அயோத்தி நூலக சேவைகள் அமைப்பின் பின்புலம்: ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களில் நூலகங்களும் நூலகர்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்பே அயோத்தி நூலக சேவை அமைப்பாகும். (யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆனைக்கோட்டையில்,இவ்வமைப்பு கருவுற்று வளர்ச்சிகண்ட இல்லத்தின் பெயரான அயோத்தியே அவ்வமைப்பின்
பெயராகவும் வைக்கப்பட்டது). ஈழத்தின் தமிழ் நூலகவியல்துறையில் முன்னோடிகளாகவிருந்த அமரர் கலாநிதி.வே.இ.பாக்கியநாதன், அமரர் எஸ்.எம்.கமால்தீன், திரு.இ.முருகவேள் போன்றோருடைய ஆலோசனை, வழிகாட்டலுடன் 1985இல் அயோத்தி நூலகசேவைகள் அமைப்பு, யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டு நிறுவன நூலகராகவிருந்த என்.செல்வராஜா அவர்களால் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நூலகவியல் கல்வியை தமிழில் பரவலாக்குவதும், நூலியல் அறிவை தமிழரிடையே விஞ்ஞானபூர்வமாகவும், நடைமுறைச் சாத்தியமான வழிகளிலும் எடுத்துச்செல்வதுமாகும்.