ஜேர்ஸி கொஸின்ஸ்கியைத் தமிழ் இலக்கிய உலகுக்கு முதன் முதலில் அறிமுகப்படுத்திய கட்டுரை சுபமங்களா இதழில் வெளியான Being There கட்டுரை. அது அவரது புகழ்பெற்ற நாவல். அளவில் சிறியதானாலும் காரம் மிக்க நாவல். திரைப்படமாகவும் வெளியானது. விம்ப ஆராதனை மிக்க தற்காலச்சமுதாயத்தை விமர்சிக்கும் நாவல். அக்கட்டுரையை எழுதியவர் வ.ந.கிரிதரனாகிய நானே.
ஜேர்ஸி கொஸின்ஸ்கி போலந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபுகுந்து , ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கி , ஆங்கில இலக்கியத்தில் தடம் பதித்த எழுத்தாளர்.
இவரது ‘நிறமூட்டப்பெற்ற பறவை’ (The Painted Bird) நாவல் இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க இலக்கியத்தில்; முக்கிய படைப்பாகக் கருதப்படும் படைப்பு. 1965இல் வெளியான இந்நாவல் இதுவரை முப்பதுக்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகயுத்தக் காலத்து மானுட உரிமை மீறல்கள் வாசிப்பவர்தம் இதயங்கள் உறையும் வகையில் சில இடங்களில் மிகவும் குரூரமாக விபரிக்கப்பட்டுள்ளதால் வாசகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. யூதச்சிறிவனொருவனை அவனது பெற்றோர் அவனாவது நாசிகளிடமிருந்து தப்பிப்பிழைக்கட்டும் என்னும் எண்ணத்துடன் மனிதரொருவனுடன் அனுப்பி வைக்கின்றனர். இவ்விதம் அனுப்பப்பட்ட அச்சிறுவன் யுத்தச்சூழல் நிலவிய காலகட்டத்தில் கிழக்கைரோப்பிய நாடுகளெங்கும் தப்பிப் பிழைப்பதற்காக அலைந்து திரிகின்றான். பல்வேறு வகைப்பட்ட அனுபவங்களுக்குள்ளாகின்றான். அவற்ற விபரிப்பதே ‘நிறமூட்டப்பெற்ற பறவை’ நாவல்.
பல வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுடன் இந்நாவல் பற்றி உரையாடியபோது, அந்நாவலால் ஈர்க்கப்பட்ட அவர் அந்நாவலைத் தமிழில் ஸ்நேகா பதிப்பகம் மூலம் வெளியிட விரும்புவதாகக் கூறினார். நாவலிருந்தால் அனுப்பி உதவுமாறும் கூறினார். நானும் அந்நாவலைபெற்று பாலாஜிக்கு அனுப்பினேன். இது பற்றி நண்பர் பாலாஜி என்னுடன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் வருமாறு:
எழுத்தாளர் ஜெயகாந்தன் என் வாழ்க்கையில் என் பால்ய காலத்திலிருந்து இன்றுவரை என்னை மிகவும் பாதித்த ,கவர்ந்த, பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர். உண்மையில் நான் வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே இவரைப்பற்றி அறிந்திருக்கின்றேன். அப்பா அப்பொழுதெல்லாம் ஆனந்த விகடனில் வெளியான ஜெயகாந்தனின் ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’ என்னும் குறுநாவலைப்பற்றிக் கதைத்துக்கொண்டிருப்பார். அப்பொழுதிலுருந்தே ஜெயகாந்தனைப்பற்றி அறிந்திருக்கின்றேன். அதன்பின் நான் வாசிக்கத்தொடங்கிய குறுகிய காலத்திலேயே நிறைய வாசிக்கத்தொடங்கி விட்டேன். ஜெயகாந்தனின் விகடனில் வெளியான முத்திரைச் சிறுகதைகளிலொன்றான ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’ தொடக்கம், ‘தினமணிக்கதிர்ர்’ சஞ்சிகையில் வெளியான ஜெயகாந்தனின் பல சிறுகதைகள் என அவரது கதைகளை அதிகம் வாசித்திருக்கின்றேன். ‘தினமணிக்கதிர்’ சஞ்சிகையில் ஜெயகாந்தனின் சிறுகதைத்தொகுப்பபொன்றிலிருந்து சிறுகதைகளை மீள்பிரசுரம் செய்துகொண்டிருந்தார்கள். ‘ஒரு பிடி சோறு’, ‘ராசா வந்திட்டாரு’, ‘பிணக்கு’, ‘டிரெடில்’ என்று சிறுகதைகள் பல வெளியாகின. தொடர்ந்து அவரது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கோபுலுவின் ஓவியங்களுடன் தொடராக வெளியானது. ‘ரிஷி மூலம்’ குறுநாவலும் , தொடராக கோபுலுவின் ஓவியங்களுடன் வெளியானது. ”அக்காலகட்டத்தில்தான் விகடனில் அவரது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ ஆகிய நாவல்கள் தொடராக வெளியாகின. ராணிமுத்து பிரசுரங்களாக அவரது கைவிலங்கு குறுநாவல் ‘காவல் தெய்வம்’ என்னும் பெயரில் வெளியானது. அதனுடன் சேர்ந்து ‘கருணையினால் அல்ல’ குறுநாவலுமிருந்தது. தொடர்ந்து ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலும் ராணிமுத்துப் பிரசுரமாக வெளியானது.
இவை தவிர நான் வாசிக்கத்தொடங்குவதற்கு முன்னர் வெளியான ‘யாருக்காக அழுதான்?’, ‘உன்னைப்போல் ஒருவன்’ ஆகியவற்றைப் பின்னர் தேடியெடுத்து வாசித்திருக்கின்றேன்.
ஹைதராபாத்தில் கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டி பயணித்த ‘ஸ்கூட்ட’ரின் ‘டய’ரொன்றினைப் ‘பங்ச’ராக்கி, , அவருக்கு உதவுவதுபோல் நடித்து, அவரைப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிப் படுகொலை செய்த செய்தியானது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விரைவிலேயே கொலையாளிகள் நால்வரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். பிரியங்கா ரெட்டி இறப்பதற்கு முன்னர் தனது சகோதரியை அழைத்துள்ளார். தனக்குப் பயமாகவுள்ளதாகவும், தன்னுடன் பேசிக்கொண்டிருக்கும்படியும் வேண்டியுள்ளார். நிலைமையின் தீவிரத்தைச் சகோதரி உணர்ந்திருக்கவில்லை. பிரியங்கா ரெட்டியும் சகோதரியை அழைத்ததற்குப் பதில் காவல்துறையினைரை அழைத்திருந்தால் ஒருவேளை தப்பியிருக்கக்கூடும். இது போன்ற சந்தர்ப்பங்களைப பெண்கள் தவிர்க்க வேண்டும். இரவுகளில் தனிமையாக நேரங்கெட்ட நேரங்களில் ‘அண்டர்கிரவுண்ட்’ வாகனத்தரிப்பிடங்களில் வாகனத்தை நிறுத்தச் செல்லல், தனிமையாகத் தொலைதூரத்துக்குப் பயணித்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். செல்லும் வழியில் ஏதாவது வாகனத்துக்கு நடந்து விட்டால் , நிராதரவான நிலையில் , தவிக்கும் நிலை ஏற்படும் சாத்தியமிருப்பதால் இதுபோன்ற சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.
‘டொரண்டோ’ நகரில் இளம் பெண் வைத்தியரொருவர் தான் வசிக்கும் ‘கொண்டோ’வின் ‘அண்டர்கிறவுண்ட்’ வாகனத்தரிப்பிடத்துக்கு நள்ளிரவில் தனது வாகனத்தைக் கொண்டு சென்றபோது அங்கிருந்த வீதி மனிதனிருவனால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது நினைவுக்கு வருகின்றது.
