வாசிப்பும், யோசிப்பும் 184 : தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ பற்றிச்சில வார்த்தைகள்….

வாசிப்பும், யோசிப்பும் 183 : தமிழ்நதியின் 'பார்த்தீனியம்' பற்றிச்சில வார்த்தைகள்.... - வ.ந.கிரிதரன் -அண்மையில் வெளியான தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நாவலின் முதற்கட்ட வாசிப்பின்போது அதன் வெளியீட்டு விழாவில் ஜான் மாஸ்ட்டர் கூறிய கருத்தொன்று ஞாபகத்துக்கு வந்தது. அவர் இதனை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒரு காதல் கதையாகவும் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார். உண்மையில் எனக்கு வித்தியாசமான காதற்கதையாகத்தான் நாவலில் விபரிக்கப்பட்டிருந்த காதற்கதையும் தென்பட்டது.

நாவலின் பிரதான பாத்திரமான புலிகள் இயக்கத்தில் பரணி என்றழைக்கப்படும் போராளிக்கும், வானதி என்னும் பெண்ணுக்குமிடையிலான காதல் வாழ்வின் தொடக்கத்தில் அவன் இயக்கத்தில் சேர்ந்து , இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் செல்கின்றான். செல்லும்போது ‘எனக்காகக் காத்து நிற்பீர்களா?’ என்று கேட்கின்றான். இவளும் அவனுக்காகக் காத்து நிற்பதாக உறுதியளிக்கின்றாள். அவ்விதமே நிற்கவும் செய்கின்றாள். இது உண்மையில் எனக்கு மிகுந்த வியப்பினைத்தந்தது. சொந்த பந்தங்களை, பந்த பாசங்களையெல்லாம் விட்டு விட்டு இயக்கத்துக்குச் செல்லும் ஒரு போராளி தான் விரும்பியவளிடம் தனக்காகக் காத்து நிற்க முடியுமா என்று கேட்கின்றான். போராட்ட வாழ்வில் என்னவெல்லாமோ நடக்கலாம், நிச்சயமற்ற இருப்பில் அமையப்போகும் வாழ்வில் இணையப்போகுமொருவன் தன் குடும்பத்தவர்களை விட்டுப் பிரிவதைப்போல, தன் காதலுக்குரியவளையும் விட்டுப்பிரிவதுதான் பொதுவான வழக்கம். ஆனால் இங்கு நாவலில் தன் வாழ்க்கையையே விடுதலைக்காக அர்ப்பணிக்கப்போகும் ஒருவன் , ஏதோ வெளிநாட்டுக்கு வேலை பெற்றுச்செல்லும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியிடம் கேட்பதுபோல் கேட்டு உறுதிமொழி பெற்று விட்டுச் செல்கின்றான். இது நாவலின் புனைவுக்காக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். உண்மையில் அவ்விதமான சூழலில் பிரியும் ஒருவன் தான் விரும்பும் ஒருத்தியைப் பார்த்து தன் எதிர்காலம் நிச்சயமற்றிருப்பதால், மீண்டும் வந்தால் , இலட்சியக்கனவுகள் நிறைவேறினால் , மீண்டும் இணையலாம் அல்லது அவள் தனக்காகக் காத்து நின்று வாழ்வினை வீணாக்கக் கூடாதென்று அறிவுரை செய்திருக்கத்தான் அதிகமான வாய்ப்புகளுள்ளன. போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளச் சென்றுவிட்ட அவனுக்காக அவளும் கனவுகளுடன் மீண்டும் இணைவதையெண்ணிக் காத்திருக்கின்றாள். இவ்விதமாக நகரும் வாழ்வில் அவள் யாழ் பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் செல்கின்றாள்.

நாட்டின் அரசியல் சூழல் மாறுகின்றது.  அமைதி காக்கும் படையினர் என்ற போர்வையில் இந்தியா தன் படைகளை இலங்கைக்கு அனுப்புகின்றது. அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அமைதிப்படைக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையிலான மோதல்கள், அக்காலகட்டத்தில் நடைபெற்ற ஏனைய இயக்கங்களுக்கும் , புலிகளுக்குமிடையிலான மோதல்கள் (வடக்கில் நிகழ்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனான  மோதல்கள், வன்னியில் நிகழ்ந்த தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகத்துடனான மோதல்கள்) விடுதலைப்புலிகளின் பார்வையில் விபரிக்கப்படுகின்றன.  அக்காலகட்டத்தில் நடைபெற்ற இந்திய அமைதிப்படையினர் புரிந்த படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் போன்றவற்றைப்பற்றி நாவல் எடுத்துரைக்கின்றது. மோதல்களினால், சிங்கள இனவாதிகளின் தாக்குதல்களினால் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்லும் வானதியின் குடும்பத்தினரின் நிலையும் நாவலில் விபரிக்கப்படுகின்றது.

