மகாகவி பாரதியின் ஞானகுரு அல்வாய் அருளம்பலம் சாமி அவர்கள் தோன்றிய இலங்கையின் வடபுலத்தில் அல்வாய் பிரதேசம், பல கலை, இலக்கியவாதிகளையும் தமிழ் அறிஞர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவ்வூரிலிருந்து 2007 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் வெளிவரத்தொடங்கிய ஜீவநதி கலை, இலக்கிய மாத இதழ் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தனது 136 ஆவது இதழை ஆண்டுமலராக வெளிக்கொணர்ந்துள்ளது. இதன் ஆசிரியர் கலாமணி பரணீதரன் ஈழத்து இலக்கிய உலகில் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர். யாழ்குடா நாட்டிலிருந்து மறுமலர்ச்சி முதல் மல்லிகை வரையில் பல இதழ்கள் தோன்றி காலப்போக்கில் மறைந்துவிட்ட சூழலில் அங்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஜீவநதியாக ஊற்றெடுத்து வந்தது இந்த இதழ். இலங்கையில் நீடித்த போர்க்காலம் முடிவுறாத காலப்பகுதியில் வடக்கிலிருந்து வெளிவரத்தொடங்கிய ஜீவநதி, ஈழத்து சிற்றிதழ் இலக்கிய வரலாற்றில் கூடுதலான சிறப்பிதழ்களை வெளியிட்டிருக்கும் பெருமையும் பெற்றது. கடந்த பதின்மூன்று ஆண்டுகளுக்குள் இருபது சிறப்பிதழ்களையாவது ஜீவநதி வெளியிட்டிருக்கும் என்பது எமது கணிப்பு. ஜீவநதி அவுஸ்திரேலியா – கனடா சிறப்பிதழ்களையும் முன்னர் வெளியிட்டு இந்த நாடுகளிலிருந்து எழுதிவரும் படைப்பாளிகளையும் ஊக்கிவித்துள்ளது. அத்துடன் சில ஈழத்து இலக்கிய ஆளுமைகளின் வரிசையில் எழுத்தாளர்கள் கே.எஸ். சிவகுமாரன், க. சட்டநாதன், செங்கைஆழியான், தெணியான், குழந்தை சண்முகலிங்கம் ஆகியோரை கௌரவிக்கும் வகையிலும் சிறப்பிதழ்களையும் வெளியிட்டிருக்கிறது. இவை தவிர, பெண்கள் சிறப்பிதழ் , கவிதைச் சிறப்பிதழ் , உளவியல் சிறப்பிதழ் , இளம் எழுத்தாளர்கள் சிறப்பிதழ் , சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ் , மலையக சிறப்பிதழ் , திருகோணமலை சிறப்பிதழ் , ஈழம்- கவிதை சிறப்பிதழ் , ஈழத்து பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழ், சிறுவர் இலக்கிய சிறப்பிதழ், ஈழம் ஹைக்கூ கவிதைச் சிறப்பிதழ் முதலானவற்றையும் வெளியிட்டுள்ளது.
இயற்கை அற்புதமானது, இயற்கை புதிரானது என்று இயற்கையை வர்ணித்த எமக்கு இன்று இயற்கை இரக்கமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பலியாக்கிக் கொண்டிருப்பது மனவேதனையை அழிக்கின்றது. கொரானாவின் இந்தக் கொடுமையான தாக்கத்தினால் உலகமே துயரத்தால் உறைந்து போயுள்ளது.
லண்டன் வைத்தியசாலைகளில் தமது மிகுந்த அர்ப்பணிப்போடு உன்னத பணிபுரிகின்ற வைத்தியர்களையும், தாதிமார்களையும், பணியாளர்களையும், வயது வந்தவர்களையும், பெண்களைவிட கூடுதலாக ஆண்களையும், குறிப்பாக ஆசிய மக்களையும், ஆபிரிக்கர்களையும் இந்தக் கொரோனாவைரஸ் உயிர்ப்பலியாக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய துயரத்தில் மூழ்கித்; தமது ஆதங்கங்களை வெளிப்படுத்த முடியாது துவண்டுபோய் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த வேளை ஆத்மவெளியில் தன் கலைப்பயணத்தை முன்னெடுத்து வந்து ஈழத்துக் கலைஞனின் வாழ்வையும் இது பறித்துவிட்டதாக அறிந்து அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனேன்.
