளையாட்டுக்கள் தமிழ்மக்கள் வாழும் பல பிரதேசங்களிலும் விளையாடப்படுவனவெனினும் ஈழத்தின் வடபகுதி விளையாட்டுக்கள் குறித்தே இக்கட்டுரையில் நோக்கப்படுகிறது. கிராமிய விளையாட்டுக்கள் எல்லாப் பிரதேசங்களிலும் ஒரேமாதிரியாக அமைவனவல்ல. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் இருக்கக்கூடிய சமூக பண்பாட்டு வேறுபாடுகளுக்கு ஏற்ப சிறிய மாற்றங்களுடன் அமைந்துள்ளன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 150: ரகுமான் ஜானுடன் ஒரு சந்திப்பு!

ரகுமான் ஜான்கடந்த ஞாயிறு அன்று மாலை ரகுமான் ஜானுடன் நீண்ட நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. காலத்தின் கோலத்துடன் பலர் காணாமல் போய் விடுவதைத்தான் பொதுவாகப் பார்த்திருக்கின்றோம். ஒரு சிலர்தாம் தம் சிந்தனையில் தெளிவு மிக்கவர்களாக , சிந்தனையில் பரிணாம வளர்ச்சி பெற்றவர்களாக , எப்பொழுதும் கற்றலை விடாது கடைப்பிடிப்பவர்களாக இருப்பதைப்பார்த்திருக்கின்றோம். அவர்களில் ஒருவர்தான் ரகுமான் ஜான்.

ஈழத்தமிழர்களின் வரலாறு பற்றிய விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டியதன் அவசியம் பற்றி ரகுமான் ஜான் ஆர்வமுள்ளவராகவிருக்கிறார். இதற்காக அவ்வப்போது பல்வேறு வழிகளில் , கடந்த காலங்களில் தான் எடுத்த முயற்சிகள் பற்றி உரையாடலில் எடுத்துரைத்தார். இன்றும் அதே ஆர்வத்துடன் தமிழர் வரலாறு முறையாக , ஆய்வுக்கண்ணோட்டத்தில் எழுதப்பட வேண்டியது அவசியம் என்னும் கண்ணோட்டத்தில் இருக்கிறார் ஜான். குறிப்பாக ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்ட வரலாறு உட்பட ஈழத்தமிழர்களின் வரலாறு முறையாக எழுதப்பட வேண்டியது அவசியம் என்னும் அவரது கொள்கையுடன் எனக்கும் உடன்பாடே. ஆயுதப்போராட்டத்தின் அடிப்படைக்காரணிகள், போராட்ட அமைப்புகள் பற்றிய விபரங்கள், அமைப்புகளுக்கிடையில் நிலவிய அக / புற முரண்பாடுகளும், மோதல்களும், அமைப்புகளின் அரசியல் மற்றும் போராட்டச்செயற்பாடுகள் எனப்பல்வேறு விபரங்களையும் உள்ளடக்கியதாக அவ்வரலாற்று நூல் அமைய வேண்டும். மேலும் ஈழத்தமிழர் வரலாறு பற்றிய நூல்கள், ஆவணங்களைச்சேகரித்துக்கொண்டிருக்கின்றார் ரகுமான் ஜான்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 149 :’சைபர் வெளி’யில் அமரர் வெங்கட் சாமிநாதனுடன் சில கணங்கள்……

- வெங்கட் சாமிநாதன் -‘கட்டோடு குழலாட ஆட’ என்ற இந்தப்பாடல் ‘பெரிய இடத்துப்பெண்’ என்னும் திரைப்படத்திலுள்ள பாடல். ஜோதிலட்சுமி, மணிமாலா , எம்ஜிஆர் ஆகியோரின் நடிப்பில் வெளியான பாடல். இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. ஆனால் தற்போது இந்தப்பாடல் இன்னுமொரு காரணத்துக்காகவும் பிடித்துப்போனது. அதற்குக் காரணம் அண்மையில் மறைந்த அமரர் வெங்கட் சாமிநாதன். இன்று இந்தப்பாடலைக்கேட்கும் சமயங்களில் திரு.வெங்கட் சாமிநாதனின் நினைவும் கூடவே தோன்றி விடுகின்றது.