Continue Reading →

பிரதேச மொழி வழக்கில் பேசி நடித்து அசத்திய மரைக்கார் ராமதாஸ் மறைந்தார்! இலங்கை கலையுலகின் மைந்தனுக்கு நினைவஞ்சலிப்பகிர்வு!

மரிக்கார் ராமதாஸ்பட்டி  தொட்டி  எங்கும்  ஒலித்த ”  அடி   என்னடி  ராக்கம்மா  பல்லாக்கு நெளிப்பு ”  பாடல்  இடம்பெற்ற  பட்டிக்காடா  பட்டணமா  படமும்  அவ்வாறே  அன்றைய  ரசிகர்களிடம்  நல்ல  வரவேற்பு  பெற்றது. 1972  இல்  வெளிவந்த   இந்தப்படத்தில்  இன்றைய  முதல்வர் ஜெயலலிதாவுடன்  சிவாஜி   நடித்தார்.   அடங்காத  மனைவிக்கும் செல்வச்செருக்கு  மிக்க  மாமியாருக்கும்  சவால்விடும்  நாயகன்,  தனது   முறைப்பெண்ணை  அழைத்து  பாடும்  இந்தப்பாடல் அந்நாளைய    குத்துப்பாட்டு  ரசிகர்களுக்கு  விருந்து  படைத்தது. விமர்சன    ரீதியாகப்பார்த்தால்  அந்தப்படமும்  பாடலும் பெண்ணடிமைத்தனத்தையே   சித்திரித்தது. மக்களிடம்   பிரபல்யம்  பெற்றதால்,   இலங்கையில்  சிங்கள சினிமாவுக்கும்  வந்தது.   இன்னிசை   இரவுகளில்  இடம்பெற்றது.    அதே இசையில்  ஒரு  பாடலை   எழுதிப்பாடிய   இலங்கைக்கலைஞர் ராமதாஸ்   தமிழ்நாட்டில்  மறைந்தார்.

” அடி  என்னடி  சித்தி  பீபீ ”  என்று  தொடங்கும்  அந்தப்பாடலின் சொந்தக்காரர்   ராமதாஸ்,  இலங்கையில்  புகழ்பூத்த  கலைஞராவார். மரைக்கார்   ராமதாஸ்  என  அழைக்கப்பட்ட  இவர்  பிறப்பால் பிராமணர். ஆனால்,  அவர்  புகழடைந்தது  மரைக்கார்  என்ற இஸ்லாமியப்பெயரினால்.   சென்னையில்  மறைந்துவிட்டார்  என்ற  தகவலை  சிட்னி தாயகம்   வானொலி  ஊடகவியலாளர்  நண்பர்  எழில்வேந்தன் சொல்லித்தான்   தெரிந்துகொண்டேன்.   கடந்த  சில  வருடங்களாக உடல்நலக்குறைவுடன்   இருந்ததாகவும்  அறிந்தேன்.

1970    காலப்பகுதியில்  இலங்கை  வானொலி  நாடகங்களிலும்  மேடை  நாடகங்களிலும்  தோன்றி  அசத்தியிருக்கும்  ராமதாஸ்,   குத்துவிளக்கு உட்பட   தமிழ்,   சிங்களப் படங்களிலும்  நடித்தவர்.   பாலச்சந்தரின்  தொலைக்காட்சி   நாடகத்திலும்  இடம்பெற்றவர். கோமாளிகள்   கும்மாளம்   நகைச்சுவைத்  தொடர்  நாடகத்தைக் கேட்பதற்காகவே    தமிழ்  நேயர்கள்  நேரம்  ஒதுக்கிவைத்த  காலம் இருந்தது.   அதற்குக்  கிடைத்த  அமோக  வரவேற்பினால்  அதனைத் திரைப்படமாக்குவதற்கும்    ராமதாஸ்  தீர்மானித்தார். வானொலி  நாடகத்தில்  பங்கேற்ற  அப்புக்குட்டி  ராஜகோபால்,   உபாலி   செல்வசேகரன்,   அய்யர்  அப்துல்ஹமீட்  ஆகியோருடன் மரைக்கார்   ராமதாஸ்  வயிறு  குலுங்க  சிரிக்கவைத்த  தொடர்நாடகம்    கோமாளிகள் கும்மாளம். நான்குவிதமான   மொழி  உச்சரிப்பில்  இந்தப்பாத்திரங்கள் பேசியதனாலும்    இந்நாடகத்திற்கு  தனி  வரவேற்பு  நீடித்தது. திரைப்படத்தை    தயாரிக்க  முன்வந்தவர்  முஹம்மட்  என்ற  வர்த்தகர். திரைப்படத்திற்காக   ஒரு  காதல்  கதையையும்   இணைத்து , காதலர்களை   ஒன்றுசேர்ப்பதற்கு  உதவும்  குடும்ப  நண்பர்களாக மரைக்காரும்   அப்புக்குட்டியும்  அய்யரும்  உபாலியும்  வருவார்கள். இந்தப் பாத்திரங்களுக்குரிய   வசனங்களை  ராமதாஸே  எழுதினார். காதலர்களாக    சில்லையூர்  செல்வராசன் –  கமலினி  நடித்தார்கள். நீர்கொழும்பு – கொழும்பு   வீதியில்  வத்தளையில்  அமைந்த ஆடம்பரமான   மாளிகையின்   சொந்தக்காரராக  ஜவாஹர்  நடித்தார். அதற்கு    கோமாளிகை  என்றும்  பெயர்சூட்டினார்  ராமதாஸ்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 183: மணி வேலுப்பிள்ளையின் ‘மொழியினால் அமைந்த வீடு’

