கோவை ஞானி என்ற போராளி

கோவை ஞானிசுப்ரபாரதிமணியன்சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு தத்துவார்த்தத்தளத்திலும், அரசியல் நிலைப்பாடுகளிலும் கோவை ஞானியின் தொடர்ந்த செயல்பாடு தீவிரமாகவே அமைந்தது.கீழை மார்க்சீயம், மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்ற நிலையில் தொடர்ந்து தனது சிந்தனைகளை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தார்.  பொதுவுடமையின் வீழ்ச்சி, பொதுவுடமையின் போதாமைக்கு பிறகு வளர்தெடுக்கப்பட்ட பின்நவீனத்துவம் சார்ந்து சிந்தனைகளும், கூட்டங்களும், பயிலரங்குகளும் என்று தொடர்ந்து நடத்தினார். அவரின் விளிம்பு நிலை மக்களின் ஆய்விற்கும் விளக்கத்திற்கும் இது இன்னும் உரமளித்தது. அமைப்பியல்வாதம் சார்ந்து அவரின் சிந்தனைகள் இன்னும் வலுப்பெற்றன.கட்டுடைத்தலும் அது சார்ந்த உளவியல் அணுகுமுறைகளும் தமிழ் விமர்சனத்தை வலுப்படுத்தின. பின்நவீனத்துவம் சார்ந்த சிந்தனைகளுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்ந்தவர்களின் நிராகரிப்பும், கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சார்ந்த வெகு சிலரின் இணக்கமான  அணுகுமுறைகளும் தொடர  பொதுவுடமை சார்ந்த பின் நவீனத்துவ அணுகுமுறைகளை வளர்தெடுக்கவேண்டியது பற்றிய அவரின் தொடர் சிந்தனை முக்கிய பங்களிப்பாக இருந்திருக்கிறது. தலித் இலக்கியச் சார்பும், தத்துவமும் இதிலிருந்து  பெறப்படக்கூடியதாக வழிகாடுதலை முன் வைத்தார்

Continue Reading →

நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்

மலர்மன்னன்- வெங்கட் சாமிநாதன் -கடந்த ஒரு வாரத்துக்கும் அதிகமாக எதுவுமே சரியில்லை. உத்பாதங்கள் ஏதும் நிகழ்வதற்கும் அதற்கு அறிகுறியாக  “கரு மேகங்கள் சூழுமாமே’ அப்படித்தான் கருமேகங்கள்: வெளியில் அல்ல, வீட்டுக்குள்.: எனக்கும் உடம்பு சரியில்லை. இரவெல்லாம் மார்பில் கபம், கனத்து வருகிறது. இருமல். உடம்பு வலி. போகட்டும் இது பருவகால உபத்திரவம். சரியாப் போகும் நாளாக ஆக என்று நினைத்து காலத்தைக் கடத்தினால், அது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு வருகிறது. மருமகளுக்கும் அதே சமயத்தில் உடல் நிலை சரியில்லை. வீட்டில் இருக்கும் நான்கு பேரில் இரண்டு பேருக்கு அவஸ்தை என்றால். இதே சமயத்தில் நெட் இணைப்பு எங்கோ போய்விட்டது. அதை உடன் சரி செய்ய முடியாது. இணைப்பு திரும்பக் கிடைப்பதற்கு ஆறு நாட்களாயின.

