தமிழ் இலக்கியத்தில் ஒரு சந்தேகம் உங்களிடம் கேட்டுப் பார்க்கலாமா?, ‘ஆறாம் நிலத்திணை’ என்றால் என்ன, சங்க இலக்கியத்தில் தேடிப்பார்த்தேன், அப்படி ஒரு பதம் இருப்பதாகத் தெரியவில்லை’ என்று நண்பர் ஒருவர் கேட்டார். ஆறாம்திணை என்பதற்கு ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்ததை வெவ்வேறு வகையான விளக்கத்துடன் தருவார்கள், அது அவர்களது சொந்தக் கருத்தாகும். ஆனாலும் ‘ஆறாம் நிலத்திணை’ என்றால் இப்படியும் இருக்கலாம் என்று எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் என்று எனது கருத்துக்களையும் அவருடன் நான் பகிர்ந்து கொண்டேன். எனவேதான் கருத்துப் பரிமாறல் மூலம் இந்தக் கட்டுரையை மேலும் மெருக்கூட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன், ஆவணப் படுத்துவதில் தமிழர்தகவல் ஆண்டு மலர்கள்; முன்னிற்பதால் எனது கருத்தை இந்த மலரில் பதிவு செய்கின்றேன்.
தமிழர்களின் வரலாற்றில் ‘தமிழ் இலக்கியம்’ எப்பொழுதும் முக்கியமான இடத்தை வகித்திருக்கின்றது. தமிழ் மொழியின் காலத்தையும் தமிழர்களின் பண்பாடு நாகரிகம் போன்றவற்றையும் கலை, இலக்கிய வடிவங்களையும் அறிந்து கொள்ள பழம்பெரும் இலக்கியங்கள்தான் எங்களுக்கு உதவியாக இருந்தன. புலவர்களும், அரசர்களும், சான்றோர்களும் தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தியதால் தான் இன்று எமது மொழியின் தொன்மையை, எமது இனத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்ல முடிகின்றது. அக்காலத்தில் எழுதப்பட்ட ஏடுகளும், கல்வெட்டுக்களும், புடைப்புச் சிற்பங்களும், ஓவியங்களும் எம்மை அடையாளப்படுத்த மிகவும் உதவியாக இருந்தன.
அவற்றைக் கவனமாகப் பாதுகாத்தவர்களும், தமிழ் பிரமி எழுத்துக்களை வாசித்து நவீன முறையில் எல்லோரையும் சென்றடையக் கூடிய வகையில் பதிப்பித்தவர்களும் எம்மினத்தின் பாராட்டுகுரியவர்கள். தற்போது மதுரைக்கு அருகே உள்ள கீழடி அகழாய்வுகள் எம்மினத்தின் தொன்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுவனவாக இருக்கின்றன. இவற்றை எல்லாம் தேடி எடுத்து வெளியே கொண்டு வந்து, தமிழ் மெழியைச் செம்மொழியாக்கி எம்மினத்திற்கும் முகவரி தந்தவர்கள் இவர்களைப் போன்றவர்களே என்றால் மிகையாகாது.