மணி வேலுப்பிள்ளைஎழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான மணி வேலுப்பிள்ளை தற்போது டொராண்டோவில் வசித்து வருகின்றார். எழுத்தாளர் மணி வேலுப்பிள்ளை நல்லதொரு மொழிபெயர்ப்பாளரும், கட்டுரையாளருமாவார். சிலிய ஜனாதிபதி அலந்தே, டெங் சியாவோ பிங், அம்மாவின் காதலன் மாயாகோவஸ்கி மற்றும் ரோசா லக்சம்பேர்க் போன்ற கட்டுரைகளும், தமிழ் மொழிபெயர்ப்பு (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு..) பற்றிய மொழிபெயரியல்பு, மொழியினால் அமைந்த வீடு, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு, விபுலானந்த அடிகளின் கலைச்சொல்லாக்க வழிமுறைகள் போன்ற கட்டுரைகள் அதனையே வெளிப்படுத்துகின்றன.


மொழிபெயர்ப்பாளர்கள் பலர் மொழிபெயர்ப்புகளுடன் நின்று விடுகையில், இவர் மொழிபெயர்ப்பு பற்றிய ஆழமான கட்டுரைகளைத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இவை படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பும் எழுத்தாளர்களுக்கு பயன் மிக்க ஆலோசனைகளை வழங்குகின்றன.


ஆழமான கட்டுரைகளைச் சுவையாக எழுதுவதில் வல்லவர் இவர். உதாரணத்துக்கு ‘மொழியினால் அமைந்த வீடு’ கட்டுரை கீழுள்ளவாறு முடிவதைப்பாருங்கள்:


“உள்ளதை உள்ளபடி உரைப்பதற்கு மொழி ஒரு போதும் தடையாய் இருக்கப் போவதில்லை. உள்ளதை உள்ளபடி உரைக்க முற்படாதவர்களுக்கே மொழி தடங்கல் விளைவிக்கும். ஆதலால்தான் ஆட்சியாளரும், அரசியல்வாதிகளும் , விமர்சகர்களும், அவர்களுக்கு உடந்தையாய் விளங்கும் செய்திமான்களும் மொழியைத் திரித்து வருகின்றார்கள். மொழித் திரிபுவாதிகள் கட்டியெழுப்பிய வீட்டிலேயே பரந்துபட்ட பாமர மக்கள் வாடகைக் குடிகளாய் வாழ்ந்து வருகின்றார்கள்.”

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 182: தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நாவல் வெளியீட்டு நிகழ்வு குறித்து…

நாவல்: பார்த்தீனியம்தமிழ்நதிதமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நூல் வெளியீடு சென்றிருந்தேன், கனடாத்தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தரப்பினரையும் காண முடிந்தது. நிகழ்வுக்குத் தலைமை தாங்கவென்று யாருமில்லை. இதற்கொரு காரணத்தைத்தனது ஏற்புரை/நன்றியுரையில் தமிழ்நதி தெரிவித்தார். அதாவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வுகளை ஆண்கள் ஆக்கிரமித்திருப்பார்கள். அதற்குப் பதிலாகவே தனது நூல் வெளியீடு எந்தவிதத்தலைமையுமற்று நடை[பெற்றதாக என்று. தலைமையில்லாத நிகழ்வினைச் சிறப்பாக்குவதற்காகத் தன்னுடன் இணைந்த தனது சிறு வயதுத்தோழியர்களிலொருவரான அன்பு-அன்பு நன்கு செயற்பட்டதாகக்குறிப்பிட்டார். ஏன் பெண் ஆளுமையொருவரின் தலைமையில் நிகழ்வினை நடாத்தியிருக்கக் கூடாது என்ற எண்ணம் ஏற்படுவதைத்தவிர்க்க முடியவில்லை. வழக்கமாக ஆண்களின் தலைமையில் நிகழ்வுகள் நடைபெறுவதால், பெண்களுக்குரிய இடம் கிடைக்கவில்லையென்று கருதும் தமிழ்நதி பெண்களின் தலைமையில் நிகழ்வினை நடத்த வந்த வாய்ப்பினைத் தவற விட்டுவிட்டாரே?

