தேடகம் அமைப்பினரின் வருடாந்த ஒன்று கூடல் 2019

இடமிருந்து வலமாக: தேவகாந்தன், கற்சுறா, போல் ராசாத்தி, நான், குமரன் & ஆதவன்
தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலைய அமைப்பினர்) அமைப்பினரின் வருடாந்த ஒன்று கூடல் இன்று குயீன் பலஸ் விருந்து மண்டபத்தில் நடைபெற்றது. நண்பர் எழுத்தாளர் தேவகாந்தன், எழுத்தாளர் கடல்புத்திரனுடன் நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். முப்பதாவது ஆண்டில் நடக்கும் நிகழ்வு என்பதால் தேடகம் மலர் ஏதாவது வெளியிடலாம் என்றெண்ணியிருந்தேன். ஆனால் அவர்கள் வெளியிடவில்லை. இவ்விதம் வருடாவருடம் நடக்கும் நிகவுகளில் தேடகம் ‘தேடல்’ சஞ்சிகையை ஆண்டு மலர் வடிவில் வெளியிடலாம். அது மிகவும் பயன் மிக்கதாகவுமிருக்கும். அதே சமயம் கனடாத் தமிழ்இலக்கியத்துக்குப் பங்களிப்பினை வழங்கிய தேடகம் சஞ்சிகையின் தொடர்ச்சியாகவுமிருக்கும். தேடக நண்பர்கள் சிந்திப்பார்களாக. நிகழ்வில் தேடக நண்பர்கள், ஆர்வலர்கள் பலர் வந்திருந்தனர். பலர் குடும்பங்களுடன் வருகை தந்திருந்தனர். இளைய தலைமுறையினர் பலரையும் நிகழ்வில் காண முடிந்தது. அவர்கள் நிகழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பலவற்றை ஆர்வமுடன் நடத்திய பாங்கு வரவேற்கத்தக்கது; ஆரோக்கியமானது.

Continue Reading →

நூல் அறிமுகம்: ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்

நூல் அறிமுகம்: ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்எல்லாளன்இந்த வருடம்(2019) கனடா சென்றபோது எல்லாளன் ராஜசிங்கம் அவர்களைச் சந்தித்திருந்தேன். அவர் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்’ நூலை ஏற்கனவே வாசித்திருந்தேன். முன்னணி வெளியீடாக 2015 ஆம் ஆண்டு   வந்திருந்தது. அந்தப் புத்தகம் பற்றிய உரையாடல் வந்தபோது, அவர் அது பற்றி மேலும் சில தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அந்தப் புத்தகத்தின் மூலம் அவருடைய பழைய நண்பர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள்  என்ற செய்திதான் அது. ஒரு புத்தகம் அந்த வேலையைச் செய்திருக்கின்றது என்றபோது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. தமிழீழப்போராட்டம் பற்றி பலரும் புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். சில சச்சரவை ஏற்படுத்தின. சில வரவேற்பைப் பெற்றன. எதுவாக இருப்பினும் அவை ஒவ்வொன்றும் அவர்களின் அனுபவம் சார்ந்த வெளிப்பாடுகள், கற்றுக் கொண்ட பாடங்கள், வருங்கால மூலதனம், அரசியல் ஆவணம்.

