சில தெரிவிக்கப்பட்ட வரையறைகளிலிருந்து நாம் தொடங்கலாம்.
(1) கிளாசிக்குகள் என்னும் புத்தகங்கள் பற்றி நாம் பொதுவாக மக்கள் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறோம்: “நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . .” என்று சொல்வதற்குப் பதிலாக “நான் மறுபடியும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். . . ” இது குறைந்த பட்சம் “மெத்தப் படித்தவர்கள்” என்று தங்களைக் கருதிக் கொள்பவர்களிடத்தில் நடக்கிறது. முதன் முதலாக இந்த உலகினை எதிர்கொள்ளும் நிலையிலிருக்கும் இளவயதுக்காரர்களுக்கு இது பொருந்தாது. மேலும் கிளாசிக்குகள் அவர்களின் அந்த உலகின் ஒரு பாகமாக இருக்கும். வாசித்தல் என்ற வினைச் சொல்லின் முன்னால் இடம் பெறும் அழுத்தத்திற்காக முன்னிடை வேண்டுமானால் ஒரு பிரபலமான புத்தகத்தினை படிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்வதற்கு அவமானமாக உணர்பவர்களின் பங்கில் இருக்கும் ஒரு சிறிதளவேயான பாசாங்காக இருக்கக் கூடும். அவர்களுக்கு மறுஉறுதிப்பாடளிக்க, நாம் அவதானிக்க வேண்டியது இவ்வளவுதான்: ஒரு மனிதனின் அடிப்படைப் படிப்பென்பது எந்த அளவு விரிவானதாக இருப்பினும் அவனால் படிக்கப்பட்டிராத அடிப்படைப் புத்தகங்கள் ஏராளமான எண்ணிக்கையில் இன்னும் பாக்கி இருக்கும்.