நிகழ்வு நடைபெற்ற மத்திய ஸ்கார்பரோ சமூக நிலையம் கலை, இலக்கிய ஆர்வலர்களால் நிரம்பி வழிந்தது.  எழுத்தாளர்களான அ.யேசுராசா, கவிஞர் கந்தவனம், கற்சுறா, ரதன், மா.சித்திவிநாயகம், வல்வை சகாறா, கவிஞர் அவ்வை, எஸ்.கே.விக்கினேஸ்வரன், கவிஞர் அ.கந்தசாமி, குரு அரவிந்தன் தம்பதியினர், முனைவர் பார்வதி கந்தசாமி, டானியல் ஜீவா, தீவகம் வே.ராஜலிங்கம், ந.முரளிதரன், தேவகாந்தன், பிரதிதீபா தில்லைநாதன் சகோதரிகள்,..,.. என்று பலரைக் காண முடிந்தது.

நிகழ்வில் ஜான் மாஸ்ட்டர், பொன்னையா விவேகானந்தன், முனைவர் அ.ராமசாமி, முனைவர் இ.பாலசுந்தரம், அருண்மொழிவர்மன், தமிழ்நதியின் தோழி அன்பு, தமிழ்நதி ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியினை எழுத்தாளர் கந்தசாமி கங்காதரன் தொகுத்து வழங்கினார்.

பொன்னையா விவேகானந்தன் நல்லதொரு பேச்சாளர். தமிழ்நதி கவிஞர் கலைவாணி ராஜகுமாரனாக அறியப்பட்ட காலகட்டத்திலிருந்து தான் அறிந்த கவிஞரின் கவிதைகளை உதாரணங்களாக்கித் தன் உரையினை ஆற்றித் தமிழ்நதி பற்றிய நல்லதோர் அறிமுகத்தை வழங்கினார். அவர் தனதுரையில் ‘கவிஞர்கள் சிலரே மெட்டுக்குப் பாடல்களையும், நல்ல கவிதைகளையும் எழுத வல்லவர்கள். அவ்வகையான கவிஞர்கள் கவிஞர் சேரனும், கலைவாணி ராஜகுமாரனுமே’ என்னும் கருத்துப்பட தன் கருத்துகளைத்தெரிவித்தார். அத்துடன் ஆரம்பத்தில் கலைவாணி ராஜகுமாரன் தேசியம் சார்ந்தவராக இருந்த காரணத்தால் ஏனைய இலக்கியவாதிகள் பலரால் புறக்கணிக்கப்பட்டதாகவும் குறைப்பட்டுக்கொண்டார்.

Continue Reading →

பெருமாள் முருகனும் மாதொருபாகனும்: படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்திற்கு சாவு மணி அடிக்கும் இந்துத்துவா பிற்போக்குவாதிகள்

எழுத்தாளர் முருகபூபதி– தமிழ்நாட்டில் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் நாவலின் தடையை  உயர் நீதிமன்றம்  நீக்கியுள்ளது. மாதொரு பாகனுக்கு மாத்திரமின்றி  கருத்துச்சுதந்திரத்திற்கும் கிடைத்த வெற்றி இது. தடை அழுத்தத்தினால்  தான் மரணித்துவிட்டதாகச்சொன்ன பெருமாள்முருகன் ஊரைவிட்டும்  சென்றார். இனி அவர் உயிர்த்தெழும் காலம்  கனிந்துள்ளது. இந்நாவல்    மீதான சர்ச்சை வெளியானபொழுது நான் எழுதிய நீண்ட கட்டுரையை மீண்டும் இங்கு பதிவு செய்கின்றேன். இதனை எழுதியபின்னர்தான்   மாதொருபாகன்   நாவல்  படிக்கும் சந்தர்ப்பம்  எனக்குக்கிடைத்தது.  -(முருகபூபதி –


