‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர் –
பதிவுகள் பெப்ருவரி 2003 இதழ் 38
கா காகா கா.. என்ற சத்தம் அவர் வீட்டின் பின் பக்கமிருந்து வந்திருக்க வேண்டும். கையில் கட்டியிருந்த வாட்சைப் பார்த்துக் கொண்டார். மணி காலை 5.30 என்றது. தன்னிடமிருந்த மாற்றுத் திறப்பின் மூலம் கதவினைத் திறந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்தார். கா.. கா என்ற குரல் இந்தமுறை அதிக வன்மையுடன் அவரைத் தொட்டது. பின்புறம் சென்று பார்க்கலாமா? என்று நினைத்து மீண்டும் அந்த குரல் வந்தால் போய்ப் பார்க்கலாம் எனத் தீர்மானித்தார். உறங்கிக் கிடந்த வீட்டை எழுப்ப நினைத்து ஸ்விட்சைத் தட்டினார். வெளிச்சம் நிரம்பி வழிந்தது. ஜன்னல் கண்ணாடிகளுக்கு வெளியே இருந்த பிவிசி திரைகளை மின்சாரப் பொத்தானை அழுத்தி சுருட்டினார். உள்ளே இருந்த மெல்லிய பிரெஞ்சுத் திரைச் சீலைகளும் நீக்கபட்டன. வெளியே ஆரவாரமற்ற ஐரோப்பிய வைகறை. தலையில் ஒளியைச் சுற்றிய வண்ணம் மெல்லிய உறுமலோடு குப்பைக்கூடைகளை ஒரு பகாசூரனின் பசி ஆர்வத்தோடு வயிற்றில் இட்டுக் கொள்ளும் குப்பையள்ளும் லாரி. சிறிது நேரம் அந்தக் காட்சியில் லயிப்பற்றுக் கவனம் செலுத்த, மறுபடியும் பின்பக்கமிருந்து கா கா என்ற அந்தக் குரல். இந்தியாவில் மட்டுமே அவர் கேட்டிருக்கின்ற ஓசை. குரலா? ஓசையா? எப்படி இனம் பிரிப்பது என்ற கேள்வி தேவையில்லாமல் எழுந்தது. சற்று கவனமாகக் கேட்டார். ஆச்சரியமாக இருந்தது. அது ஒரு காகத்தின் குரல் தான். இங்கே எப்படி?
இந்தியாவிற்குப் போகும் போதெல்லாம் அந்த குரலின் அல்லது ஓசையின் சுகத்திற்காகவே வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் புழக்கடைப் பக்கம் சென்று படுப்பது வழக்கம். அதிகாலையில் எங்கேயோ ஒரு சேவல் “கொக்கரிக்கோ ” எனத் தொண்டை கமறலோடு ஆரம்பித்துவைக்க அது ஊரெல்லாம் எதிரொலித்துவிட்டு இவரது சகோதரர் வீட்டு கோழிக்கூண்டில் வந்து முடியும். இந்த நிகழ்வுக்காகவே காத்திருந்தது போல, ஒரு காகம் கா.. கா என ஆரம்பித்துக் கொடுக்க, அதனைத் தொடர்ந்து, அடுத்த அரை மணி நேரத்திற்கு கா.. கா என்ற கச்சேரி. ” இந்தப் பாழாப்போன காக்கைகள், தூக்கத்தைக் கெடுக்குதே! உள்ளே வந்து படுக்கக் கூடாதா? என்று அங்கலாய்க்கும் அவரது அம்மாவிற்குத் தெரியுமா? இந்தியாவிற்கு அவரை இழுத்துவருகின்ற விஷயங்களில் இதுபோன்ற ஓசைகளும் உள்ளடக்கம் என்று.
இந்தியாவில் இருக்கும் வரை, அமாவாசை கிருத்திகை எனக் கடவுள்களுக்கோ, முன்னோர்களுக்கோ வீட்டில் படைக்கும் போதெல்லாம் காக்கைக்குச் சாதம் வைப்பது இவராகத்தான் இருக்கும். பூவரச இலையைக் கிள்ளி ஒரு கவளப் படையலை ஏந்தி பின்புறமிருக்கும் கிணற்றடிச் சுவரில் கையிலிருக்கும் குவளைநீரைத் தெளித்து, சோற்றுக் கவளத்தை வைத்துவிட்டுக் காகத்தைத் தேடி அது ஒன்று பத்தாகும் ரசவாதத்தை மெய்மறந்து கண்களை விரியவிட்டிருக்கிறார். கடைசியாக அவரது அப்பா இறந்தபோது,காரியப் பிண்டத்தைக் குளத்தங்கரையில் வைத்துவிட்டு துக்கத்தை மறந்து, காகங்களின் ஆள் சேர்ப்பில் சந்தோஷம் கண்டது ஞாபகத்திற்கு வந்து போனது..