முகவுரை
‘சரசோதி மாலை’ என்னும் சோதிடம் பற்றிய நூல் இலங்கையில், தென்னகத்தில் அமைந்திருந்த தம்பதெனிய என்னும் வரலாற்று இராசதானியில் கி.பி. 1310 ஆண்டளவில் அரங்கேற்றப்பட்ட தமிழ் நூலாகும். பண்டைய தமிழ் நூல்களைத் தேடியெடுத்து அவற்றைப் பதிப்பிக்கும் பணி ஈழத்தவரான ராவ்பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை மற்றும் தமிழ் பற்றுக்கொண்டவரான தமிழ் நாட்டைச் சேர்ந்து உ.வே.சாமிநாத ஐயர் ஆகியோரைப் பின்பற்றி பல முயற்சிகள் காலங்காலமாக இடம்பெற்றுவருவது கண்கூடு. இவ்வகையிலே ‘சரசோதி மாலை’ கொக்குவில் சோதிடப் பிரகாசயந்திர சாலையில் மூன்று முறை பதிப்பிக்கப்பட்டுள்ளமையை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். 1892ல் முதலாம் பதிப்பும் 1909ல் இரண்டாம் பதிப்பும், குரோதி வருடம் அதாவது 1925ல் மூன்றாம் பதிப்பும் இடம்பெற்றுள்ளது. இதனை மறுபதிப்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2014ல் பதிவு செய்துள்ளது. இந்த நூலை அறிமுகம் செய்யப்புகுந்த கலாநிதி பாலசிவகடாட்சம் அவர்கள் அதனைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக “சரசோதிமாலை ஒரு சமூகப் பண்பாட்டுப் பார்வை” என்னும் படைப்பினை கனடாவில் கடந்த யூன் 6. 2015 அன்று அறிமுகம் செய்துவைத்தார்.
சரசோதி மாலைக்கு ஒரு மாலையா?
‘சரசோதிமாலை’ என்ற பண்டைய படைப்பின் முக்கியத்துவம் என்ன? இதனை ஏன் மீள் பதிவாக்கம் செய்யப்படவேண்டும்? இதன் பயன்பாடு எத்தகையது? நாம் வாழும் காலகட்டத்திற்கு இந்நூல் ஏற்புடையதா? இது யாரைச் சென்றடையும்? என்பனபோன்ற கேள்விகள் நம்முன்னே எழுகின்றன. மனித வாழ்வு இயற்கையோடு ஒட்டியது. இயற்கையின் செயற்பாடுகளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய விஞ்ஞானபூர்வமான ஒரு பார்வையை அல்லது ஆய்வினை மேற்கொள்ளுவதன் மூலமே தமிழனின் பாரம்பரியத்தையும் அவனது வாழ்வியலையும் அறிந்துகொள்ளமுடியும். பதினான்காம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஈழத்தின் தென்பகுதியை ஆட்சிசெய்த மன்னனான பராக்கிரமபாகு சோதிட நூலான ‘சரசோதி மாலை’யை இந்தியாவில் இருந்து வருவிக்கப்படட போஜராஜ பண்டிதரை ஆக்கும் வண்ணம் வேண்டியதன் பயனாக கி.பி. 1310ல் தனது அரசவையில் அரங்கேற்றம் செய்வித்தான் என அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரசோதி மாலை பற்றி அறிந்திருந்த கலாநிதி பால சிவகடாட்சம் அவர்கள் தனது கற்கைத்துறையான தாவரவியிலை விடுத்துச் சோதிட நூல்பற்றி ஆராய முற்றபட்டது ஏன்? என்ற வினாவிற்கும் அவரது ஆய்வினை நுணுகி நோக்குவதன் மூலம் அறிந்துகொள்ளமுடியும். அவரது ஆராய்வூக்கமும் தமிழர் சமூகத்தின் மீது கொண்டுள்ள பற்றுதல் மட்டுமன்றி எம்முன்னோர் எமக்காக விடுத்துச் சென்ற அறிவியல் பற்றிய உண்மைகளை உலகறிய வைக்கவேண்டும் என்ற உந்துதலும் அவரது பெற்றோர் வாழையடி வாழையாகக் செய்துவந்த மருத்துவம், சோதிடம் போன்ற துறைகளில் பெற்றிருந்தத தேர்ச்சியும், அனுபவமும் அறிவாற்றலும் இதற்கு அடிப்படைக் காரணிகளாக அமைந்துள்ளன என ஊகிக்க இடமுண்டு.