(87) – நினைவுகளின் சுவட்டில்
இல்லஸ்ட்ரேட்டட் வீகலி ஆஃப் இந்தியா எனக்குப் பரிச்சயம் ஆகி நான் படிக்கத் தொடங்கியபோது சி.ஆர்.மண்டி என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். பொதுவான அரசியல் சமூகம் பற்றிய கட்டுரைகளும் அது சம்பந்தமான படங்கள் நிறைந்தும் அதில் இருந்தன. அது போக, இந்தியாவில் அப்போது தெரியவந்த ஓவியர்களின் ஓவியங்களூம் அவ்வப்போது முழுப்பக்க அளவில் அதில் வந்தன. அது மாத்திரமல்ல.இன்னம் இரண்டு விஷயங்கள் வீக்லியை ஒரு பகுதி மக்களின் அபிமான பத்திரிகையாகவும் ஆக்கின. ஒன்று அதில் அந்தக் காலத்து ஆனந்த விகடனில் வந்து கொண்டிருந்த ,கல்கிக்குப் பிடிக்காது போய் பிரச்சினைக்கு காரணமாகிய குறுக்கெழுத்துப் போட்டி போன்ற (Crossword Puzzle) சமாசாரமும் வீக்லியில் வந்து கொண்டிருந்தது. இரண்டாவது ஒவ்வொரு வாரமும் ஒரு பக்கம் முழுவதும் பிரசுரமான புதுமணத் தம்பதிகளின் படங்கள். தம்பதிகளின் பெயர்களுடன். இது இப்போது பைத்தியக் காரத்தனமாகத் தோன்றலாம். ஆனால் அன்று இது மிகுந்த வரவேற்பைப் பெற்றதாக இருந்திருக்க வேண்டும்..