தனது ஏழு வயதில் தந்தையைப் பறிகொடுத்த எல்லாளனுக்கு எல்லாமே அம்மாதான். சொந்தக்காலில் நிற்பதற்கு இளமையிலேயே கற்றுக் கொடுக்கின்றார் அம்மா. சிறுவயதில் தேவாலயத்தைச் சுற்றிச் சுற்றி வந்த எல்லாளன் ஈழமாணவர் பொதுமன்றம் (GUES) நடத்திய அரசியல் வகுப்புகளில் கலந்து கொள்கின்றார். 83ஆம் ஆண்டு இனக்கலவரம் பலரை அகதிகளாக்கி ஊருக்கு அனுப்பி வைத்தது. அவர்களுள் மதகுருமாரும் அடக்கம். அப்படியே இவர்களது கோப்பாய் தேவாலயத்திற்கும் ஒரு மதகுரு வருகின்றார். அப்போதுகூட வடபகுதிகளில் இருந்து பேக்கரி போன்றவற்றை நடத்திவந்த சிங்களவர், அவர்களது உடைமைகள் எதுவும் தாக்கப்படவில்லை. 84 ஆம் ஆண்டு, இராணுவத்தின் வற்புறுத்தலின் பின்னர்தான் அவர்கள் வடபகுதியை விட்டுச் சென்றார்கள். 84 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து வடபகுதி வந்த சிங்கள பிஷப், இவர்களின் தேவாலயத்திற்கு வந்தபோது கறுப்புக்கொடி கட்டி அவரை வரவேற்கின்றார் எல்லாளன். பட்டயக்கணக்காளர் படிப்பை ஆரம்பித்த இவரை 83 இனக்கலவரம் திசை திருப்புகின்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (TELO) இணைகின்றார். இந்தியா செல்கின்றார். `சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆரம்பித்த எனது போராட்டம் பின்னர் இயக்க தலைமைகளுக்கு எதிரான போராட்டமாக மாறியது’ என்கின்றார் எல்லாளன். மறு வருடமே அதிலிருந்து விலகிக் கொள்கின்றார். அந்தக் குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த தனது அனுபவத்தை `சரிநிகர்’ பத்திரிகையில் 2000ஆம் ஆண்டு தொடராக எழுதினார். பின்னர் திருத்தங்கள் செய்து `தமிழரங்கம்’ இணையத்தளத்தில் வெளியிட்டார். அதுவே பின்னர் இந்த நூலாக வந்திருக்கின்றது.

Continue Reading →

பதிவுகளில் அன்று: எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாகப் பதிவுகளில் வெளியான மூன்று கட்டுரைகள்!

சுந்தர ராமசாமி– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் மார்கழி 2005 இதழ் 72
1. சு.ரா – ஒரு சாமன்யனின் குறிப்புகள்! – நேசகுமார் –

சுந்தர ராமசாமி இறந்ததை எனக்கு முதலில் அறிவித்தது அரவிந்தன் நீலகண்டன் தான். நாகர்கோவிலிலிருந்து அழைத்து, “சுரா இறந்துவிட்டாராம்” என்றார். நான் அவரது குரலில் வேறேதேனும் தொணி தென்படுகிறதா எனக் கவனிப்பதில் மும்முரமானேன். எதிர் முனையில் தென்பட்ட அமைதி, அவரும் என் மனவோட்டத்தை கணிக்க முற்படுகின்றார் என்பதைக் காட்டிற்று. அதன் பின்னரே ஏனைய நண்பர்களின் தொலைபேசிகள், சன் டிவி செய்தியில் அவரது கண்ணாடிக்குள்ளிருக்கும் உடல், மிகச் சிலரே அவ்வுடலைச் சுற்றியிருக்கும் காட்சி போன்றவற்றைக் காணவும், மத-சாதி அடையாளங்களும் சம்பிரதாயங்களுமின்றி அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம் என்பதை சன் டிவி செய்தி வழியாக கேட்டறியவும் முடிந்தது.

சுந்தர ராமசாமி பற்றி எப்போது அறிந்தேன்? காலச்சுழலில் பின்னோக்கிப் பயணித்தால்  வைதேகிக்கும் ஷோபனாவுக்கும் இடையே இருந்த பகைமைதான் சு.ராவை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தது என்பது நினைவிற்கு வருகிறது. வைதேகி தனது தாழ்வுணர்ச்சிகளை மீறி வெளிவருவதற்கு பயன்படுத்திய பல ஆயுதங்களுள் சுந்தர ராமசாமியும் ஒன்று – அவரது “.ஜே சில குறிப்புகளையும்”, புளியமரத்தின் கதையையும் அடிக்கடி கையில் வைத்திருப்பார் – என் போன்ற ஞானசூன்யங்களுக்கும் அவற்றை அறிமுகப் படுத்தி வைத்தார். வைதேகி, தொண்டாம்புதூர்க்காரர். ஷோபனாவோ, திருச்சிக்காரர். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பாக நவநாகரிக நங்கைக்கான குணாதிசயங்கள் மற்றும் அழகென நாங்கள் கருதிய அம்சங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்தவர் – பாலகுமாரன் ரசிகை.

Continue Reading →

‘சுட்டி’ கணேசன்!

