– சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதை –
நிவேதாவிற்கு, எப்படியிருக்கிறாய் போன்ற சம்பிரதாயமான வார்த்தைகள் கொண்டு இதனை ஆரம்பிக்கமுடியவில்லை. உனக்கென எழுதும் இக்கடிதம் உன்னைச் சேரும் வாய்ப்புக்களற்றது. எனினும் மிகுந்த பேராசையுடனும் ஏதோ ஒரு நம்பிக்கையுடனும் இதனை எழுத வேண்டியிருக்கிறது. இதை எழுதும் இக்கணத்தினாலான என் மனநிலையை என்னால் உனக்கான இவ்வெழுத்தில் வடிக்க முடியவில்லை. ஆனால் ஏதேனும் உனக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் மட்டும் உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கிறது. எழுத்தின் முதுகினில் அத்தனை பாரங்களையும் இறக்கிவைக்க வேண்டுமெனவும் தோன்றுகிறது. எத்தனையோ எழுதுகிறேன்.ஆனால் உனக்கு எழுத முடியவில்லை. முடியவில்லை என்பதனை விடவும் இயலவில்லை என்ற சொல்லே சாலச் சிறந்தது. பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு இதே நாளில்தான் நாம் பிரிந்தோம். இப்பொழுது நீ எங்கே, எப்படியிருக்கிறாயெனத் தெரியவில்லை. ஆனால் எப்பொழுதுமே என் மனதின் மையப்புள்ளியில் சிம்மாசனமிட்டு உட்காந்தவாறு என்னை ஆண்டுகொண்டே இருக்கிறாய் இன்னும்.