சில    வருடங்களுக்கு  முன்னர்  தமிழ்நாட்டில்  மனோன்மணியம் சுந்தரனார்    பல்கலைக்கழகத்தில்  பாட  நூலாகவிருந்த  செல்வராஜ் எழுதிய  ஒரு  சிறுகதைத்தொகுப்பிலிருந்து  நோன்பு  என்ற சிறுகதையை    நீக்கவேண்டும்  என்று  இந்துத்துவா  அமைப்புகள் போராடின. சிறிது   காலத்தில்  மற்றும்  ஒரு  தமிழக  பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின்   சாபவிமோசனம்  சிறுகதையை  நீக்கவேண்டும் என்று  குரல்  எழுப்பியது. இலங்கையில்  வடபகுதியில்  உயர்வகுப்புகளில்  நாவல்  இலக்கிய வரிசையில்   இணைத்துக்கொள்ளப்பட்ட  மூத்த  எழுத்தாளர் செ.கணேசலிங்கன்    எழுதிய   முதலாவது  நாவல்  நீண்ட பயணம் நூலை   தவிர்த்துக்கொள்வதற்கு  மேட்டுக்குடியினர்   மந்திராலோசனை   நடத்துவதாக  அண்மையில்  ஒரு  தகவல் கிடைத்தது. இலங்கையின்   மூத்த  தலைமுறை    வாசகர்களுக்கு  நல்ல பரிச்சயமான   நாவல்  நீண்டபயணம்.    வடபகுதியின்  அடிநிலை மக்களின்    தர்மாவேசத்தையும்  ஆத்மக்குரலையும்  பதிவு  செய்த முக்கியமான   நாவல்.

இந்தப்பின்னணிகளுடன்    தற்பொழுது  தமிழக  இலக்கிய  உலகில் பெரும்  சர்ச்சையை   எழுப்பியிருக்கும்  பெருமாள்  முருகனின் மாதொருபாகன்  நாவலை   பார்க்கலாம். காலச்சுவடு   பதிப்பகம்  வெளியிட்டுள்ள  இந்நாவலுக்கு  எதிராக மீண்டும்    இந்துத்துவா    அமைப்பினரும்   இராமருக்கு  வக்காலத்து வாங்கும்   இராமகோபாலனும்  கோஷம்  எழுப்புகின்றனர். இராமகோபாலன்   பெருமாள்  முருகனை   அவன்…  இவன்… என்றெல்லாம்    ஒருமையில்  விளித்து  லண்டன்  பி.பி.சிக்கு பேட்டியளிக்கிறார். மதவெறியின்   உச்சம்  அவரது  குரலில்   தெரிகிறது. பகுத்தறிவுவாதம்    பேசிய  திராவிடக்கட்சிகள்  பெருமாள்  முருகன் விடயத்தில்   குரலை   தாழ்த்தியுள்ளன.   தி.முக.வுக்கும்  அண்ணா தி.மு.க.வுக்கும்   பெருமாள்முருகனைவிடவும்  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்தான்   முக்கியத்துவமானது.
விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியைச்சேர்ந்தவரும்   மணற்கேணி மற்றும்    நிறப்பிரிகை  ஆசிரியருமான  ரவிக்குமார்  மாத்திரம் பெருமாள் முருகனுக்காக   குரல் கொடுத்துள்ளார்.  இடதுசாரி மாக்ஸீயக்கட்சிகளும்   குரல்  கொடுக்கத்தொடங்கியுள்ளன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 181: பேராசிரியர் நிமால் டி சில்வாவும், ‘நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்”

பேராசிரியர் நிமால் டி சில்வாநல்லூர் ராஜதானி நகர அமைப்பு - வ.ந.கிரிதரன்மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்று கொண்டிருந்த காலத்தில் எமக்குக் கற்பித்த பேராசிரியர்களில் எப்பொழுதும் என் நினைவில் முதலில் வருபவர் பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள். இவர் சொந்தமாகக் கட்டடக்கலைஞராகத் தொழில் பார்த்து வந்த அதே சமயம் எமக்கு ‘பாரம்பர்யக் கட்டடக்கலை’ என்னும் பாடத்தினையும் எடுத்து வந்தார்.