திரு. வெங்கட் சாமிநாதன் என் முகநூலில் நண்பர்களிலொருவராக இருந்தாலும் முகநூலில் நான் அவரது பதிவுகளைக்காண்பதில்லை. என்னுடன் தொடர்புகொள்வதென்றால் மின்னஞ்சல் மூலம்தான் அவர் தொடர்பு கொள்வார். ஆனால் இந்தப்பாடலுக்கு மட்டும் அவர் தற்செயலாக இதனைப்பார்த்துவிட்டுத் தம் கருத்தினைத்தெரிவித்திருந்தார். அந்தக் கருத்துப்பரிமாறல்களையும் , அந்தப்பாடலையும் மீண்டுமொருமுறை ‘பதிவுகள்’ வாசகர்களுடன்  அவர் ஞாபகார்த்தமாகப்பகிர்ந்து கொள்கின்றேன்.

Venkat Swaminathan இது எப்படி? இப்போது தான் தற்செயலாக எங்கோ ஒரு மூலையில் ஒடுங்கிக்கிடக்கும் உங்கள் பதிவை. எல்லாம் எம்ஜிஆர் பாட்டுக்களாக இருக்கின்றனவே என்று ஆச்சரியப்பட்டு. ஒன்றைப் போட்டுப் பார்த்தேன். கட்டோடு குழல் ஆட பாட்டு அது. மிக நன்றாக இனிமையாக இருக்கிறது. இதையெல்லாம் எப்படி ஒன்று சேர்த்து வைத்திருக்கிறீர்கள் எம்ஜிஆர் ரசிகரா நீங்கள்? அல்லது அப்பழங்கால சினிமாப் பாட்டுக்களின் ரசிகரா? எம்ஜிஆர் பாட்டுக்களாக ஒன்று சேர்க்க எப்படித் தோன்றியது? எப்படியிருந்தாலும் ஒரு வித்தியாசமான தேடலுக்கு நன்றி. சந்தோஷமாக இருக்கிறது.

Continue Reading →

எந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்தொகுப்பு குறித்து…..

எந்திரங்களோடு பயணிப்பவன் - சொர்ணபாரதி - (கவிதைகள்)

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

கவிஞர் சொர்ணபாரதி– ஆரவாரமில்லாமல், எனில், அழுத்தமாகத் தமிழ் இலக்கியவெளியில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் கவிஞர் சொர்ணபாரதி (இயற்பெயர்: முகவை முனியாண்டி) கல்வெட்டு பேசுகிறது என்ற சிற்றிதழைப் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக வெளியிட்டுவருவதன் மூலம் எழுதும் ஆர்வமுள்ள பலருக்குக் களம் அமைத்துத் தருபவர். நுட்பமான கவிஞர். கல்வெட்டு பேசுகிறது இதழ்களில் இடம்பெற்றுள்ள தலையங்கங்கள் இவருடைய சீரிய சமூகப் பிரக்ஞைக்கும், அரசியல் பிரக்ஞைக்கும் சான்று பகர்பவை.

சமீபத்தில் ‘எந்திரங்களோடு பயணிப்பவன்’ என்ற தலைப்பிட்ட இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. நல்ல இலக்கிய நூல்களை ஆர்வமாக வெளியிட்டு வரும் தோழர் உதயக்கண்ணனின் அன்னை ராஜேஸ்வரி பதிப்பக  (bookudaya@ gmail. com) வெளியீடு இது. சென்னையில் நடந்த இந்த நூலுக்கான அறிமுக விழாக் கூட்டத்தில் கவிஞர்கள் கிருஷாங்கினி, அரங்க மல்லிகா, தமிழ் மணவாளன், நான் மற்றும் பலர் கலந்துகொண்டு நண்பர் சொர்ணபாரதியின் கவிதைவெளி குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டோம். –  லதா ராமகிருஷ்ணன்


‘எந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்  தொகுப்பில் இடம்பெறும் என் எண்ணப்பதிவுகள்! –  – லதா ராமகிருஷ்ணன் –

யோசித்துப்பார்த்தால் நாம் [நான் அல்லது நீங்கள் அல்லது அவர்(கள்)] எப்போதுமே மற்றவர்களோடு தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியென்றால், நம்மோடு நாம் பேசிக்கொள்வதேயில்லையா….? கண்டிப்பாக பேசிக்கொண்டுதானிருக்கிறோம்.  நம் எண்ணம் என்பது உண்மையில் நம்மோடு நாம் நடத்துகின்ற தொடர் உரையாடல் தானே! இன்னும் சொல்லப்போனால், மற்ற எவரோடும் பேசிக்கொண்டிருக்கும் போதுகூட நமக்குள் நாம் நடத்துகின்ற இந்த ‘நம்மோடு நமக்கான’ உரையாடல் (குறுக்கீடுகளோடும், குறுக்கீடுகளின் றியும்) நடந்துகொண்டேதானிருக்கிறது.