இலங்கையில் தமிழர்கள் வாழும் பல இடங்களில் வருடா வருடம் விடுதலைப் புலிகளால் நினைவு கூரப்படும் மாவீரர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. அமைதியான முறையில் அசம்பாவிதங்கள் எவையுமின்றி இடம்பெற்றுள்ளன. புகலிடத் தமிழர்கள் நினைவு கூரும் மாவீர்ர் தின நிகழ்வுகளுக்கும் , இலங்கையில் நடைபெறும் மாவீர்ர்தின நிகழ்வுகளுக்குமிடையில் காணப்படும் வேறுபாடு புகலிடத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் நவம்பர் 26 கொண்டாடப் படுவதைப்போல் இலங்கையில் கொண்டாடப்படுவதில்லை. ஆனால் மாவீரர் தின நிகழ்வுகள் நினைவு கூர்ப்படுவது இலங்கையில் தடுக்கப்படுவதில்லை. இலங்கை அரசக் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிக்கரை நிறுவனம் வெளியிடும் தமிழ்ப்பத்திரிகை தினகரன். தினகரன் இம்முறை வடக்கில் நடக்கும் ‘மாவீரர் தின’ நிகழ்வினை வெளிப்படுத்தும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து “நல்லூரில் மாவீரர்களுக்கு அஞ்சலி” என்னும் தலைப்பிட்டுப் பிரசுரித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கு மாவீரர் தின நிகழ்வுகள் நடப்பதில் ஆட்சேபணையில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்தநாள் மூலம் நினைவு கூரப்படுவதை இலங்கை அரசாங்கத்தினால் ஏற்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் உருவப்படங்கள் மீண்டும் புலிகள் போன்ற அமைப்புகள் இலங்கையில் உருவாகக் காரணமாக அமைந்துவிடும் என்று இலங்கை அரசு ஐயுறுவதுதான்.
எமது நீர்கொழும்பூரில் கலை, இலக்கியவாதிகள் இணைந்து இலக்கிய வட்டம் என்ற அமைப்பை 1975 களில் தொடங்கினோம். அதன் தலைவராக இயங்கியவர் எழுத்தாளர் மு. பஷீர். இந்த அமைப்புக்கு முன்னோடியாக எமது இல்லத்தில் வளர்மதி நூலகம் என்ற நூல் நிலையத்தையும் தொடக்கியிருந்தேன். வளர்மதி நூலகம் 1971 இல் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி தொடங்கப்பட்ட காலத்தில் உருவானது. மாலையானதும் ஊரடங்கு உத்தரவு அமுலாகிவிடும். வெளியே செல்லமுடியாது. அக்காலத்தில் தொலைக்காட்சியும் இல்லை.
இலக்கிய நண்பர்கள் மத்தியில் நூல்களை பரிமாரிக்கொள்வதற்காகவே வளர்மதி இயங்கியது. வளர்மதி கையெழுத்து சஞ்சிகையும் நடத்தினோம். இக்காலப்பகுதியில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவும் எங்கள் ஊருக்குவந்து அறிமுகமானார்.மல்லிகை நீர்கொழும்பு சிறப்பிதழும் வெளியிட்டோம். அதற்கு முன்னர் எமது மாமா முறையானவரான அ. மயில்வாகனன் தனது சாந்தி அச்சகத்திலிருந்து அண்ணி என்ற மாத இதழை சில மாதங்கள் நடத்தினார். அதன் முதல் இதழின் வெளியீட்டு விழாவுக்கு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியின்போதுதான் பஷீர் எனக்கு அறிமுகமானார். எனினும் அப்போது நான் இலக்கியப்பிரவேசம் செய்திருக்கவில்லை. பழைய பஸ்நிலையத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த மாநகர சபையின் பொது நூலகத்தில் பஷீரை அவ்வப்போது சந்திப்பேன். அவருக்குத் தெரிந்த தொழில் பீடி சுற்றுவது. அவரது வாப்பா கேரளத்திலிருந்து வந்தவர்.