இலங்கையின் பாரம்பரியக் கட்டடக்கலை எவ்வாறு சூழல்களுக்கேற்ற வகையில் வேறுபடுகின்றது, குறிப்பாகத்தென்னிலங்கையின் பாரம்பரியக் கட்டடக்கலை பற்றியெல்லாம் விரிவாகக் கற்பித்த அதே சமயம், மாணவர்களை அவர்கள் வாழும் பகுதிகளுக்குரிய கட்டடக்கலை பற்றிய கட்டுரைகளை எழுதும்படி ஊக்குவிப்பார். நான் யாழ்ப்பாணத்துக்குரிய பாரம்பரியக் கட்டடக்கலை பற்றி, குறிப்பாக நாற்சார வீடுகள் பற்றி, பாவிக்கப்படும் கட்டடப்பொருள்கள் பற்றி எழுதிய கட்டுரையைப் பாராட்டியது இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவர் மூலம் தாம் முதல் முறையாக ரோலன் டி சில்வாவின் பண்டைய அநுராதபுர நகரின் நகர அமைப்பு பற்றிய ஆய்வுக் கட்டுரையினை வாசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. பெளத்தர்களின் கட்டடக்கலை, நகர அமைப்பில் எவ்விதம் வட்ட வடிவம் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பதைப் புரிய வைத்த கட்டுரை அது. பண்டைய அநுராதபுர நகர அமைப்பைப்பொறுத்த வரையில் நகரின் மத்தியில் சந்தையினையும், நகரைச் சுற்றி வட்ட ஒழுங்கில் ஆங்காங்கே தாதுகோபுரங்களையும் கொண்டிருந்த நகர அமைப்பாக இருந்தது என்பதைத் தனது ஆய்வின் மூலம் எடுத்துரைத்திருப்பார் அந்தக் கட்டுரையில் ரோலன் டி சில்வா.

இந்த விடயத்தில் இந்துக்களின் நகர அமைப்பு, கட்டடக்கலை ஆகியவற்றில் சதுரம் (அல்லது செவ்வகம்) வகித்த பங்கு முக்கியமானது.

பெளத்தர்கள் வட்ட வடிவத்தையும், இந்துக்கள் சதுரத்தையும் தேர்தெடுத்ததற்கு அவர்களது சமயத்தத்துவங்கள் காரணமாக அமைந்திருந்தன. வட்ட வடிவம் இயக்கத்தை உணர்த்தும். தோற்றமும், அழிவும், இரவும், பகலும் இவ்விதமாக ஒருவித வட்ட ஒழுக்கில் நகரும் காலத்தை மேற்படி வட்டவடிவம் உணர்த்தும். மேலும் இவ்வட்ட வடிவம் நாம் வாழும் பூமிக்குரிய வடிவ இயல்பையும் குறிக்கும். பொருள் முதல்வாதக் கோட்பாட்டினை அதிகம் நம்பும் பெளத்தர்கள் வட்டவடிவத்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமானதொன்றல்ல.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 180: வாழ்த்துகிறோம் கட்டடக்கலைஞர் சிவகுமாரன் திருவம்பலத்தையும் அவர்தம் சாதனைகளையும்!

ஜூலை 6, 2016 அன்று பல வருடங்களுக்குப் பின்னர் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தில் கட்டடக்கலைஞர்கள் பலருடன் சந்தித்த கட்டடக்கலைஞர்களில் சிவா(குமாரன்) திருவம்பலமும் ஒருவர். நான் கட்டக்கலை மாணவனாக…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 180: வாழ்த்துகிறோம் கட்டடக்கலைஞர் சிவகுமாரன் திருவம்பலத்தை, அவர்தம் கட்டடக்கலைத்துறைச் சாதனைகளுக்காக!

கட்டடக்கலைஞர் சிவகுமாரன் திருவம்பலம்ஜூலை 6, 2016 அன்று பல வருடங்களுக்குப் பின்னர் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தில் கட்டடக்கலைஞர்கள் பலருடன் சந்தித்த கட்டடக்கலைஞர்களில் சிவா(குமாரன்) திருவம்பலமும் ஒருவர். நான் கட்டக்கலை மாணவனாக மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைத்தபோது மயூரதநாதன், கலா ஈஸ்வரன் இருவரும் தமது  இளமானிப்பட்டப்படிப்பை முடித்து வெளியேறியிருந்தார்கள். சிவா திருவம்பலம், ‘தமிழர் மத்தியில்’ நந்தகுமார் ஆகியோர் இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். எமக்கு மென்மையான ‘ராகிங்’ தந்தவர்களிவர்கள்.

தனது கட்டடக்கலைப் படிப்பை முடித்து வளைகுடா நாடுகளில் பணியாற்றிக் கனடா வந்து இங்குள்ள புகழ்பெற்ற கட்டடக்கலை நிறுவனங்களில் பணியாற்றி, இங்கும் , ஒண்டாரியோவில், கட்டடக்கலைஞருக்குரிய அங்கீகாரத்தைப்பெற்று தற்போது புகழ்பெற்ற கனடியக்கட்டடக்கலை நிறுவனங்களிலொன்றான Hariri Pontarini Architects இல் பணியாற்றி வரும் சிவகுமாரன் திருவம்பலத்தைப்பற்றிப் பெருமைப்படத்தக்க விடயங்கள் பல. அவற்றிலொன்று Hariri Pontarini Architects நிறுவனத்தின் கட்டடக்கலைத்திட்டங்களிலொன்றான வெஸ்டேர்ன்  பல்கலைக்கழகத்தின் வர்த்தகத்துறைக்கான கல்வி நிலையமான ரிச்சர்ட் ஐவி கட்டடத் (Richard Ivey Building) திட்டத்தில் (33,000 சதுர மீற்றர்கள் பரப்பளவைக்கொண்ட இத்திட்டம் 2013இல் முழுமை பெற்றது.) பங்குபற்றிய முக்கியமான கட்டடக்கலைஞர்களில் இவருமொருவர்.