இதில் கவிதை என்பது என்ன? கவிதைக்கான தேவை என்ன? இலக்கியப் படைப்புகள் யாவுமே (மேம்போக்கானவை உட்பட) ஒரே சமயத்தில் பல பேரோடு நாம் மேற்கொள்கின்ற உரையாடல்கள்தான். ஒரு கருத்தை, அல்லது உணர்வை ஒரே சமயத்தில் பலருக்கு எடுத்துச்செல்லும் எத்தனம்தான். ஆனால், நல்ல படைப்பு அல்லது நிஜமான படைப்பு என்பதைப் பொறுத்தவரை, எழுதும்போது படைப்பாளி இந்த உரையாடலை முதலில் ஆத்மார்த்தமாக தனக்குத் தானே, தானாகிய தன்னிலிருந்து கிளைபிரிந்திருக்கும் எண்ணிறந் தோரிடம்தான் மேற்கொள்கிறார்.

Continue Reading →

சிறுகதை: மணல் வீடுகள்!

வாசிப்பும், யோசிப்பும் 147: எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூல் பதிவு பற்றி....என் ஆரம்ப காலத்துச்சிறுகதைகளிலொன்று ‘மணல் வீடுகள்’.  19.06.1977 வெளியான ஈழநாடு வாரமலரில் பிரசுரமான சிறுகதையிது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரியில் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பில் (G.C.E – Advanced Leval) படித்துக்கொண்டிருந்தேன். ஈழநாடு வாரமலரில் அக்காலகட்டத்தில் வெளியான எனது நான்கு சிறுகதைகளில் ‘மணல் வீடுகள்’ சிறுகதையுமொன்று. தமிழக வெகுசன ஊடகங்களின் ஆதிக்கத்தில் மூழ்கிக் கிடந்த பருவத்தின் பாதிப்பை இச்சிறுகதையில் நீங்கள் அவதானிக்கலாம். அந்த வயதுக்குரிய உணர்வுக்கொந்தளிப்புகளை வெளிப்படுத்தும் சிறுகதை. மல்லிகையில் வெளியான ஈழநாடுச்சிறுகதைகள் பற்றிய ஆய்வுக்கட்டுரையில் செங்கை ஆழியான் அவர்கள் (முனைவர் க.குணராசா) ஈழநாடு பத்திரிகையின் ஏழாவது தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவராக என்னைக்குறிப்பிட்டு, இச்சிறுகதையினையும் குறிப்பிட்டிருப்பார். ஒரு பதிவுக்காக இச்சிறுகதையினை இங்கு பதிவு செய்கின்றேன்.

Continue Reading →

தேவன் (யாழ்ப்பாணம்)!

தேவன் (யாழ்ப்பாணம்)![ யாழ் இந்துக்கல்லூரி (கனடா) சங்கத்தின் வருடாந்தக் கலைவிழாவான ‘கலையரசி 2015’ நிகழ்வினையொட்டி வெளியான ‘கலையரசி’ மலரில் வெளியான தேவன் (யாழ்ப்பாணம்) பற்றிய சுருக்கமான கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம். – வ.ந.கி]

ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்றில் யாழ் இந்துக்கல்லூரியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் தொடக்கம் ஆசிரியர்கள் வரை பலர் ஈழத்துத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். இது பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். அந்த வகையில் யாழ் இந்துக்கல்லூரியின் ஆசிரியரான தேவன் – யாழ்ப்பாணம் அவர்களின் இலக்கியப்பங்களிப்பு பற்றிச் சுருக்கமாக ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

தேவன் – யாழ்ப்பாணம் மிகச் சிறந்த பேச்சாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு பேசும் ஆற்றல் வாய்த்தவர். இதனால் அன்றைய காலகட்டத்தில் யாழ்நகரில் நடைபெற்ற கலை, இலக்கிய நிகழ்வுகளில் , அந்நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கும் பிரதான தொகுப்பாளராக அப்பொழுது அவர் அனைவராலும் அழைக்கப்பட்டுக்கொண்டிருந்தார்.

