சினிமாக்கள் மனித வாழ்வோடு ஐக்கியமான ஒரு ஊடகமாகும். பொழுதுபோக்கிற்காக சினிமாவைப் பார்ப்பதாக பலர் கூறினாலும் சினிமாவில் சில யதார்த்தங்களும், சில யதார்த்த மின்மைகளும் காணப்படுவது கண்கூடு. வாழ்க்கையில் நடக்கின்ற சிலதையும், நடக்க வேண்டும் என்ற சிலதையும், நடக்கவே முடியாத சிலதையும் கூட திரைப்படங்கள் வாயிலாக நாம் கண்டுகளித்து வருகின்றோம்.
சினிமாக்களைப் பார்ப்பது அன்றைய காலத்தில் மிகப் பெரிய சாதனையாக இருந்து வந்தது. அதாவது ஊருக்கே ஒரு திரையரங்கு.. அதில் திரைப்படக் காட்சிகள்! இன்று ஒவ்வொரு வீட்டிலும் சினிமாக்களைப் பார்க்கக் கூடிய சூழ்நிலை தோன்றியிருக்கின்றது. இறுவட்டுக்களாகட்டும், யூடியூப்களில் ஆகட்டும், ஆன்லைனிலாகட்டும், கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகளாகட்டும் சினிமாக்களை நாம் விரும்பிய வகைகளில் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
பொதுவாக சினமா என்று தமிழ்பேசும் மக்களிடம் சொன்னால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது இந்திய சினிமாக்கள்தான். இந்திய சினிமாக்கள் தொழில்நுட்ப ரீதியில் பல மைல் தூரம் சென்றுவிடடதாலும், காட்சி அமைப்புக்களில் காணப்படும் வசீகரத் தன்மையினாலும் இவ்வாறாதோர் பிம்பம் தோற்றுவிக்கப் பட்டுள்ளது. அதையும் தாண்டி நல்ல சினிமாக்கள் நம் இலங்கை தேசத்திலும் வெளி;வந்து கொண்டிருக்கின்றன. இலங்கையில் தற்போது தயாரிக்கப்படும் திரைப்படங்கள் முன்னைய நிலைகளிலிருந்து மாறுபட்டு புதிய வீச்சுடன் வெளியிடப்படுவது கண்கூடு. ஆனால் வெளிநாட்டுத் திரைப்படங்கள் மிகச் சிறப்பான கதையம்சம் கொண்டவைகளாக காணப்படுகின்றமை பலரும் அறியாத ஒரு விடயமாகும்.
இந்த வகையில் தான் ரசித்த அனைத்து தர சினிமாக்கள் பற்றிய பதிவுகளாகத்தான் கே.எஸ் சிவகுமாரனின் இத்தொகுப்பு 36 தலைப்புக்களில் 136பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.-
சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் நம் வாழ்வோடு ஒன்றியவை. எம்மால் கூற முடியாதவற்றை ஒரு கலைஞன் தன் கலைப் படைப்புகளினூடாக வெளிப்படுத்தும்போது அதை நாம் ரசிக்கின்றோம். தமக்கு ஏற்படும் இன்னல்களை எப்படி சமாளிக்கின்றார்கள்? அவர்கள் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுகின்றார்கள் போன்றவற்றை நாம் அறிவதற்கு ஆவலாக இருப்பதால் சினிமாக்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாக நாம் ஏன் திரைப்படம் பார்க்கிறோம் (பக்கம் 01) இல் நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார்.