புதிய ஜனாதிபதியாக நந்தசேன கோத்தபாயா ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டதிலிருந்து நடைபெறும் செயல்கள் நாட்டின் எதிர்காலம் பற்றிய பல்வகை வினாக்களை எழுப்புகின்றன. நாட்டின் எதிர்காலம் பற்றிய முதலாவது அச்சம் நாடு எவ்வகையான ஆட்சியமைப்பை நோக்கிச் செல்கின்றது என்பதையிட்டுத்தான். 2015இல் நடைபெற்ற ஜனாதிபதி ஆட்சியின்போது எதிர்பாராதவிதமாக மகிந்த ராஜபக்ஷா தேர்தலில் தோல்வியுற்றபின்னர் தன் தம்பியான கோத்தபாயா ராஜபக்சவுடன் இணைந்து நாட்டின் தேர்தலை இரத்துச் செய்துவிட்டு ஆட்சியில் நீடிக்கச் செய்த சதி வெற்றியளிக்கவில்லை. முப்படைத்தளபதிகளும், காவல்துறைத் தலைவரும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் அச்சமுற்ற மகிந்த ராஜபக்ச அவசர அவசரமாக, தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடமுன்னரே, ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து அவருடன் பாதுகாப்பாக வெளியேறியதாக ஒரு செய்தி இலங்கை அரசியலில் அடிபடுகின்றது. அதில் பாடம் படித்த மகிந்தவும், கோதபாயாவும் எதிர்காலத்தில் அவ்விதமானதொரு நிலை தோன்றக்கூடாது என்பதில் உறுதியான நோக்கில் இருப்பதுபோல் தெரிகின்றது.
தற்போதுள்ள அரசியல் சூழலில் இன்னும் நீண்ட காலம் இலங்கை அரசியலில் ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சிக் கட்டில் இருக்கப்போகின்றனர். அவ்விதமிருந்து இவர்கள்மீது அதிருப்தியுற்று மக்கள் முன்புபோல் தேர்தலில் தோல்வியுற வைத்தாலும் கோத்தபாயா ஆட்சியிலிருந்து இறங்கப்போவதில்லை போல்தான் தோன்றுகின்றது. அடிப்படையில் அவர் அரசியல் தலைவரல்லர்.இராணுவத்தளபதி. அதனால்தான் பதவிக்கு வந்தவுடனேயே இராணுவத்தினரின் கைகளில் பாதுகாப்பைக் கொடுத்திருக்கின்றார். இதனால் ஏற்படும் முக்கிய நன்மைகள்: காவல்துறையினரின் முக்கியத்துவம் குறைகின்றது. காவல்துறையின் புலனாய்வுப்பிரிவின் படையினர் மீது புலனாய்வு விசாரணைகளை ஆரம்பிக்கப் போவதில்லை. ஏற்கனவே அவ்விதம் விசாரணைகளை முன்னெடுத்தவர் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழர்களின் உரிமைப்போராட்டம் ஆயுதம் தாங்கிய போராட்டம் என்னும் நிலையிலிருந்து வேறொரு கோணத்தில் பயணிக்கின்றது. 2009இல் ஆயுதப் போராட்டம் பேரழிவுடன், பாரிய மனித உரிமை மீறல்களுடண் முடிவுக்கு வந்தது. ஆயுதப் போராட்டக் காலத்தில் இலங்கையில் பாரிய மனித அழிவுகள் ஏற்பட்டன. இலங்கைப்படையினருக்கும் , போராளிகளுக்குமிடையிலான மோதல்களில் போராளிகள், பொதுமக்கள், படையினர் எனப் பலரும் அழிந்தனர். சிறைகளில் அடைக்கப்பட்டனர். பல்வேறு வதைகளுக்கு உள்ளாகினர். இலங்கை அரசு பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்தியதால் இனங்களுக்கிடையிலான கலவரங்கள், மோதல்கள் அழிவுகளைத் தந்தன. தற்போது அந்நிலையினைத் தாண்டி இன்னுமொரு காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.