இது தவிர தேவன் – யாழ்ப்பாணம் என்றால் உடனே ஞாபகம் வருவது அவரது புகழ்பெற்ற ‘ஸ்கோடா’ (Skoda) மோட்டார் வாகனமாகும். அதன் காரணமாக அன்றைய காலகட்டத்து மாணவர்களால் அவர் ‘ஸ்கோடா’ என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்டதும் நினைவுக்கு வருகின்றது. அந்தக் கண்ணாடி அணிந்த முகமும், அந்த ‘ஸ்கோடா’ மோட்டார் வாகனமும் இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் 1924இல் பிறந்த இளையப்பா மகாதேவன் தன் புனைபெயராக தேவன் என்று வைத்துக் கொண்டார். தேவன் – யாழ்ப்பாணம் அவர்களின் முதலாவது நினைவு மலரில் தேரடியான் என்னும் பெயரில் தேவன் அவர்களின் தமையனாரான இளையப்பா தர்மலிங்கம் அவர்கள் கட்டுரையொன்று எழுதியிருக்கின்றார். அது  தேவன் அவர்களின் பெயருக்கான காரணங்கள் பற்றிய மேலதிகத் தகவல்களை வழங்குகின்றது. [இது பற்றிய தகவல்களை வழங்கிய என் முகநூல் நண்பர்களில் ஒருவராகிய திருமலை மூர்த்தி அவர்களுக்கு நன்றி.]

Continue Reading →

தமிழர் சால்பு வழக்காறும் மரபுகளும் – ஒரு நோக்கு

ஆய்வு: சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்!த.சிவபாலுஒரு வழக்காற்றைத்தான் மரபு என்ற சொற்பதத்தால் பெரிதும் குறிப்பிடப்படுகின்றது. வழக்காறு அல்லது மரபு என்பது பெருந்தொகையான மக்களால் செய்யப்படும் ஏதாவது நடைமுறைச் செயற்பாடுகளைக் குறிப்பதாக அமைகின்றது. வழமையாக ஒரு நாட்டிற்கு இன்னொரு நாட்டில் இருந்து வந்த ஓரின, பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள், சமயத்தைப் பின்பற்றும் மக்களால் மேற்கொள்ளப்படும் தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டுவந்த அதேமுறையில் பின்பற்றப்படுமானால் அதனை ‘வழக்காற்று முறை’ என்று குறிப்பிடலாம்.

எனவே பண்பாட்டையும் வழக்காற்றையும் தனித்தனியாகப் பிரித்துவிடமுடியாது. வழக்காறு அல்லது மரபு என்பது மக்கள் வாழ்வியலைக் குறித்து நிற்பதாகும். மக்களின் பாரம்பரிய நடைமுறைகளைப் பின்பற்றி வாழும் முறைமை மரபுகளைப் பின்பற்றி வாழுவதாகக் கொள்ளலாம். வழக்காறு அல்லது மரபு என்பதற்கு ஆங்கிலத்தில் ‘Custom’ என்ற பதம் அல்லது ‘Tradition’ என்றப பதம் பயன்படுத்தப்படுகின்றது. Custom can also mean changed to suit better: altered in order to fit somebody’s requirements.  வழக்காறு என்பது ஒன்றிற்குப் பொருந்தும் வகையில் மாற்றப்படக்கூடியது என்ற பொருளையும் நடைமுறையையும் தன்னகத்தே அடக்கியுள்ளது. வழக்காறுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன அல்ல காலும், நேரம், இடம் கருதி மாற்றம் பெற்றே வருகின்றன என்பது வெளிப்படை. இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

வழக்காறுகள் அல்லது மரபுகள் மாற்றம் பெறுகின்றன என்றால் புதிய அல்லது வேறுமரபுகள் வந்து சேருகின்றன என்பது பொருளாக அமைகின்றன. எனவே நடைமுறையில் இருந்துவந்த அல்லது பின்பற்றப்பட்ட மரபுகள் நடைமுறியில் இருந்து விலகிப்போவதனைத் கட்டி இழுத்துப பற்றி நிற்க முடியாது என்பது நடைமுறை உண்மை. பண்டய நடைமுறைகளை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பது இன்று எம்முன் எழுகின்ற முக்கிய கேள்வியாகும். பண்டைய பாரம்பரியங்களை நாம் அப்படியே இறுகப்பிடித்துக்கொண்டிருந்தால் மனித சமூகம் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. எடுத்துக்காட்டாக, சாதிய மரபு முறைகள் எம்மத்தியில் இருந்து அகற்றப்பட நீண்டகாலப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. கல்வியறிவு வளர்ச்சியின் பயனாக சாதியத்தைப் பேணும் மரபுகள் மருவி அல்லது அருகி வருகின்றன என்பதனை எல்லோரும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.  பண்டைத் தமிழகத்தில் இருந்த அல்லது பேணப்பட்டுவந்து பழந்தமிழர் மரபுகள் அருகி அல்லது மங்கிப்போனதற்கு அவற்றைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்க வேண்டிய தேவை சமூகவளர்ச்சியின் காரணமாக இல்லாதொழிந்து போனது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்டலாம்.

Continue Reading →