[ கறுப்பு ஜூலை 1983 நினைவாக பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்த வ.ந.கிரிதரனின் நாவலான ‘அமெரிக்கா: சுவர்களுக்கப்பால்..” இன் அத்தியாயம் மூன்று: சூறாவளி, அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு, அத்தியாயம் ஐந்து: இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து…… ஆகிய அத்தியாயங்கள் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இவ்வத்தியாயங்கள் 1983 ஜூலைக் கலவர நிகழ்வுகளை விபரிக்கின்றன. இவை உண்மை நிகழ்வுகள். – ஆசிரியர் -]
அத்தியாயம் மூன்று: சூறாவளி!…
ஆழ்ந்த தூக்கத்திலுருந்த இளங்கோ மீண்டும் கண் விழித்தபோது இன்னும் பொழுது புலர்ந்திருக்கவில்லை. எல்லோரும் இன்னும் தத்தமது படுக்கைகளில் தூக்கத்திலாழ்ந்து கிடந்தார்கள். அவனுக்குச் சிறிது வியப்பாகவிருந்தது: ‘இதுவென்ன வழக்கத்திற்கு மாறாக.. நித்திரையே ஒழுங்காக வர மாட்டேனென்று முரண்டு பிடிக்கிறது…’ அன்று நண்பகல் அவனுக்கு அத்தடுப்பு முகாம் சிறைவாசத்திலிருந்து விடுதலை. அந்த விடுதலை அவன் ஆழ்மனதிலேற்படுத்திய பாதிப்புகளின் விளைவா அவனது தூக்கமின்மைக்குக் காரணம்? இருக்கலாம். சுதந்திரத்தின் ஆனந்தமே அற்புதம்தான். கட்டுக்களை மீறுவதிலிருக்கும் இன்பமே தனி. மீண்டுமொருமுறை அவனது பார்வை அனைத்துப் பக்கங்களையும் ஒருகணம் நோக்கித் திரும்பியது. விடிவுக்கு முன் தோன்றுமொரு அமைதியில் அப் பொழுது ஆழ்ந்திருப்பதாகப் பட்டது. சிறைப் பாதுகாவலர்களும் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிறிது நேரம்தான் பொழுது விடிந்து விடும். நகரின் பரபரப்பில் இன்னுமொரு நாள்மலர் முகிழ்த்து விடும். அதன்பின் அவனது வாழ்க்கையும் இன்னுமொரு தளத்துக்குத் தள்ளப்பட்டு விடும். அத்தளத்தில் அவனை எதிர்பார்த்து இன்னும் எத்தனையெத்தனை சம்பவங்கள், சூழல்கள் காத்துக் கிடக்கின்றனவோ? இருப்பை எப்பொழுதும் உற்சாகத்துடனும், உறுதியுடனும் ஏற்கும் உள உறுதியிருக்கும் வரையில் அவன் எதற்குமே அஞ்சத் தேவையில்லை. மிதிபட மிதிபட மீண்டும் மீண்டும் மிடுக்குடனெழும் புல்லினிதழாக அவன் எப்பொழுதும் எழுந்து கொண்டேயிருப்பான். விடிவை வரவேற்பதில் எப்பொழுதுமே தயங்காத புள்ளினம் போல விடிவுப் பண் பாடிக்கொண்டேயிருப்பான். ஒரு சில மாதங்களில்தான் அவனது இருப்பு எவ்விதம் தலைகீழாக மாறி விட்டது? அரசத் திணைக்களமொன்றில் உயர் பதவி வகித்துக் கொண்டிருந்தவனைச் சூழல் இன்று அந்நிய மண்ணின் சிறைக் கைதியாகத் தள்ளி விட்டிருந்தது. அவனது சிந்தனையில் 1983 கலவர நினைவுகள் சிறிது நேரம் நிழலாடின. அவனும், அவனது நண்பனும் அன்று தப்பியதை இன்று நினைக்கும் பொழுதும் ஆச்சரியமாகத்தானிருக்கிறது.
Continue Reading →