Continue Reading →

அவநம்பிக்கையிலும் கேலியிலும் பிறக்கும் கவிதை

- வெங்கட் சாமிநாதன் -ஐம்பது வருடங்களாயிற்று. தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பெரும் புரட்சியே நிகழ்ந்துள்ளது. வேறு எதில் புரட்சி நிகழ்ந்துள்ளதோ இல்லையோ, தமிழ்க் கவிதை என்று இப்போது சொல்லப்படுவதில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழ்க் கடற்கரையோரங்களில், கிழக்கு இந்திய தீவுகளில், சுமத்ராவில் சுனாமி வீசிய காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தோமே. கடற்கரையோர சாலைகளில் கார்கள் மிதந்து கொண்டிருந்தன. காவிரியில் வெள்ளம் வந்தால் ஒரு வருடம் தான் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் நாசமாகும். ஆனால் அடுத்த வருடங்களில் விளைச்சல் அமோகமாக இருக்கும். வெள்ளம் கொண்டு சேர்த்த வண்டல் மண்ணின் கொடை. ஆனால் தமிழ்க் கவிதையில் நிகழ்ந்துள்ளது சுனாமியா, காவிரி வெள்ளத்தின் ஆரம்ப நாசமா, என்று கேள்வி எழுந்தால், அவரவர் கவித்வ உணர்வைச் சார்ந்து தான் பதில் வரும்.. அதுவும் முடிவற்று வாதிக்கப்படும். ஒரு காலத்தில் ஏதும் திருமணமோ, பொங்கலோ, வாழ்த்துச் செய்தி அனுப்ப வெண்பா எழுதாத தமிழ்ப் பண்டிதர்களே கிடையாது. வெண்பா தான் மிகக் கஷ்டமான வடிவம் என்பார்கள். பண்டிதர்களுக்கும் வாழ்த்துப் பெற்றவர்களுக்கும் அது பற்றிக் கவலையில்லை. வந்தது கவிதைதானா என்பது பற்றியும் யாரும் கவலைப்பட்டதில்லை. அது உணரப்படுவது மாத்திரமே. சீரும் தளையும் ஒழுங்காக இருந்தால் அது கவிதை தான். அங்கு கவி பாடுதலும் அரங்கேற்றமும் சுலபமாக இருந்த காலம். இலக்கண அமைதி இருந்தால் போதும். அதிகம் போனால் பொருட் குற்றம் பார்த்த காலத்தில் நக்கீரர்கள் இருந்தார்கள். இப்போது பொருட் குற்றம் பார்ப்பது கருத்து சுதந்திரத்தில் கற்பனையில் கை வைப்பதாகும். இருந்தாலும் அந்தக் காலத்தில் ஏதோ ஒரு வரைமுறை இருந்தது.

Continue Reading →

எஸ்.ஏ உதயனின் நாவல்கள்

அறிமுகம்

எஸ்.ஏ உதயனின் நாவல்கள்சு.குணேஸ்வரன்தமிழ் இலக்கியத்தின் செழுமையினையும் குறித்த ஒரு மக்கட்கூட்டத்தின் பண்பாட்டு அம்சங்களையும் விரிவாகப் பதிவு செய்யும் இலக்கிய வடிவங்களில் புனைகதை இலக்கியம் முதன்மையானது. அண்மைக்காலத்தில் இலங்கைத் தமிழ்ப்படைப்பாளிகளின் பல நாவல்கள் வெளிவந்துள்ளன. போர்க்காலத்திலும் போரின் பின்னரும் வெளிவந்த நாவல்களை அரசியல் அடிப்படையிலும் பண்பாட்டின் அடிப்படையிலும் இரண்டு பிரிவாகப் பகுக்கலாம். அவற்றுள் பண்பாட்டின் அடிப்படையில் பெரிதும் கவனத்தைக் குவித்த படைப்புக்களாக எஸ். ஏ உதயனின் நாவல்கள் அமைகின்றன. இந்தக் கட்டுரையில் லோமியா, தெம்மாடுகள், வாசாப்பு, சொடுதா ஆகிய உதயனின் நான்கு நாவல்களும் நோக்கப்படுகின்றன. இவை கடந்துபோன காலங்கள் பற்றியும் அவை கொண்டியங்கிய பண்பாட்டு பெறுமானங்களின் மீதான வேணாவா குறித்தும் பேசுகின்றன. கழிந்துபோன காலத்தின் எச்சங்களான நினைவுகளின்மீது கட்டியெழுப்பப்பட்ட படைப்புக்கள் இவை. ஒரு இனத்தின், ஒரு சமூகத்தின் படிப்படியான மாறுதல்களைக் காட்டுபவை. பலவற்றை இந்தச் சமூகம் மறந்துவிடுகிறது. சிலவற்றையே ஞாபகக் கிடங்குகளில் இருந்து மீட்டுப் பார்க்கின்றது. மீளவும் மீளவும் இந்தச் சமூகம் தவறுவிடும்போது கடந்த காலங்கள் ஆசிரியர் சொல்லிக்கொடுத்த பாடங்களாகி விடுகின்றன. கடற்பிரதேச மக்களின் வாழ்க்கை அம்சங்கள், அவர்களின் பண்பாடுகள், வாழ்க்கைப் போராட்டங்கள், மாறுதல்கள் என ஏறத்தாள எண்பது வருடத்திற்கு முற்பட்ட காலங்களில் இருந்தான கதைகளை தனது நாவல்களில் எஸ்.ஏ உதயன் பதிவு செய்கிறார்.