இத்திட்டமானது சர்வதேசக்கட்டடக்கலை நிறுவனங்கள் சமர்ப்பித்த கட்டட வடிவமைப்புகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட திட்டமென்பதும் பெருமைக்குரிய விடயம்.

இது பற்றி ‘ஆர்க்டெய்லி.காம்’ (archidaily.com) பிரசுரித்துள்ள கட்டுரையொன்றில் ‘ஒரு சிறப்பான வர்த்தகத்துக்குரிய கல்வி நிலையமானது கவர்வதாக, ஆக்க எழுச்சி மிக்க உணர்வுகளை எழுப்புவதாக, மற்றும் அதனைப்பாவிக்கும் அனைவருக்கும் மத்தியில் சமூக உணர்வினை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே சர்வதேசரீதியில் பெறப்பட்ட வடிவமைப்புகளிலிருந்து ரிச்சர்ட் ஐவி கட்டட வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டது. பிரதான நோக்கமானது சர்வதேசரீதியில் இது போன்ற ஏனைய நிறுவனங்கள் விடுக்கும் சவால்களுக்கு ஈடுகட்டுவதைச் செயற்படுத்தத்தக்க சூழலை உருவாக்குவதும், பல்கலைக்கழகத்தின் கோதிக் கட்டடக்கலைப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதும், லண்டன் நகருக்கு முத்திரைபதிக்கத்தக்கக் கட்டடமொன்றினை உருவாக்குவதுமே ஆகும்’ என்று ‘த ஆர்கிடெக்ட்’ சஞ்சிகையினை ஆதாரமாக்கிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading →

சீவனப்பள்ளியின் கருஞ்சிறுத்தை பற்றிய சிறுகுறிப்பு

குரு அரவிந்தன் பிலோ இருதயநாத் எழுதிய ‘நாய் கற்பித்த பாடம்’ என்ற கட்டுரை பதிவுகளில் பதியப்பட்டிருந்ததை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. மாணவப்பருவமாக இருந்தபோது விகடன் தீபாவளி மலரில் இவரது கட்டுரைகள் அடிக்கடி வெளிவரும். மிகவும் ஆர்வத்தோடு வாசிப்பேன். பதிவுகளில் வெளிவந்த இந்தக் கட்டுரையை வாசித்த போது, இதே போலத்தான கெனத் அனடர்சனின் (Kenneth Anderson)  ‘சீவனப்பள்ளியின் கருஞ்சிறுத்தை’ என்ற நூல் பற்றிய எனது நினைவலைகளை மீண்டும் மீட்டுக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சியாக இருக்கின்றது. வேட்டையின் போது உதவியாக இருந்த நாய் குஷ்ஷி பற்றியும் கெனத் அண்டர்சனும் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார். ஆட்கொல்லியாக மாறும் விலங்குகளை மட்டுமே வேட்டையாடிய அவர், ஆட்கொல்லியாக விலங்குகள் ஏன் மாறுகின்றன என்பதைத் தெளிவாக அந்த நூலில் எடுத்துச் சொல்லியிருந்தது குறிப்பிடத் தக்கது.

மாணவப்பருவத்தில் எதையாவது வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுவதுண்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு துறைகள் சம்பந்தப்பட்ட விடையங்களில் திடீரென ஆர்வம் ஏற்படுவதுண்டு. அப்படி ஒரு நிலை எனக்கு மகாஜனாக்கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்டது. காரணம் கல்லூரியின் நூலகத்திற்குப் புதிதாக வந்த ஒரு நூல் கருஞ்சிறுத்தைகள் பற்றிய தலைப்பைக் கொண்டிருந்தது. அப்போது நூலகத்திற்குப் பொறுப்பாக இருந்த ரி. பத்மநாதன் அவர்களிடம் பதிவுக்காக நூலை நீட்டியபோது, ‘மனுசரை வாசிக்கிறதை விட்டு இப்ப விலங்குகளைப் பற்றி வாசிக்கப் போறியா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.  இயற்கைச் சூழலில் விலங்கினங்களின் வாழக்கை முறையை அவறறற்றின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக அந்தப் புத்தகம் இருந்தது.

