என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’, ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் ‘புதையல் தீவு’ என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் ‘ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் ‘பதிவுகள்’ சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். – வ.ந.கிரிதரன், ஆசிரியர் ‘பதிவுகள்’
அத்தியாயம் பதினான்கு
உறக்கம் நீங்கி கண்விழித்து எழுந்ததும், உடைந்திருந்த படகிலிருந்து நாங்கள் எடுத்து வந்திருந்த கொள்ளையர்களின் பொருட்களை ஆராய்ந்து பார்த்தோம். பூட்ஸ்கள், துணிமணிகள், புத்தகங்கள், ஒரு தொலைநோக்கிக் கண்ணாடி, மூன்று பெட்டி சிகரெட்டுகள் இன்னும் இது போன்ற எத்தனையோ பொருட்களைக் கண்டோம். நாங்கள் இருவருமே எங்கள் வாழ்க்கையில் இதுவரையில் இத்தனைப் பொருட்களுடன் பணக்காரர்களாக இருந்ததில்லை. சிகரெட்டுகள் அத்துணை அருமையாக இருந்தது. காட்டினுள் அமர்ந்து அன்று மதியம் முழுதும் நாங்கள் பேசிக் கொண்டே இருந்தோம். அந்த புத்தகங்களைப் படித்துப் பார்த்தேன். எங்களின் பொழுது நன்கு கழிந்தது.
அந்த உடைந்த படகில் நடந்த அனைத்து விஷயங்களையும் மற்றும் அந்த நீராவிப்படகு விஷயத்தையும் நான் ஜிம்மிடம் கூறினேன். இவையெல்லாம் சாகசங்கள் என்று நான் அவனுக்கு விளக்கினேன். ஆனால் அவனோ இது போன்ற சாகசங்கள் தனக்கு இனி வேண்டாம் என்று பதிலுரைத்தான். நான் திரும்ப அந்தக் கேபினுள் சென்ற பின் அவன் தவழ்ந்து தோணிக்குச் சென்றபோது, அங்கே தோணியைக் காணவில்லை என்று தெரிந்ததும், தான் இறந்தே விட்டோம் என்று நினைத்துக் கொண்டதாக ஜிம் கூறினான். எல்லாவழிகளும் அடைபட்டுத் தான் சிக்கிவிட்டதாக அவன் கருதியிருக்கிறான். யாருமே அவனைக் காப்பாற்ற இல்லையெனில் அவன் நீரில் மூழ்கி இறந்து விடுவான். ஆனால் யாராவது அவனைக் காப்பாற்றினால் அவன் ஜிம்முக்காக அறிவித்திருக்கும் பணப்பரிசுக்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுத்துவிடுவான். பின்னர் மிஸ். வாட்ஸன் அவனைத் தெற்கில் இருக்கும் யாருக்கேனும் கண்டிப்பாக நல்ல விலைக்கு விற்று விடுவாள். நல்லது. சந்தேகமில்லாமல் அப்படித்தான் நடந்திருக்கும். உண்மையில் ஜிம் நீக்ரோக்களின் மத்தியில் ஒரு சிறந்த அறிவாளிதான்.
ராஜாக்கள், ராணிகள், நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள் மற்றும் அது போன்ற பலரைப் பற்றி உள்ள கதைகளை நான் ஜிம்முக்குப் படித்துக் காட்டினேன். எப்படி ஆடம்பரமாக அவர்கள் உடை உடுத்துவார்கள், எவ்வாறு பந்தா செய்து கொள்வார்கள், எப்படி அவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் மிஸ்டர் என்று அழைப்பதற்கு பதிலாக மாண்புமிகு, கனம் பொருந்திய, கருணைப் பிரபு, எங்கள் கடவுளே என்றெல்லாம் அழைத்துக் கொண்டார்கள் என்று படித்துக் காட்டினேன். மிகவும் ஆச்சரியமடைந்த ஜிம்மின் கண்கள் விரிந்தன. அவன் சொன்னான்.”
“இத்தனை நபர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவே தெரியாது. பைபிளில் நான் படித்த ராஜா சாலமனைத் தவிர வேறு எந்த ராஜாவையும் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. அது தவிர விளையாடும் சீட்டுக்கட்டுகளில் உள்ள ராஜாக்கள் வேண்டுமானால் தெரியும். ஒரு ராஜா எத்தனை பணம் சம்பாதிப்பார்?”
“சம்பாதிப்பது?” நான் சொன்னேன் “ஏன்! அவர்கள் நினைத்தால் ஒரு மாதத்திற்கு ஆயிரம் டாலர்கள் கூட சம்பாதிக்கக் கூடும். அவர்கள் நாட்டில் உள்ளது எல்லாமே அவர்களுக்குத்தான் சொந்தம் என்பதால் இன்னும் எத்தனை பணம் வேண்டுமானாலும் அவர்கள் சம்பாதிக்கலாம்.”