'சுட்டி' கணேசன்!அண்மையில் ‘சுட்டி விகடன்’ ஆசிரியர் சுட்டி கணேசன் பற்றிய கட்டுரையொன்றினை இணையத்தில் வாசித்தேன் , அதை எழுதியவர் தகவற் தொழில்நுட்ப வல்லுநரும், அத்துறையில் தமிழ் நூல்கள் பலவற்றை எழுதியவருமான காம்கேர் கே.புவனேஸ்வரி அவர்கள். அவர் அக்கட்டுரையில் ‘சுட்டி’ விகடன் சஞ்சிகையுடன் தனக்கேற்பட்ட அனுபவமொன்றினையும் பகிர்ந்துகொண்டிருந்தார். நல்லதொரு கட்டுரை. அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். ‘சுட்டி’ விகடன் அவர்கள் என் முகநூல் நண்பர்களில் ஒருவரும் கூட. அக்கட்டுரைக்கான இணைய இணைப்பு: http://compcarebhuvaneswari.com/?p=483

‘சுட்டி’ கணேசன் அவர்களைப்பற்றிய மேற்படி கட்டுரை ஆச்சரியத்தைத்தரவில்லை. ஏனென்றால் அவரை நான் 1996ஆம் ஆண்டிலிருந்து அறிவேன். ‘ஸ்நேகா’ பாலாஜியாக அறிமுகமானவர். ஸ்நேகா பதிப்பகமே எனது நூல்களான ‘அமெரிக்கா’ (சிறுகதைகள் மற்றும் சிறு நாவற் தொகுப்பு) மற்றும் ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆகிய நூல்களைத் தமிழகத்தில் சிறப்பாக வெளியிட்டது. அவையே தமிழகத்தில் முதலில் வெளியான எனது நூல்கள்.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இவரை ‘சவுத் ஏசியன் புக்ஸ்’ பாலாஜியாக அறிந்திருப்பார்கள். ‘சவுத் ஏசியன் புக்ஸ்’ நிறுவனமும், இலங்கையின் தேசிய கலை இலக்கிய பேரவையும் இணைந்து பல நூல்களை வெளியிட்டுள்ளன்மை குறிப்பிடத்தக்கது.

அன்றிலிருந்து இன்று வரை இவருடனான தொடர்பு நீடித்து வருகின்றது. இவரது பல கடிதங்களும் என்னிடம் இன்னுமுள்ளன. எனது நூல்களை வெளியிட்ட காலத்தில் அவர் எழுதிய கடிதங்கள் அவை.

இவரைப்பற்றி நினைத்ததும் வேறு பல நினைவுகளும் உடன் நினைவுக்கு வரும். எனது படைப்புகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் இவரே.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: பாரதீய சங்கீதம் இசைமேதை எம்.பி. ஶ்ரீநிவாசனும் நடன நர்த்தகி கார்த்திகா கணேசரும் இணைந்த கவிஞனின் கனவு !

முருகபூபதி” இசை வெறும் உணர்ச்சியைத்தரக்கூடிய போதையல்ல. அது நலிந்துபோன இதயத்திற்கு நம்பிக்கையை ஊட்டுகிறது. மனிதனின் தத்துவார்த்த வாழ்வை வளப்படுத்தும் வலிமை அதற்குண்டு. எனவே மனித நாகரீகத்தின் செல்வமான இசையின் உயிரை அகற்றி, அதன் வெறும் சடலத்தை மாத்திரம் காட்டும் நிலையை இசையமைப்பாளர்கள் கைவிடவேண்டும். மக்கள் கவிஞன் பாரதி கூறியதைப்போலவே இசையின் வாயிலாக நவரசங்களை பிரதிபலிக்கச்செய்யவேண்டும். அதைச்செய்ய முன்வரும் இசையமைப்பாளர்களையும் மக்களையுமே நான் விரும்புகின்றேன்.”

இவ்வாறு பாரதி நூற்றாண்டு காலகட்டத்தில் இலங்கை வந்திருந்த இந்திய இசைமேதை எம்.பி. ஶ்ரீநிவாசன் ( மானாமதுரை பாலகிருஷ்ணன் ஶ்ரீநிவாசன்) வீரகேசரி வாரவெளியீட்டிற்கு ( 20-12-1981) வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
இவரை பேட்டிகண்டவர் வீரகேசரி பத்திரிகையாளர் சுபாஷ் சந்திரபோஸ்.

யார் இந்த ஶ்ரீநிவாசன்…?