Continue Reading →

உறைந்துபோன அரசியல் கொண்டவரின் உளறல்கள்

யமுனா ராஜேந்திரன் -“ காலம் இதழில் எஸ்.என்.நாகராசன் அவர்களின் நேர்காணல் ஓன்று வெளியாகியிருக்கிறது. அதைப் படிக்கும்போது காலம் உறைந்துவிட்டதுபோன்ற உணர்வு. அவரை மகான் ஆக்கிப்  பார்க்கவேண்டும் என நேர்காணல் செய்தவர்கள் விரும்பி இருப்பார்கள் போலும். அது அவர்களது உரிமை. புகைப்படத்தில் பார்க்கும்போது நாகராசன் ஆரோக்கியமாகத் தெரிகிறார். இத்தகைய நேர்காணல்கள் மார்க்சியத்தைக் காலம் கடந்த தத்துவம் என்று உணரச்செய்கின்றன. மார்க்சியர்கள் என்று யாரைக் குறிப்பிடுவது? மார்க்ஸ் எழுதிய நூல்களைப் படித்தவர்களையா? அல்லது அவரது தத்துவத்தை தனது அணுகுமுறையின் அடிப்படையாகக் கொண்டவர்களையா? நேர்காணல் எடுத்திருப்பவர் தமிழ்நாட்டில் நான்கு பேர்களை மார்க்சியர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெளிநாட்டில் வசிக்கிற காரணத்தால் தனது பெயரை அந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டுவிட்டார் போலிருக்கிறது. அந்தப் பட்டியலில் பேராசிரியர் முத்துமோகனை அவர் சேர்த்திருக்கிறார். ( இதைவிடப் பெரிய விருது முத்துமோகனுக்கு  வேறென்ன இருக்கமுடியும்?). இன்னும் கொஞ்சம் கருணை வைத்து அந்தப் பட்டியலை நேர்கண்டவர்  நீட்டலாம். ஏனென்றால் இந்தப் பட்டியலை அதில் இடம்பெற்றிருப்பவர்களே கூட முழுமையானதென்று ஏற்கமாட்டார்கள். இத்தனை பெரிய தமிழ் நாட்டில் நாலே நாலு மார்க்சியர்கள் தான் இருக்கிறார்கள் என்றால் அது மார்க்சியத்துக்கும் அவமானம் அல்லவா! “

Continue Reading →

வ.ந.கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவல் பற்றி…

குடிவரவாளன் பற்றிச் சில குறிப்புகள்……

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'இந்த நாவல் என் வாழ்வின் அனுபவங்களை மையமாக வைத்து உருவானது. இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களினால் உலகின் நானா திக்குகளையும் நோக்கிப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் நானுமொருவன். கனடா நோக்கி, மேலும் 18 ஈழத்தமிழர்களுடன் பயணித்துகொண்டிருந்த எனது பயணம் இடையில் தடைபட்டது. பாஸ்டனிலிருந்து கனடாவிற்கு எம்மை ஏற்றிச்செல்லவிருந்த டெல்டா ‘எயார் லைன்ஸ்’ எம்மை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. அதன் காரணமாக, மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரினோம். இவ்விதமாக பாஸ்டனில் அகதிக்காக விண்ணப்பித்த எம்மை அமெரிக்க அரசு நியூயார்க்கிலுள்ள புரூக்லீனிலிருந்த தடுப்பு முகாமினுள் அடைத்து வைத்தது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் அத்தடுப்பு முகாம் வாழ்வினுள் எம் சுதந்திரத்தை இழந்திருந்தோம். அதன் பின்னர் எம்மை விடுதலை செய்தார்கள்.