இக்காலகட்டத்தில் கடந்த கால வரலாறானது பக்கச்சார்பற்றுப் பதியப்படுவதுடன், நினைவு கூரப்படவும் வேண்டும். ஏற்பட்ட அழிவுகளிலிருந்து பாடங்களைக் கற்க வேண்டும். தமிழ் அரசியல் அமைப்புகள் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுண்டு இருந்தாலும், இவ்விடயத்தில் ஒன்று பட்டுச் செயற்படலாம். எதிர்காலத்தில் இவ்விதமாகப் பல்வேறு விடயங்களில் ஒன்றுபட்டு இயங்குவதற்கு இதுவோர் ஆரம்பமாக இருக்க உதவும். வரலாறானது பக்கச்சார்பற்று அணுகப்பட வேண்டுமென்பது எதனை வெளிப்படுத்துகின்றது? அனைத்து அமைப்புகளும் தமக்கிடையில் நிலவிய முரண்பாடுகள் காரணமாகப் பல்வேறு சார்பு நிலைகளை எடுத்தன. பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன. இயக்கங்களின் வதை முகாம்களில் பலர் வதைக்கப்பட்டனர். அதே சமயம் இடம் பெற்ற யுத்தத்தினால் மாந்தர்கள் பலரும் பேரழிவுகளுக்குள்ளாகினர்.
– தினமணி பத்திரிகையில் (தினமணி.காம்) தனது நூலான வெளியான ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’ நூல் மதிப்புரையினை எழுத்தாளர் ஆசி.கந்தராஜா அவர்கள் எம்முடன் பகிர்ந்துகொண்டார். அதனை உங்களுடன் பகிர்ந்துகொளீன்றோம். நன்றி. –
சுஜாதா தமது ‘கற்றதும் பெற்றதுமில்’ இப்படி எழுதி இருந்தார் ஒருமுறை.. அதாவது இனிமேற்கொண்டு தனக்கு புத்தகம் அனுப்புபவர்கள் சமையல் குறித்த புத்தகங்களை அனுப்பினால் அதை வாசிக்க தனக்கு மிகவும் இஷ்டம் என்று. இதை சுஜாதாவின் மொழியில் எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. ஆனால், அவர் சொன்னதின் அர்த்தம் இது தான். அந்த நேரத்தில் அவர் கையில் ஆசி.கந்தராஜாவின் ‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’ புத்தகம் கிடைத்திருந்தால் ஒருவேளை உச்சி முகர்ந்திருப்பாராயிருக்கும். இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது எனக்கு அப்படித்தான் தோன்றியது.
*‘மாமிக்கு ஊர் அரிசிப் புட்டுக்கு, நல்லெண்ணையில் வதக்கிய கத்தரிக்காய் பொரியல் வேண்டும். பொரியலுக்கு மட்டுவில் வெள்ளைக் கத்தரிக்காய் தோதுப்படாது’
*‘ஒரு வாய்க்குள் அடங்கக்கூடிய இனிப்பான சின்னச்சின்ன மோதகங்கள் அவை, பொரித்த மோதகங்கள் ஒவ்வொன்றாக வாய்க்குள் சங்கமமாகிக் கொண்டிருந்தன’
*வீரசிங்கத்தார் சாமான் வாங்குவது ஒரு தனிக்கலை. கத்தரிக்காயென்றால் ஊதா நிற லெபனீஸ் கத்தரிக்காய், கிறீஸ்லாந்து பால் வெண்டி, வியட்நாம் கட்டைப் பாவற்காய், இலங்கை பச்சை மிளகாய், கோயம்பத்தூர் உலாந்தா முருங்கை, பிஜி நாட்டு புடலங்காய் என அவரது காய்கறிப் பட்டியல் கோளமயமாகும்.