ஒரு   கால கட்டத்தில்  சென்னையில்  இடதுசாரி  கலை இலக்கியவாதிகள்   கூட்டாக  இணைந்து  தயாரித்து  வெளியிட்ட பாதை   தெரியுது  பார்    திரைப்படத்தின்  இசையமைப்பாளர். இந்தப்படத்தில்   சில   காட்சிகளில்   ஜெயகாந்தனும்    வேண்டா வெறுப்பாக   தோன்றி  நடித்திருந்தார்.  எனினும்  படத்தின்  நீளம்  கருதி   அதனை  சுருக்கும்பொழுது  தான்  வரும்  காட்சிகளை ஜெயகாந்தன்   நீக்கச்சொன்னார்.

ஜெயகாந்தனின் அருமை நண்பரான எம்.பி.ஶ்ரீநிவாசன், தமிழ், மலையாளம், வங்காளம் உட்பட சில இந்திய மொழிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருப்பவர்.

Continue Reading →

பதிவுகளில் அன்று: வாசகர் கடிதங்கள் – கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் – புதிய நாளை இனிய நினைவுகளுடன் வரவேற்போம்!

வாசகர் கடிதங்கள்

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் : புதிய நாளை இனிய நினைவுகளுடன் வரவேற்போம்!

[பதிவுகள் விவாதக்களம் இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்  பற்றி ‘இந்திரன் சந்திரன்’ என்பவர் அவரைக்களங்கப்படுத்தும் வகையில் பதிவுகளை இட்டிருந்தார். அவை பற்றிக் கவிஞர் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கடிதமொன்றினை எழுதியிருந்தார். பின்னர் பதிவுகள் விவாதத்தளத்திலிருந்து ‘இந்திரன் சந்திரன்’ எழுதியவை பொய் என நிரூபிக்கப்பட்டதால்  நீக்கப்பட்டன. அது பற்றிய கவிஞரின் மின்னஞ்சலிது. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது.]


From: “Jayapalan” <visjayapalan@yahoo.com>
To: “NAVARATMAM GIRITHRAN” <ngiri2704@rogers.com>
Sent: Tuesday, November 01, 2005 2:38 AM
Subject: DepavaL Wal vAzththukkalOdu

புதிய நாளை இனிய நினைவுகளுடன் வரவேற்போம்! – கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் –

அன்புக்குரிய நண்பர் கிரிக்கு, நான் கேட்டுக் கொண்டபடி என்னால் கவிதைப் பரிசோதனையாக எழுதப் பட்ட வரிகளை நீக்கியதற்க்கு நன்றி. பதிவுகளில் வெளியான உங்கள் கடிதம் தொடர்பாக எனக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளன. பெரும்பாலான விடயங்களில் பலரும் மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிவித்துள்ளனர். எனினும் சில விடயங்கள் தொடர்பாக அவர்கள் வருத்தப் பட்டு எழுதியிருந்தார்கள். இதுதொடர்பாக “நான் பதிவுகள் ஆசிரியரின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறேன். சம்பவம் தொடர்பான நிலைபாடு ஆசிரியரின் பிரச்சினை”  என்றும் அவர்களுக்கு பதில் அனுப்பினேன். உங்கள் கருத்து நிலைபாடு தொடர்பாக தலையிடுவது எனது நோக்கம் இல்லை. அவை வெளியிடப் பட்டதில் எனக்கு ஆட்சேபனையும் இல்லை. என்மீது அக்கறை உள்ள நண்பர்கள் மின் அஞ்சலிலும் தொலை பேசியிலும் அடிக்கடி குறிப்பிட்ட மூன்று முக்கியமான விடயங்களை தகவலுக்காக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

Continue Reading →

எழுத்தாளர் ஜி.ஜி,சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் ‘கந்துலு நிம வன துரு’. – கண்ணீர் வற்றும் வரை – (சிங்கள மொழியில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு)

எழுத்தாளர் ஜி.ஜி,சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் 'கந்துலு நிம வன துரு'. - கண்ணீர் வற்றும் வரை - (சிங்கள மொழியில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு)ஜி.ஜி,சரத் ஆனந்த

– எழுத்தாளர் ஜி.ஜி,சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் ‘கந்துலு நிம வன துரு’. – கண்ணீர் வற்றும் வரை – (சிங்கள மொழியில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு) –

நண்பர் ஜி.ஜி.சரத் ஆனந்த தகவலொன்றை அனுப்பியிருந்தார். அதில் பின்வருமாறு எழுதியிருந்தார்:

“உங்கள் சிறுகதையொன்றும் அடங்கியுள்ள புதிய தொகுப்பொன்று உடனே வெளிவரும் உங்கள் ‘உடைத்த காலும் உடைத்த மனிதனும்’ கதை தான். உங்கள் நல்லூர் ராஜதானி நூலை வெளியிட்ட அஹஸ மீடியா’ வேர்க்ஸ் பப்ளிஷர்.  வட கிழக்கு, ,தோட்ட பகுதி, முஸ்லிம், அத்துடன் வெளிநாட்டில் வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ளன. நான்கு பெண் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். 12 எழுத்தாளர்கள் ( மூன்று தலைமுறையில்). ‘கந்துலு நிம வன துரு’.. ‘கண்ணீர் வற்றும் வரை’ என்பது நூலின் பெயர். நூலில் இடம் பெறும் எழுத்தாளர்கள்: மு.சிவலிங்கன், நயீமா சித்திக், நீர்வை பொன்னையன், அழகு சுப்பிரமணியம், ராணி சீதரன், கே. ஆர்.டேவிட், ஆர்.ராஜேஸ்கண்ணன், ஆர். எம். நௌஷாத், வ.ந..கிரிதரன், பாலரஞ்சனி ஷர்மா, எம்.ரிஷான் ஷெரீப், மாதுமை சிவசுப்பிரமணியம்.”

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 356: மல்லிகை 43ஆவது ஆண்டு மலரும், முனைவர் க.குணராசாவின் (செங்கை ஆழியான்) “‘ஈழநாடு’ இதழின் புனைகதைப் பங்களிப்பு” ஆய்வுக் கட்டுரையும்.

மல்லிகை 43ஆவது ஆண்டு மலர்மல்லிகை சஞ்சிகையின் 43ஆவது ஆண்டு மலரை நூலகம் தளத்தில் வாசிக்கலாம். இம்மலரில் எழுத்தாளர் செங்கை ஆழியான் (முனைவர் க.குணராசா) ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றி “‘ஈழநாடு’ இதழின் புனைகதைப் பங்களிப்பு” என்னும் தலைப்பில் நல்லதோர் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஈழநாட்டில் வெளியான பல்வகைப்புனைகதைகள் பற்றிக் (சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் போன்ற) குறிப்பிட்டுள்ளதுடன் , ஈழநாட்டில் எழுதிய எழுத்தாளர்களை ஏழு தலைமுறைப் படைப்பாளிகளாக வகைப்படுத்தியுமுள்ளார். அவர்களைப்பற்றியும் , அவர்கள்தம் படைப்புகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஆவணச்சிறப்பு மிக்க ஆய்வுக்கட்டுரை. வேறு யாரும் இவ்விதம் விரிவாக ஈழநாடு பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றி ஆய்வுக் கட்டுரையேதாவது எழுதியதாகத் தெரியவில்லை. அவ்விதம் எழுதியிருந்தால் நான் இதுவரை அறியவில்லை.


ஈழநாட்டில் எழுதியவர்களைப்பற்றிய அவரது வகைப்படுத்தலில் என் பெயர் , வடகோவை வரதராஜன் ஆகியோரின் பெயர்களை ஏழாந்தலைமுறைப்படைப்பாளிகள் பிரிவினுள் கண்டேன். என் படைப்புகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் “வ.ந.கிரிதரன் (இப்படியும் ஒரு பெண், மணல் வீடுகள்)” என்று என் இரு சிறுகதைகளைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அக்காலகட்டத்தில் என் பதின்மவயதுப்பருவத்தில் ஈழநாடு பத்திரிகையின் வாரமலரில் என் ஆரம்பகாலச் சிறுகதைகள் நான்கு வெளியாகியுள்ளன. அவற்றில் இரண்டு மட்டுமே செங்கை ஆழியானுக்குக் கிடைத்திருப்பதுபோல் தெரிகின்றது.


மேற்படி கட்டுரையில் ஏழாந்தலைமுறைப் படைப்பாளிகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் பகுதிகளை இங்கு ஒரு பதிவுக்காகப் பகிர்ந்துகொள்கின்றேன். மல்லிகை மலரையும் மேற்படி கட்டுரையையும் முழுமையாக வாசிப்பதற்குரிய இணைய முகவரி: http://noolaham.net/project/29/2870/2870.pdf

Continue Reading →

பதிவுகளில் அன்று: ராகவன் தம்பி (யதார்த்தா கி.பென்னேஸ்வரன்) மொழிபெயர்ப்பில் ஸதத் ஹஸன் மண்ட்டோவின் இரு உருதுச் சிறுகதைகள்: “டோபா டேக் சிங்’, போர் நாய்!

