‘பொல’ ‘பொல’வென்று பொழுது விடியும் சமயம்.. ‘மாசிப்பனி மூசிப்பெய்துகொண்டிருக்கும். புலரும் பொழுதினை வரவேற்றுப்பாடுபவவை .. சேவல்களா? இல்லை.. பின்.. மயில்கள்தாம். மயில்கள் அகவிக் காலையினை வரவேற்கும் பாங்கினை ‘முழங்கா’விலில்தான் காணலாம். முழங்காவில் என்றதும் ஞாபகம் வருபவை.. முழங்காவிற் சந்திக்கோவில், தேநீர்க்கடை, குழாய்க்கிணறுகள், பெண்கள் குடியேற்றத்திட்டம்… இவைதாம். இவை எண்பதுகளின் ஆரம்பகாலகட்டத்து நினைவுகள். மன்னார்ப்பகுதிக்கும் சங்குப்பிட்டிக்கும் இடையில் அமைந்துள்ள முழங்காவிற் கிராமத்தின் முதற் பஸ் தரிப்பிடம் ‘பல்லவராயன் கட்டு’ என்று அழைக்கப்படும் பகுதியிலுள்ளது.
என் நண்பனொருவன் ‘சிறீ’ (மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் தொழில்நுட்பத்துறையில் படித்திக்கொண்டிருந்வன்) குழாய்க்கிணறுத்திட்டத்தில் பயிற்சிக்காகச் சேர்ந்திருந்த சமயம், அவனது அழைப்பின்பேரில் அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வூர் மக்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியது. அச்சந்திப்புகளின்போது அறிந்த சில தகவல்களை பகிர்ந்துகொள்வதுதான் இப்பதிவின் நோக்கம். அத்துடன் நனவிடைதோய்தலும் இதனுள் அடக்கம்.