ஈழத்தில் யாழ் தெல்லிப்பளையில் கலைக்குடும்பத்;தில் பிறந்தவர் மறைந்த பிரபல மிருதங்க வித்துவான் ஆனந்தநடேசன். இவரின் தந்தை கந்தையா ஓவியராகவும் ஆசிரியராகவும், தாயார் இராசமலர் மகாஜனாக் கல்லூரியின் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்கள். ஏப்ரல் 16ஆம் திகதி அவரது சுவாசக் காற்றைக் கொரோனா நிறுத்திய கொடூர செய்தி எம் நெஞ்சை அதிரவைத்தது. குறிப்பாக அவர் ஸ்தாபித்துவந்த ‘ஆனந்தாலயா மிருதங்கப் பள்ளியில்’ அவரிடம் மிருதங்கக் கலையைப் பயின்ற மாணவர்களைக் குமுற வைத்தது. அன்பும் அரவணைப்பும் ஆத்மார்த்தமான கருணையின் வடிவில் பயணிக்கும் அருமையான ஆசான் அவர்.

சுஜாதாவின் எழுத்துக்களில் நான் ஈர்க்கப் பட்டது அவரது துப்பறியும் கதைகள் மூலமே.அவரது கணேஸ் வசந் எனும் பாத்திரங்களின் படைப்பு நாம் அவர்களுடன் பயணிக்கும் அனுபவத்தை நம் முன் கொண்டு வந்து நிறுத்தும் .
அனேகமாக அவரது துப்பறியும் புனைவுகள் முழுவதையும் வாசித்திருக்கிறேன் எப்போதும் பி டி சாமி முதல் ராஜேஸ்குமார் என நீளும் அத்தகைய நாவல்களில் மூழ்கிப் போனது ஒரு காலம்.மூதூர் பட்டினசபை நூலகத்தில் இந்த வகை நாவல்கள் நிறையவே இருந்தன.சுஜாதா எனக்கு அறிமுகமானது “கரையெல்லாம் செண்பகப் பூ ” மூலமே.ஆனந்த விகடனில் அந்த நாவல் வந்த போது பாக்கியராசா அண்ணன் அந்த நாளில் ஆனந்த விகடனை எங்களூரில் கிரமமாக எடுக்கும் தீவிர வாசிப்பாளர்.அவர் வாசிப்புக்கு எல்லையே கிடையாது. கரையெல்லாம் செண்பகப்பூ இப்போது நினைத்தாலும் அந்த வாசிப்பின் நினைவாய் நீள்கிறது.
தமிழ் நாட்டு வார சஞ்சிகைகள் அவர் கதைகளால் நிறைந்து கிடந்தன கடைசி வரை அவர் ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக பலவற்றை எழுதி வந்தார். எனக்கு எழுத்தின் மூலம் அறிமுகமானது போலவே அவர் எழுத்தால் என் மகளும் ஈர்க்கப் பட்டாள் அவரது விஞ்ஞான அறிவியல் சார்ந்த எழுத்துக்கள் அவளுக்கு பிடித்துப் போனது.
அத்தியாயம் இருபத்தி ஒன்று
என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
சூரியன் உதித்து வெகு நேரம் ஆகி விட்டது. ஆனால் இன்னமும் தோணியைக் கரையில் கட்டாது அப்படியே அது போன போக்கிலேயே நதியில் மிதந்து கொண்டிருந்தோம். ராஜாவும், பிரபுவும் காலை கண்விழித்த பிறகும் இரவு குடித்த மதுவின் போதையால் தள்ளாடிக் கொண்டே இருந்தனர். ஆயினும் தோணியிலிருந்து நதியில் குதித்து நல்லதாக ஒரு நீச்சல் போட்டபிறகு அவர்களின் போதை தெளிந்து உற்சாகமாகி விட்டார்கள். காலை உணவிற்குப் பிறகு தோணியின் ஒரு மூலையில் அமர்ந்த ராஜா அவரின் கால் பூட்சுகளை கழற்றினார். கால் சாராயின் கால் பகுதிகளை முட்டிவரை உயர்த்தி விட்டுக்கொண்டு கால்களை நீரில் தொங்க விட்டு வசதியாக அமர்ந்தார்.
பின்னர் புகை பிடிக்கும் குழாயில் புகையிலை அடக்கிப் பற்றவைத்து புகை இழுத்துக் கொண்டே ரோமியோ ஜூலியட் நாடகத்தின் வரிகளை மனப்பாடம் செய்தார். அவர் அவ்வாறு செய்து முடித்தவுடன் ராஜாவும், பிரபுவும் ஒன்று சேர்ந்து அந்தக் காட்சிகளைப் பயிற்சி செய்து பார்த்தனர். பிரபுவானவர் ஒவ்வொரு வரியையும் எவ்வாறு பேசவேண்டும் என்று ராஜாவுக்கு சொல்லித் தர வேண்டியிருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு தனது கரத்தை தன் நெஞ்சில் வைத்துக் கொண்ட பிரபு சிறிது நேரம் கழித்து ராஜா நன்கு நடிக்கிறார் என்றார்.
