தோழி
உன்னைத் தொட்டிலிலே போட்டுத்
தாலாட்டுப் பாடி தூக்கத்திலே
வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில்
உன் விழிப்பு அவசியமானதொன்றே !
சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார். கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி குணராசாவின் நூல்களை தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் குறிப்பிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையிலும் கூட சிங்கை நகர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம், மற்றும் சிங்கை நகரின் தோற்றத்திற்கான காலகட்டம் ஆகியவற்றில் மாறுபட்ட குழப்பகரமான கருத்துகளே நிலவுகின்றன. இக்கட்டுரையில் இவர்களிருவரினதும் சிங்கைநகர் பற்றிய கருதுகோள்களில் காணப்படும் வலுவிழந்த தன்மைபற்றி சிறிது ஆராய்வோம். பின்னுமோர் சமயம் இது பற்றி மேலும் விரிவாக ஆய்வோம். கலாநிதி புஷ்பரட்ணத்தின் தர்க்கத்தில் காணப்படும் முரண்பாடுகள் சிங்கை நகர் பற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் சிங்கைநகர் பற்றிய கருதுகோட்களுக்கே வலுசேர்ப்பதாக அமைகின்றன என்பது அடியேனின் நிலைப்பாடு.
நாம் வாழும் இந்த உலகம், வான், மதி, சுடர், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய நமது பிரபஞ்சம் இவை யாவுமே எப்பொழுதும் எந்நெஞ்சில் பெரும் பிரமிப்பினையும், பல்வேறு வகைப்பட்ட வினாக்களையும் ஏற்படுத்தி விடுவது வழக்கம். முப்பரிமாண உலகினுள் கைதிகளாக வளைய வந்துகொண்டிருக்கும் நாம், இம்மண்ணில் நாமே உருவாக்கிய அமைப்புகள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்குள் சிக்கி, அவற்றுக்கு ஈடுகொடுத்துத் தப்பிப் பிழைப்பதிலேயே எம் வாழ்நாளைக் கழித்து முடிந்து விடுகின்றோம். இத்தகையதொரு நிலையில் இப்பிரபஞ்சத்தின் தோற்றம், அமைப்பு, முடிவு பற்றிய வினாக்கள், அவை பற்றிய நினைவுகள், எண்ணங்கள் எல்லாமே எப்பொழுதுமே என் நெஞ்சில் ஒருவித தண்மையான உணர்வினை ஏற்படுத்தி விடுவது வழக்கம். சகல விதமான மன அழுத்தங்களிலிருந்தும் என்னை விடுபட இவை பெரிதும் உதவுகின்றன. இதற்காகவே நகரவாழ்வின், நாகரிக வாழ்வின் இறுக்கத்தினிலிருந்தும் விடுபடுவதற்காக நேரம் கிடைக்கும் போதிலெல்லாம் இரவினில் தொலைவினில் சிரிக்கும் நட்சத்திரக் கன்னியரின் கண்சிமிட்டலில், வெண்மதிப் பெண்ணின் பேரழகில் என்னை மறந்து விடுவேன்.
நவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட ‘சார்பியற் தத்துவம்’ (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள் பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின. புரட்சியென்றால் சாதாரண புரட்சியல்ல. பெளதிகத்தின் அடித்தளத்தையே அடியோடு மாற்றிவைத்த புரட்சி. இச் சார்பியற் தத்துவமும், சக்திச் சொட்டுப் பெளதிகமும் (Quantum Physics) இன்றைய நவீன பெளதிகத்தின் அடித்தளங்களாகக் கருதப்படுபவை. சார்பியற் தத்துவத்தைப் பொறுத்தவரையில் அது முழுக்க முழுக்க ஜன்ஸ்டைனின் கோட்பாடே. சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப கர்த்தாவாகவும் ஜன்ஸ்டைனையே கருதலாம். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு நோபல் பரிசு கிடைத்ததே போட்டான்கள் பற்றிய கண்டு பிடிப்பிற்காகத்தான். இக் கண்டுபிடிப்பே சக்திச் சொட்டுப் பெளதிகத்தின் ஆரம்ப வளர்ச்சியாகும். உண்மையில் ஜன்ஸ்டைனிற்கு சார்பியற் தத்துவத்திற்காகவும் இன்னுமொருமுறை நோபல் பரிசு கொடுத்திருக்க வேண்டும்.