என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் இருபத்தி ஏழு
அவர்களின் அறைக்கு நகர்ந்து சென்று நோட்டமிட்டபோது அவர்களின் குறட்டைச் சத்தம் கேட்டது. எனவே மெல்ல அடிமேல் அடி வைத்து பத்திரமாகப் படிக்கட்டில் இறங்கினேன். மொத்த வீடும் நிசப்தமாக இருந்தது. ஒரு சிறு சத்தம் கூட கேட்கவில்லை. உணவருந்தும் அறையின் சின்ன சந்து வழியாக நுழைந்து பார்த்தபோது சடலம் வைத்திருக்கும் அறையில் பாதுகாவலாக இருந்த மனிதர்கள் அனைவரும் அவரவர் இருக்கைகளிலேயே தூக்கத்தால் ஊசலாடிக் கொண்டிருந்தார்கள். சவம் வைக்கப்பட்டுள்ள முன்னறையிலிருந்து வெளியே வராந்தாவுக்குச் செல்லும் கதவு திறந்திருந்தது. ஒவ்வொரு அறையிலும் ஒரு மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கதவின் வழியே புகுந்து வராந்தாவுக்குள் நுழைத்தேன். அங்கேயும் யாருமில்லை. பீட்டரின் மிச்சம் மட்டுமே இருந்தது. அதையும் தாண்டி வாசலுக்குச் செல்லும் முன்புறக் கதவு பூட்டியிருந்தது. அதனின் சாவியும் அங்கே இல்லை.
அந்த சமயத்தில் யாரோ என் பின்புறமுள்ள படிக்கட்டுகளில் இறங்கிவரும் சத்தம் கேட்டது. அங்குமிங்குமாக ஓடி நான் ஒளிந்து கொள்ள இடம் தேடியபோது முன்னறையில் சவப்பெட்டி அருகே மட்டுமே கொஞ்சம் இடம் இருந்தது. அந்தப் பெட்டியின் மேல்மூடி ஒருக்களித்துத் திறந்தவாறு இருந்ததால், ஈரத்துணியால் மூடி வைத்திருக்கும் இறந்த மனிதனின் முகத்தையும், அவன் மேல் மூடப்பட்டிருந்த சவச்சீலையையும் என்னால் நன்கு காண முடிந்தது. காசு மூட்டையை சவத்தின் கைகள் குறுக்காக வைக்கப்பட்டுள்ள பகுதியின் மேல் மூடியினுள் செருகி வைத்தேன். அந்தக் கரங்கள் மிகவும் குளிர்ந்தாக இருந்து என்னையும் உறைய வைத்தது. பின்னர் அறையின் குறுக்காக ஓடிச்சென்று கதவின் பின் மறைந்து கொண்டேன்.
படிக்கட்டுகளில் மேரிஜேன் இறங்கி வந்துகொண்டிருந்தாள். சவப்பெட்டி அருகே மெதுவாகச் சென்று, மண்டியிட்டு, உள்ளே பார்த்தாள். பின்னர் தனது கைக்குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவள் கண்ணீர்
சிந்திக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அவளின் பின்புறமாக நான் நின்றிருந்ததால், அவளின் அழுகைச் சத்தம் எனக்கு கேட்கவில்லை. எனது மறைவிடத்திலிருந்து நான் வெளியே வந்தேன். உணவருந்தும் அறையைத் தாண்டிச் செல்கையில் சவப்பெட்டி அருகே இருந்த இரண்டு ஆண்களும் என்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். அந்தச் சந்து வழியாக அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று நோக்கினேன். யாரும் அசையக் கூட இல்லை.