Continue Reading →

(4) – சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -ஒரு முறை செல்லப்பா என்னை பி.எஸ் ராமையாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அந்தக் காலத்தில் நான் ராமையாவின் எழுத்து அதிகம் படித்ததில்லை. அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மலரும் மணமும் என்ற தலைப்பு என்று நினைவு, அதைப்  படித்திருக்கிறேன். அதில் நிறையப் பேர்களால் பாராட்டப் பெற்ற நக்ஷத்திரக் குழந்தைகள் என்ற கதையில் குழந்தையின் கேள்வியும் அதன் துக்கமும் மிகவும் செயற்கையாகத் தோன்றியது. எந்தக் குழந்தை, ”நக்ஷத்திரம் விழுந்துடுத்து, யாரோ பொய் சொல்லீட்டா அதனாலே தான்”, என்று அழும்? ஆனால் அவர் எந்தக் காரியத்தைத் தொட்டாலும் அதில் மற்ற எவரையும் விட அதிகம் சாகஸம் காட்டக் கூடியவர் என்பதில் எனக்கு பிரமிப்பு. மணிக்கொடிக்கால எழுத்தாளர் எவரையும் விட அக்கால மோகமான சினிமாவில் அதிகம் தன் சாமர்த்தியத்தைக் காட்டியவர். ஜெமினியின் படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். சினிமாவைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனல் அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. பிச்சமூர்த்தி, வ.ரா பி.எஸ் ராமையா, ச.து.சு. யோகியார் எல்லோரும் சேர்ந்து ஒரு திரைப்படம் எடுக்க முயன்றாரகள் என்று கூட கேள்விப்பட்டிருக்கிறேன். ஏதோ சொன்னதை, தனக்குத் தெரிந்ததைச் செய்வதற்கும் மேலாக அந்தத் துறையே தனக்கு அத்துபடி ஆகிவிட்டது போல ஒரு புத்தகமே எழுதும் சாகஸம் பி.எஸ் ராமையாவின் ஆளுமையைச் சேர்ந்தது தான். ஆனந்த விகடனோ இல்லை குமுதமோ நினைவில் இல்லை, ஒரு தொடர் கதை எழுதச் சொன்னால் அதற்கும் அவர் ரெடி. குங்குமப் பொட்டு குமாரசாமி என்ற அந்த தொடர்கதை ஒரு வருட காலமோ என்னமோ வந்தது. கதைக்கான பாத்திரங்களையும் சம்பவங்களையும் கணக்கின்றி கற்பனை செய்து கொள்வதில் மன்னன் தான். மாதிரிக்கென்று அவர் கதைகள் சில படித்திருக்கிறேன். அப்போது அவர் வாரம் ஒரு கதை எழுதித் தருகிறேன் என்று சொல்லி ஒரு வருடத்துக்கும் மேலாக தவறாது வாரம் ஒரு கதை எழுதித் தந்தவர். அந்தக் கதைகளில் நான் மாதிரிகென்று ஒரு சில படித்ததில் அவரது ஒரு கதையில் நாலு கதைகள் பிய்த்து எழுதத் தேவையான சம்பவங்களும், திருப்பங்களும், தேவையான கதா பாத்திரங்களும் இருக்கும்.

Continue Reading →

சே குவேராவும் யாசர் அரபாத்தும் காட்டிய ஹாலிவுட் சினிமா

யமுனா ராஜேந்திரன் -பிப்ரவரி 18 ஆம் திகதி இரண்டு கட்டுரைகள் வாசிக்க முடிந்தது. கட்டுரைகளின் காலப்பொருத்தம் உண்மையில் ஆச்சர்யமாக இருந்தது. இலண்டன் த இன்டிபென்டன்ட் பத்திரிக்கையில் நெஞ்சை அறுக்கும் வலி கொண்டதாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வன் சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட முறை குறித்த கோரமான படம் வெளியாகி இருந்தது. புகைப்படம் தொடர்பாக ஆவணப்பட இயக்குனர் ஹாலும் மக்ரே ஒரு கட்டுரையும் எழுதி இருந்தார். ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைத் திரைப்பட விழா நிகழ்வில் திரையிடப்படும் ஹாலும் மக்ரேவின் நோ பயர் சோன் ஆவணப்படத்தில் இடம்பெறும் புகைப்படங்களே த இன்டிபென்டட்டில் வெளியாகியிருந்தது. மகிந்த அரசின் ‘கருணை அரசியலுக்கு’ சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை நடத்தப்பட்ட முறை ஒரு சான்று. இதே 18 ஆம் திகதி குளோபல் தமிழ் நியூஸ் தளத்தில் நிலாந்தனின் படம் பார் பாடம் படி கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நிலாந்தனுக்;கு ஹாலும் மக்ரேவின் ஆவணப்படமும் கூட ஹாலிவுட் சினிமாவின் அங்கமாகத்தான் தோன்றியிருக்கும் என நினைக்கிறேன்.