இந்த நூலை மிகவும் சுவாரஸ்யமாக எழுதியவர் கென்னத் அன்டர்சன் என்ற எழுத்தாளர். இதைத் தமிழில் எஸ். சங்கரன் என்பவர் மொழி பெயர்த்திருந்தார். புலி என்றால் வரிகள் இருக்கும், சிறுத்தை என்றால் புள்ளிகள் இருக்கும் என்றுதான் நான் சிறுவயதில் நம்பியிருந்தேன். ஆனால் கருஞ்சிறுத்தை என்றதும் என் ஆர்வத்தை அந்து நுர்ல் தூண்டிவிட்டது. சிங்கப்பூரில் வெள்ளை நிறப் புலிகளைக் காப்பகத்தில் கண்டபோதும் எனக்கு ஆச்சரியமாகNவு இருந்தது.

Continue Reading →

எதிர்வினை: நூல் அறிமுகம்: ‘தோழர் பால’னின் ‘இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு’ பற்றி….

எழுத்தாளர் முருகபூபதிஅன்புள்ள  கிரிதரன்  அவர்கட்கு,   வாசிப்பும்  யோசிப்பும்  பத்தியில், தோழர் பாலன்  எழுதியிருக்கும்  இலங்கை  மீதான  இந்திய ஆக்கிரமிப்பு   நூல்  தொடர்பாக  உங்கள்  கருத்துக்களை   படித்தேன். இந்திய   ஆக்கிரமிப்பு  என்பது  அரசியல்  பொருளாதாரம்  மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல.   கலை,  இலக்கியம்,  திரைப்படம்  முதலான துறைகளிலும்   அந்த  ஆக்கிரமிப்பு  மற்றும்  ஒரு  அவதாரம் எடுத்திருக்கிறது.

ரோகணவிஜேவீராவின்   மக்கள்  விடுதலை  முன்னணியின் தொடக்ககால  (1970 – 1971)   வகுப்புகளில்  இந்திய  விஸ்தரிப்பு  வாதம் சொல்லப்பட்டது.   இந்திய  அமைதிப்படை    என்ற  பெயரில்  இந்திய இராணுவம்   உள்ளே  வந்தபோதும்,   அந்த  இயக்கம்  கடுமையாக எதிர்த்தது.   எனினும்  அதன்  செயல்பாடுகளில்  பல  குறைபாடுகள், தவறுகள்   இருந்தபோதிலும்  இந்திய  விஸ்தரிப்பு  வாதத்தை முன்வைத்த   முன்னோடியாக  அந்த  இயக்கம்  அமைந்திருந்தது.

புளட் இயக்கம்  வங்கம்  தந்த  பாடம்  என்ற  நூலை வெளியிட்டதன்  பின்னணியிலும்   அரசியல்  இருந்தது.   இந்திய  ஆக்கிரமிப்பு  இன்றும் தொடருகிறது.   அது  இலங்கையின்  கலை,  இலக்கிய, திரைப்படத்துறையையும்  பாதித்திருக்கிறது. யாரோ  முட்டாள்தனமாக  தாய்  நாடு  – சேய் நாடு  என்று  சொன்னதன் விளைவை   இலங்கை  இன்றும்  அனுபவிக்கிறது.

இந்திய   வணிக  இதழ்கள்  மீது  கட்டுப்பாடுகளை  விதிக்கவேண்டும் என்று   இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்  குரல் எழுப்பியபோது   அதனை  எதிர்த்து  விமர்சித்தவர்களை   நீங்களும் அறிவீர்கள். இன்றும்   இந்திய  தமிழ்   நூல்களை   இலங்கைக்கு  தாராளமாக வர்த்தகரீதியில்   இறக்குமதி  செய்யமுடியும்.   அவ்வாறு இலங்கைத் தமிழ்நூல்களை   இந்தியாவுக்கு  ஏற்றுமதி  செய்யமுடியாது. இந்தச்சட்டம்   இன்றளவும்  நடைமுறையில்  இருக்கிறது. ஆனால்,  இந்த  விவகாரம்  இன்னமும்  இந்திய  தமிழ்  ஊடகங்களுக்கும்    இந்திய  தமிழ்  எழுத்தாளர்களுக்கும்  தெரியாது. சென்னையில்   எம்மவர்கள்  தமது  நூல்களை  புத்தகச்சந்தைக்கு எடுத்துச்செல்வதற்காக   இந்திய  பதிப்பகங்களின்   தயவில்தான் வாழ்கிறார்கள்.

Continue Reading →