“இருந்தாலும்” அவர் கூறினார் “எருமை மாடு அல்லது அதைப் போன்றதொரு மிருகம் கத்துவது மாதிரி “ரோமியோ” என்று கத்திக் கூப்பிடக்கூடாது. மிக மென்மையாக, இனிமையாக நீங்கள் மயங்கி விழும்போது சக்தியில்லாது மெதுவாகச் சத்தமிடுவதைப் போன்று ரோ ..மி ….யோ…. என்று அழைக்க வேண்டும். இப்படி, இப்படித்தான் கூப்பிடவேண்டும். ஜூலியட் என்பவள் ஒரு அழகான மருளும் மான்குட்டியாக இருக்கவேண்டும். கழுதை மாதிரி அவள் கனைக்கக் கூடாது.”
அடுத்ததாக அவர்கள் இரண்டு நீண்ட மரப்பட்டைகளால் செய்யப்பட்ட வாள்களை எடுத்துக் கொண்டார்கள். அதை வைத்து கத்திச் சண்டை பயிற்சி செய்தார்கள். அந்தச் சண்டை முழுக்க பிரபு தன்னை மூன்றாம் ரிச்சர்ட் என்று கூறிக் கொண்டார். அவர்கள் இருவரும் தோணியின் இந்தப் புறம், அந்தப் புறம் என மாறி மாறி குதித்து தங்களின் வாள்களைச் சுழற்றியது பார்க்க மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே, ராஜா கால்தடுக்கி நதியினுள் விழுந்து விட்டார். எனவே, அதன் பிறகு அவர்கள் அதை நிறுத்திவிட்டு, ஓய்வாக அமர்ந்து தங்கள் வாழ்வில் நதியின் மேல்புறப் பகுதியிலும் கீழ்புறப் பகுதியிலும் தாங்கள் வாழும்போது எதிர்கொண்ட விதவிதமான சாகசங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.


இன்று மே மாதம் 01 ஆம் திகதி. உலகத்தொழிலாளர் தினம்! உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்ற கோஷத்துடன் எமது தாயகம் இலங்கையில், தொழிலாளர்கள் ஒன்றுபடாமல், பிளவுபட்டு, ஏழெட்டு ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடத்தும் நாள். கொரொனா வந்து அந்தத் தொழிலாளர்களையும் ஒன்றுபடவிடாமல் தடுத்து வீடுகளில் முடங்கியிருக்கச் செய்துள்ளது. ஒரு காலத்தில் தந்தை செல்வநாயகமும் பிரதமர் பண்டாரநாயக்காவும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக பண்டா – செல்வா ஒப்பந்தம் என்ற இன்றும் வரலாற்றில் பேசப்படும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டபோது ஜே.ஆர். ஜெயவர்த்தனா அதனை எதிர்த்து பிக்குகளையும் அழைத்துக்கொண்டு, கண்டி தலதா மாளிகை நோக்கி பாதயாத்திரையை ஆரம்பித்தார். அக்காலப்பகுதியில் நடந்த மேதின ஊர்வலங்களில் அவருடைய யூ. என். பி. கட்சியினர் “ பண்டாரநாயகம் – செல்வநாயகம் …. ஐயா…. தோசே மசாலவடே “ என்று இனவாதம் கக்கி கோஷம் எழுப்பிச்சென்றனர். அந்த ஒப்பந்தம் பின்னர் கிழித்தெறியப்பட்டது. ஆனால், பண்டாரநாயக்காவும் செல்வநாயகமும் தமது காணிகளை பூர்வீக சொத்துக்களாக ஒரே வீதியில் முன்னர் வைத்திருந்தனர் என்ற செய்தி யாருக்காவது தெரியுமா..?
அந்த வீதிக்குப்பெயர்தான் பண்டாரநாயக்கா மாவத்தை!
அண்மைக்காலமாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் நெருக்கடியை ஏற்படுத்தியதனால், நாடாளுமன்றமும் இயங்காமல் முடங்கியிருப்பதுடன், தலைநகரத்தில் பல பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை அறிவோம். கொழும்பில் உயர் நீதிமன்றம் உட்பட மேலும் சில நீதிமன்றங்கள் அமைந்துள்ள பிரதேசம் உட்பட அதற்கு அண்மித்த பண்டாரநாயக்கா மாவத்தையிலிருந்த ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பு தரப்பினர், அழைத்துச்சென்று முல்லைத்தீவில் தனிமைப்படுத்தி தடுத்து வைத்துள்ளனர். அவ்வாறு அங்கு சென்றவர்களில் எனது உறவினர்கள், நண்பர்கள் பலரும் அடங்கியுள்ளனர். ஒரு காலத்தில் தட்டாரத்தெரு என அழைக்கப்பட்ட இந்தப்பிரதேசத்தில் தமிழ் – முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இந்தப்பிரதேசத்திற்கும் எனக்கும் நீண்டகாலமாக நெருக்கமான உறவு நிலைத்திருக்கிறது. அதனால், அவ்வாறு முல்லைத்தீவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட எனது சித்தப்பாவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் தொடர்புகொண்டு உரையாடினேன். தம்மை முகாமில் தடுத்துவைத்து நன்கு பராமரிப்பதாகவும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி படுக்கை தரப்பட்டு தினமும் மூன்று வேளையும் மருத்துவர்களும் தாதியர்களும் சிகிச்சை தந்து கண்காணிப்பதாகவும் தெரிவித்தனர்.