Continue Reading →

வன்பாலுறவும் பெண்நிலைவாதமும்

யமுனா ராஜேந்திரன் -2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னிரவில் இந்தியத் தலைநகர் தில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயதேயான  மருத்துவப் படிப்பு மாணவி ஐவர் கும்பலால் வன்பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்டதனையடுத்து   இங்கிலாந்தின் த கார்டியன் அமெரிக்காவின்  நியூயார்க் டைம்ஸ் பிரான்சின்  லெமான்டே டிப்ளமேடிக் உள்ளிட்ட உலக ஊடகங்கள் அனைத்திலும் அச்செய்தி  மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரமானது. தில்லியில் எழுந்த மக்கள் திரள் போராட்டங்கள் அரபுப் புரட்சியின் மக்கள் திரள் எழுச்சியை ஞாபகப்படுத்தின. மிருகத்தனமான வல்லுறவுக்கு ஆளானாதால் உள்ளுறுப்புகள் சிதைந்த நிலையில் இரண்டு வாரங்கள் தனது உயிருக்குப் போராடிய மாணவி சிங்கப்பூர் மருத்துவ மனையில் மரணமுற்றதனையடுத்து ஐக்கியநாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூன் தனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொண்டார்.  இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்திரா காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பாரதீய ஜனதாக் கட்சித் தலைவி சுஸ்மா ஸ்வராஜ் போன்றவர்களுக்கு இடையில் இதனை முன்வைத்து அரசியல் உரசல்கள் இடம்பெற்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா வன்பாலுறவில் ஈடுபடுபடுபவர்களுக்கு இரசாயணமுறையில் ஆண்மைநீக்கம் செய்யும் தண்டனையைப் பரிந்துரைத்தார். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலரும், அரசியல்வாதிகளான பிஜேபியினரும் வன்பாலுறவுக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையைப் பரிந்துரைத்தனர். வன்பாலுறவுக்கு ஆளாகி மரணமுற்ற பெண்ணின் தந்தை வல்லுறவில் மிக வன்முறையாகவும் வக்கிரமாகவும் ஈடுபட்ட ’17  வயது மைனருக்குத்தான் முதலில் மரணதண்டனை வழங்க வேண்டும்’ எனக் கோரினார். மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையை அடுத்து தண்டனையின் வயது வரம்பு 17 ஆகக் குறைக்கப்பட்டது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் -9: எதுவரை.நெட் இணையத்தளத்தில் கே.எஸ்.சுதாகர் எழுதிய ‘புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்’ என்னும் கட்டுரை பற்றிச் சில குறிப்புகள்.

வாசிப்பும் யோசிப்பும்!//இன்னமும் புகலிடப்படைப்புகளையோ அறிவியல் புதினங்களையோ எழுத வேண்டும் என்று அவர்களுக்கு உறைக்கவில்லை. உண்மையில் புலம்பெயர்ந்தநாடுகளில் கிடைக்கும் புதிய சூழல், சுதந்திரம், வாய்ப்புவசதி போன்றவற்றை வைத்துக் கொண்டு நல்ல புகலிடப் படைப்புகள் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன.// ‘புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்’ கட்டுரையில் கே.எஸ்.சுதாகர் –

இன்னமும் புகலிடப்படைப்புகளையோ அறிவியல் புதினங்களையோ எழுத வேண்டும் என்று அவர்களுக்கு உறைக்கவில்லை.’ என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இக்கூற்றானது ‘இன்னும் அதிக அளவில் புகலிடப் படைப்புகள் அல்லது அறிவியல் புதினங்கள் வந்திருக்கவேண்டும்’ என்று வந்திருக்க வேண்டும். சிறுகதைகளைப் பொறுத்த அளவில் அதிக அளவில் புகலிட அனுபவங்களை மையமாக வைத்து வெளிவந்துள்ளன. நாவல்களைப் பொறுத்த அளவில் அதிக அளவில் வரவில்லையென்று கூறலாம். ஆனால் அது தவறல்ல. அதற்காக வெளிவந்த படைப்புகளின் தரத்தை அதனடிப்படையில் அளவிடுவது தவறென்பது என் கருத்து. ஈழத்தில் நிலவிய அரசியல் சூழல் காரணமாகப் புகலிடம் நாடிப் புலம் பெயர்ந்த தமிழர்களின் படைப்புகளின் பிரதான அமசங்களாக இழந்த மண் பற்றிய கழிவிரக்கம், கனவுகள் மற்றும் புகலிட அனுபவங்களெல்லாமிருக்கும். அவ்விதமிருப்பதுதான் புகலிடப் படைப்புகளின் பிரதானமான பண்பு. அதே சமயம் அடுத்த தலைமுறையினரிடமிருந்து அதிக அளவில் புகலிட நாட்டின் அனுபவங்கள் வெளிப்படும். அதுவும் இயற்கை. இரண்டாவது தலைமுறையினரிலும் இரு வகையினர். சிறுவயதில் பெற்றோருடன் புகலிடம் நாடிச் சென்றவர்கள். புகலிட நாடுகளில் பிறந்தவர்கள். இவர்களது அனுபவ்ங்களும் ஒரே மாதிரியாக இருக்கப் போவதில்லை. அவற்றின் அடிப்படையில் அவர்களது அனுபவங்கள் அவர்களது படைப்புகளில் வெளிப்படும். அடுத்தது ‘ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன.’ என்ற கூற்றையும் என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவற்றுடன் ஈழத்து அரசியல் நிகழ்வுகளையும் சுற்றி வருகின்றன என்றிருந்தால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவிருக்கும்.

Continue Reading →