-  ராகவன் தம்பி (யதார்த்தா கி.பென்னேஸ்வரன்) -– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102
1. “டோபா டேக் சிங்’ – உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ| ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, சிறைக் கைதிகளைப் போல, இருநாடுகளின் பைத்தியக்கார விடுதிகளில் விடப்பட்ட பைத்தியங்களையும் தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும் என இருநாடுகளும் முடிவெடுத்தன.இந்த முடிவு சரியானதா இல்லையா என்று சொல்வது சற்றுக் கடினமான காரியம்தான். ஆனால் . இந்த முடிவுக்கு வருவதற்கு, இருநாடுகளின் மிக முக்கியமான உயர் அதிகாரிகள் பல ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, பலமுறை கூடி மிகக் கடுமையாக ஆலோசித்தும், விவாதித்தும் எடுக்கப்பட்ட முடிவு இது என்பதை மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும். இந்த முக்கியமான பரிமாற்றம் செயல்படுத்தப்படும் இறுதிநாள் மற்றும் பிற முக்கியமான விபரங்களும் மிகவும் கவனத்துடன் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் வசிக்கும் உறவினர்களைக் கொண்ட முஸ்லிம் பைத்தியங்களை எவ்விதத் தொந்தரவும் இன்றி அங்கேயே வசிக்க விடுவதென்றும், மற்ற பைத்தியங்களை பரிமாற்றத்துக்காக எல்லைக்குக் கொண்டு செல்வதென்றும் இந்திய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

பாகிஸ்தானிலோ, இந்து மற்றும் சீக்கியர்களின் மக்கள் தொகை முழுக்கவும் ஏற்கனவே இந்தியாவுக்குக் குடிபெயர்ந்து விட்டதனால், நிலைமை சற்று மாறுபட்டு இருந்தது. முஸ்லிம் அல்லாத பைத்தியங்களை பாகிஸ்தானில் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பது போன்ற சிக்கல் அங்கு எழவில்லை. இரு அரசுகளின் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவில் என்னவிதமான எதிர்வினை இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் லாகூரின் பைத்தியக்கார விடுதிகளில் செய்தி பரவியதுமே அது மிகவும் பரபரப்பினைக் கிளப்பியது.

Continue Reading →

பதிவுகளில் அன்று: சந்திரவதனா செல்வகுமாரனின் மூன்று கதைகள்!

– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் மார்ச் 2005 இதழ் 63 –
1. சிறுகதை: வேஷங்கள்! –  -சந்திரவதனா செல்வகுமாரன் (ஜேர்மனி)-

காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது மட்டும் அந்தக் காலைக்குச் சிறிதும் பொருந்தாது புழுங்கிக் கொண்டிருந்தது. கோபத்தில் தகித்தது என்று கூடச் சொல்லலாம்.

“எப்படி அவனால் முடிந்தது…! எப்படித் துணிந்து சொன்னான்…!” காலையில் சந்துரு சொன்ன செய்தியில் கொதிப்படைந்த அவள் கோபத்தை அக்சிலேட்டரில் காட்டினாள்.

சந்துரு வேறு யாருமல்ல. அவள் கணவன்தான். 15வருடத் திருமண வாழ்க்கை. அன்புக்குச் சின்னமாக நிலாவினி அவர்களின் செல்ல மகள்.

“நேற்று இரவுவரை அன்பாகத்தானே இருந்தான்…! நடித்தானா…?” காலையில் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவான் என அவள் கனவில் கூட நினைக்கவில்லை.

“உமா உம்மோடை நான் கொஞ்சம் கதைக்கோணும்.” காலையில் தேநீருடன் சென்ற உமா, படுக்கையிலிருந்த அவனை எழுப்பிய போது குழைந்தான். அவனது வார்த்தையின் பரிவில் நெகிழ்ந்து, அப்படியே அவனருகில் கட்டில் நுனியில் அமர்ந்து, அவன் மார்பின் சுருண்ட கேசங்களைக் கோதியபடி “சொல்லுங்கோ” என்றாள் மிக அன்பாக.

Continue Reading →