12-ம் அத்தியாயம்: மொட்டைக் கடிதம்
பத்மாவின் தோழி தங்கமணியை நாம் ஏற்கனவே பம்பலப்பிட்டி எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரிலும், பல்கலைக் கழகத்துக்கு முன்னாலிருக்கும் நிழல் படர்ந்த பஸ் தரிப்பிலும், பல்கலைக் கழக இரசாயன ஆய்வு கூடத்திலும் சந்தித்திருக்கிறோம். இன்று வத்தளையிலுள்ள அவள் வீட்டில் அவளைச் சந்தித்து வருவோமா? தங்கமணி வசித்த வீடு வத்தளை மெயின் வீதியில் பஸ்தரிப்புக்குச் சமீபமாக அமைந்திருந்தது. அவள் அவ்வீட்டில் தன் தாய், தந்தையருடன் வசித்து வந்தாள். அவளது ஒரே தம்பியான சிங்காரவேல் வவுனியாக் கச்சேரியில் இலிகிதனாகக் கடமையாற்றினான். அப்பா கொழும்பில் ஏதோ கம்பெனியில் வேலை. வீட்டில் அம்மாவைத் தவிர, பேச்சுத் துணைக்கு ரெஜினா இருந்தாள். ரெஜினா கொழும்பில் ஒரு வியாபாரத் தலத்தில் சுருக்கெழுத்து – தட்டெழுத்து வேலை செய்பவள். தங்கமணி வீட்டில் பணம் செலுத்தி “போர்டராக” இருந்தாள். ரெஜினாவுக்கும் தங்கமணிக்கும் நல்ல சிநேகிதம். பொழுது போகாத நேரங்களில் பேசிக் கொண்டிருப்பதற்கும் விடுமுறைத் தினங்களில் சினிமாவுக்குப் போய் வருவதற்கும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தார்கள்.