‘எதுவரை’ இணைய இதழில் எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணலொன்று வெளியாகியுள்ளது. அதனைக்கண்டவர் எழுத்தாளர் கோமகன். அந்நேர்காணலில் ஒரு கேள்வி. அது:
“புலம் பெயர் இலக்கிய சூழலில் இருந்து வெளியாகின்ற படைப்புகளில் ஒரு சிலதைத்தவிர அநேகமான படைப்புகள் மலரும் நினைவுகளையொத்த படைப்புகளாகவே வெளிவருகின்றன. இவர்களால் ஏன் புலம் பெயர் கதைக்களங்களையும், கதைமாந்தர்களையும் வாசகர்களுக்குக் கொடுக்க முடியாது இருக்கிறது ?”
இவ்விதமான கேள்விகளை எதிர்கொள்ளும்போதுகளில் நான் எனக்குள் சிரித்துக்கொள்வதுண்டு. இந்தக்கேள்வியில் கூறப்பட்டிருப்பதுபோல்தான் உண்மையான நிலை உள்ளதா? ‘இவர்களால் ஏன் புலம் பெயர் கதைக்களங்களையும், கதைமாந்தர்களையும் வாசகர்களுக்குக் கொடுக்க முடியாது இருக்கிறது’ என்ற கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளது. இவ்விதமான கேள்விகளுக்கு முக்கிய காரணம்: இவ்விதமான கேள்விகளைக்கேட்பவர்கள் குறிப்பிட்ட சிலரின் படைப்புகளையே முக்கியமான , தரமான படைப்புகளாகக்கருதிக்கொண்டு, அவர்களது படைப்புகளை மட்டுமே படிப்பார்கள். அவ்விதம் படிப்பதால் , இவர்களால் ஏனைய படைப்பாளிகள் பலரின் படைப்புகளைப்படிக்க முடிவதில்லை என்றெண்ணுகின்றேன். உண்மையில் புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பல புலம் பெயர் கதைக்களங்களையும், மாந்தர்களையும் கொண்டு படைக்கப்பட்டுள்ளன.
புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத்தாங்கி வெளியான தொகுப்புகளில் முதலாவதும், முக்கியத்துவம் பெற்றதுமான தொகுப்பு: ‘பனியும், பனையும்’ அதிலுள்ள கதைகளை ஒருமுறை இந்த நேர்காணலைக்கண்ட கோமகன் வாசித்துப் பார்த்தால் தெரியும் அவற்றில் எவ்வளவு கதைகள் புகலிடச்சூழலைக் கதைக்களங்களாக்கொண்டு படைக்கப்பட்டிருக்கின்றன என்று.