நான் எனது பத்து வயதிலிருந்து வ.ந.கிரிதரன் என்னும் பெயரில் எழுதிக்கொண்டு வருகின்றேன். ஆங்கிலத்தில் V.N.Giritharan என்று எழுதிக்கொண்டு வருகின்றேன். என் நூல்கள் தமிழகத்திலும் 1996இல் வ.ந.கிரிதரன் என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியாகியுள்ளன. இந்நிலையில் தமிழகத்திலுள்ள மணிமேகலை பதிப்பகம் வி.என்.கிரிதரன் என்னும் பெயரில் இன்னுமோர் எழுத்தாளரின் நூலை வெளியிட்டுள்ளது. இத்தனைக்கும் மணிமேகலை பிரசுர உரிமையாளர் ரவி தமிழ்வாணனுக்கு என் பெயர் தெரியாதென்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் பல வருடங்களுக்கு முன்னர் அவர் பதிவுகளுக்கு அவரது புத்தக வெளியீடுகள் சம்பந்தமாகக் கடிதமொன்று அனுப்பியிருந்தார். ஆனால் அவர் V.N கிரிதரன் என்னும் பெயரில் எதற்காக இன்னுமொருவரின் நூலை வெளியிட்டார்? அவ்விதம் V.N.கிரிதரன் என்று எழுதியவர் எதற்காக அப்பெயரில் எழுதினார்? அதிலுள்ள வி என்பது அவரது தந்தையையோஅல்லது அவரது பிறந்த ஊரையோ குறிக்கின்றதா? இவ்விதமாக ஏற்கனவே எழுத்தாளர் ஒருவர் அப்பெயரில் எழுதிக்கொண்டிருந்தால் நூலொன்றினை வெளியிடுபவர் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக அப்பெயரில் வேறோர் எழுத்தாளரின் நூலினை வெளியிடுவதைத்தவிர்க்க வேண்டும். ஆனால் ரவி தமிழ்வாணம் தவிர்க்கவில்லை.
நான் குறிப்பிடும் புத்தகத்தின் பெயர்: முத்தமிழில் நல்முத்துக்கள் ; எழுதியவர்கள்: V.N.கிரிதரன் & S.N.கிருஷ்ணமூர்த்தி ; வெளியிட்டவர்கள்: மணிமேகலை பதிப்பகத்தினர்.
எழுத்தாளர் தமயந்தி (தமயந்தி சைமன்) பல்கலை வித்தகர். எழுத்து, நடிப்பு, புகைப்படம் & காணொளி என இவரது ஆற்றல் பன்முகப்பட்டது, இவர் முகநூலில் பகிர்ந்துகொண்ட காணொளிகள், ஓவியங்கள் பலவற்றை மறக்கவே முடியாது, அவற்றுக்காக அவர் பல சமயங்களில் மணிக்கணக்காகக் காத்துக்கிடப்பதுமுண்டு.
ஒருமுறை இரவு முழுக்கக் காத்திருந்து தவளைகளின் சங்கீதக் கச்சேரியைக் கேட்பதற்காக எடுத்துப் பதிவு செய்திருந்த காணொளியை என்னால் மறக்கவே முடியாது. ஒரு காலத்தில் மழைக்கால இரவுகளில் , ஓட்டுக்கூரைகளில் பட்டுச் சடசடக்கும் மழையொலிகளூடே வயற்புறங்களிலிருந்து ஒலிக்கும் தவளைக்கச்சேரிகளை இரசிப்பதில் பெரு விருப்புடைய எனக்கு பல வருடங்களுக்குப் பின்னர் அவ்விதம் தவளைகளின் கச்சேரியினை இரசிக்கும் சந்தர்ப்பத்தையேற்படுத்தித்தந்த காணொளி அது.
இங்குள்ள புகைப்படத்தைப்பாருங்கள். எவ்வளவு அற்புதமாகக் காட்சியைக் கமராவுக்குள் கலைத்துவத்துடன் கொண்டு வந்திருக்கின்றார். நம்மத்தியில் இவ்விதமான கலைஞரொருவர் வாழ்கின்றாரென்பதையிட்டு நாம் நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.