[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்]
11-ம் அத்தியாயம்: சுந்தரேஸ்வரர் சந்நிதியில்
பத்மா நீச்சல் ராணிப் போட்டியில் கலந்து கொண்டது பற்றி பரமானந்தர் எவ்விதக் கவலையோ கோபமோ கொள்ளாதபடி ஸ்ரீதரும் சுரேசும் பார்த்துக் கொண்டனர். ஸ்ரீதர் பத்மாவை அன்று வழக்கத்துக்கு மாறாகத் தனது ‘பிளிமத்’ காரில் கொலீஜ் ரோட்டிலுள்ள அவள் வீட்டிலேயே கொண்டு போய் இறங்கி விட்டான். பரமானந்தர் கூட அன்று தான் அவன் காரை முதன் முதல் பார்த்தார். சிவநேசரின் மகன் என்பதை மூடு மந்திரமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் முற்றிலும் தீர்ந்து விட்டதும், பத்மாவுக்கும் தனக்குமுள்ள காதல், திருமணக் கட்டத்தை அடைந்து விட்டது, இனி யாருக்கும் தான் அஞ்சாமல் காரியங்களைச் செய்யலாம் என்று அவன் நம்பியதுமே அவன் இவ்வாறு பகிரங்கமாகத் தன் படாடோபக் காரில் பத்மா வீட்டுக்குப் போகும் துணிவைப் பெற ஏதுவாயிருந்தது. பத்மா – ஸ்ரீதர் திருமணத்தை விரைவில் செய்து முடிக்க இன்னும் ஒரே ஒரு நடவடிக்கைதான் எடுக்கப்பட வேண்டியிருந்தது. தந்தை சிவநேசரதும் தாய் பாக்கியத்தினதும் ஆசியைப் பெறுவதே அது. ஸ்ரீதருக்கு அது மிகவும் அற்ப விஷயமாகவே பட்டது.