*இந்த மனுஷன் மூண்டு நேரமும் லெபனீஸ் ‘ஷவர்மா’ சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏத்திக் கொண்டு வரப்போகுது’ – என பணி நிமித்தம் மூன்று ஆண்டுகள் லெபனான் செல்லும் வீரசிங்கத்தைப் பற்றி அவரது மனைவி கொள்ளும் கவலை.
இப்படி புத்தகத்தில் ஏராளமான ருசிகரத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
காலம் செதுக்கிய சிற்பி தாமரைச் செல்வி. வன்னி மண் கடைந்தெடுத்துத் தந்த காலத்தின் கண்ணாடி. அவர் கடதாசிக்காலத்திலும், கணனிக்காலத்திலும் வன்னியின் வாழ்வைச் செவ்வனே செதுக்கும் கைதேர்ந்த கதைச்சிற்பி என அறியப்படுபவர். வன்னியின் போருக்கு முன் – போர் காலம் – போருக்குப் பின் – என்ற பெரு மாற்றங்கள் நிகழ்ந்த முக்கிய காலகட்டத்தின் தவிர்க்க முடியாத இலக்கியப் பிரதிநிதி.
வயலும் வாழ்வும்; காடும் களனியும்; உழைப்பும் உறுதியும்; தன்மானமும் அடங்காத் தன்மையும்; வன்னி மண்ணின் தனித்துவமான அழகு. அது யுத்தத்திற்கு முன்பும்; யுத்த காலத்தின் போதும்; யுத்தத்தின் பின்பும்; எவ்வாறாகத் தன்னை அடையாளப்படுத்தியதோடு தக்கவைத்தும் கொண்டிருந்தது; இருக்கிறது என்பதை இவரது படைப்புகளை மாத்திரம் பார்க்கும் ஒருவர், நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் சலிக்காத வகையிலும் கலைத்துவத்தோடு உணர்ந்து கொள்ளலாம்.
அவை கதைப்புலங்களைக் கொண்டிருந்தாலும் ஆவணத்தன்மை கொண்ட வரலாற்றுத் தார்ப்பரியங்களை உள்ளே கொண்டுள்ளவை. அதன் வழியே தாமரைச்செல்வி ஒரு ’காலச் சிற்பி.’ காலத்தை மொழியால் செதுக்கியவர். அவைகளை வாசிப்பது என்பது இருந்த இடத்தில் இருந்த படி காலங்களைக் கடக்கும் ஒரு பயண அனுபவம்.
அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் இன்று வெளிச்சத்திற்கு வருகிறது போருக்குப் பின்பான ‘படகு மனிதர்’ வாழ்வு சொல்லும் ’உயிர்வாசம்.’
இந் நாவல், ஊர்வாழ்வில் இருந்து தப்புதலும் மண்ணை இழத்தலின் வலிகளும், படகுப்பயண அனுபவங்களும் பயங்கரங்களும், புதியநாட்டின் வரவேற்புகளும் இங்குள்ள நிலைகளும் எனப் பயணித்தலின் வழி அகதி மாந்தர்களின் ஒரு புதிய வாழ்வியல் நெருக்கடிகளை பதிவு செய்கிறது. அவர்கள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தோடு கப்பல் ஏறிய சமான்யர். அந்த அபாயகரமான கடல் பயணத்தில் மாண்டு போனவர்கள் போக, உயிர் தப்பியவர்கள் வந்துவிட்டோம் என்று மூச்சுவாங்க முடியாமல் ‘எண்ணைக்குத் தப்பி நெருப்புக்குள் விழுந்த கதையாக’ ஆகிப்போன நிலையினை சொல்லுமிடங்கள் மிகுந்த வலி மிக்கவை; தமிழுக்குப் புதிதானவை; மேலும், ஏனைய தமிழர்கள் அனுபவிக்காதவையும் கூட. இவர்களின் அனுபவங்கள் ஈழ/ புகலிட தமிழ் இலக்கியத்திற்குக் கிட்டிய புது வரவு; புது வெளிச்சம்; புதுப் பார்வை என்று துணிந்து கூறலாம்.